4 வயது சிறுமி பலாத்காரம் வழக்கு : முன்னாள் ராணுவ வீரர் புழல் சிறையில் அடைப்பு
சென்னையை அடுத்த ஆவடி அருகே 4 வயது சிறுமியை பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் ஓய்வுபெற்ற இராணுவ வீரர் மற்றும் உடந்தையாக இருந்த அவரது மனைவியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
நீங்கள் பார்க்கும் இந்த காட்சியானது அசுரவதம் என்ற திரைப்படம் தான். மளிகைக் கடைக்கு பொருள் வாங்க வந்த ஒரு சிறுமியை கடைக்காரர், பாலியல் வன்முறை செய்து கோணிப்பையில் கட்டி துடிக்க துடிக்க கொலை செய்து குளத்தில் வீசி விடுவார். இந்த சம்பவத்தை போலவே மனதை உருக்கும் வகையில் நிஜத்திலும் ஒரு சம்பவம் சென்னையில் அரங்கேறியுள்ளது. ஆவடி அருகே உள்ள திருமுல்லைவாயலை சேர்ந்த தம்பதிக்கு ஒரு மகனும் 4 வயதில் ஒரு மகளும் இருந்தனர். 4 வயதில் உள்ள சிறுமி அந்த பகுதியில் உள்ள பள்ளியில் எல்கேஜி படித்து வந்தார்
சம்பவத்தன்று டியூஷனில் இருந்த தன் மகனை அழைத்து வருவதற்காக தாய் தன் மகளை வீட்டிலேயே விட்டு விட்டு சென்றுள்ளார். திரும்பி வந்து பார்த்தபோது வீட்டில் இருந்த தன் மகளை காணாமல் அதிர்ச்சியடைந்தார். அக்கம் பக்கம் எல்லாம் தேடி அலைந்த அந்த தாய், காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
அப்போது போலீசார் வீட்டுக்கு வந்து பார்த்த போது, வீட்டின் குளியலறையில் உள்ள ஒரு பக்கெட்டில் சிறுமியின் சடலம் இருந்தது. ஒரு கோணிப்பையில் சிறுமியின் உடல் தலைகீழாக வைத்த நிலையில் இருந்ததை கண்டு அங்கிருந்த அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். சிறுமியின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்திய போது, அவரின் பிறப்புறுப்பில் காயம் இருந்தது தெரியவந்தது. இதனால் சந்தேகமடைந்த போலீசார், அருகில் இருந்தவர்களிடம் விசாரணையை தீவிரப்படுத்தினர். அப்போது தான், அவர்களின் பக்கத்து வீட்டை சேர்ந்த ஓய்வு பெற்ற ராணுவ வீரர் மீனாட்சி சுந்தரம் சிறுமியை கொலை செய்ததை ஒப்புக் கொண்டார்.
60 வயதான மீனாட்சி சுந்தரத்திடம் அந்த சிறுமி அன்பாக பழகி வந்துள்ளார். தூரத்து உறவினர் என்பதால் அவரை தாத்தா தாத்தா என அந்த சிறுமி அழைத்து வந்துள்ளார். இந்த நிலையில் தான் சம்பவத்தன்று சிறுமி வீட்டில் இருப்பதை அறிந்து கொண்ட மீனாட்சி சுந்தரம், அவரை தன் வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு சென்ற அவர், சிறுமியை பலவந்தப்படுத்தி பாலியல் வன்முறை செய்துள்ளார். இதில் சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து அவரின் உடலை கோணிப்பையில் கட்டி சிறுமியின் வீட்டில் உள்ள குளியலறையில் கொண்டு போய் வைத்துவிட்டு ஒன்றும் தெரியாதது போல இருந்துள்ளார். ஆனால் மீனாட்சி சுந்தரத்தின் படுக்கையில் இருந்த சிறுமியின் முடி மற்றும் அவரது உடைந்த வளையல்கள் தான் அவரை காட்டிக் கொடுத்தது.
இதையடுத்து மீனாட்சி சுந்தரத்தை கைது செய்த போலீசார், அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். குறும்புத் தனமாய் சுற்றித் திரிந்த சிறுமியை கொடூரமாக கொலை செய்த அவருக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டுள்ளது.
Next Story