சுருங்கிய வேளாண் பரப்பு-அரிசி உற்பத்தி பாதிப்பு

தமிழகத்தில் வேளாண் சாகுபடி பரப்பளவு குறைந்ததையடுத்து, மாநிலத்தின் அரிசி தேவையை பூர்த்தி செய்ய வெளி மாநிலங்களை சார்ந்திருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
சுருங்கிய வேளாண் பரப்பு-அரிசி உற்பத்தி பாதிப்பு
x
ஒரு கோடியே 30 லட்சம் ஹெக்டேர் நிலப்பரப்பு கொண்ட தமிழகத்தில் 78 லட்சம் ஹெக்டேரில் விவசாயம் நடைபெற்று வந்தது. ஆனால் வேளாண்  சாகுபடி பரப்பளவு 37 லட்சம் ஹெக்டேராக குறைந்துள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. தண்ணீர் பற்றாக்குறை, ஆற்று நீர் மாசு, ரியல் எஸ்டேட் மோகம், ஆகியவற்றின் காரணமாக தரிசு நிலங்களில் பரப்பளவு 30 லட்சம் ஹெக்டேராக அதிகரித்துள்ளது. தமிழகத்தின் அரிசி தேவை ஆண்டுக்கு 91 லட்சம் டன்னாக அதிகரித்துள்ள நிலையில், 35 லட்சம் டன் அரிசியை ஆந்திரா, கர்நாடகா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து இறக்குமதி நிலை ஏற்பட்டுள்ளது. தமிழகத்தின் நெல் தேவை ஒரு கோடியே 25 லட்சம் டன்னாக உள்ள நிலையில், 80 லட்சம் டன் மட்டுமே விளைவதாக வேளாண் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

ரசாயன உர பயன்பாடு, ஆலைக்கழிவுகள் கலத்தல் ஆகியற்றால் 22 லட்சம் ஹெக்டேர் வேளாண் நிலம் பாழ்பட்ட நிலமாக மாற்றம் அடைந்துள்ளதாக கோவை வேளாண் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. அதேபோல் தமிழகத்தில் 4 ஆயிரம் வகையான பாரம்பரிய நெல் ரகங்கள் இருந்த நிலையில், 180 ரகங்கள் மட்டுமே அதில் மிஞ்சியுள்ளதாக நெல் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். கிராமப்புறத்தில் வாழ்பவர்களின் சதவீதம் 75 சதவீதத்தில் இருந்து 48 சதவீதமாக சரிவடைந்ததே வேளாண் சாகுபடி வீழ்ச்சிக்கு முக்கிய காரணமாக கூறும் வேளாண் அறிஞர்கள், அதனை மீட்டெடுக்க நீர் மேலாண்மையை முறைப்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்