சிறு நகரமாகவே நீடிக்கும் நாகர்கோவில் மாநகராட்சி... தரம் உயர்த்தப்பட்டும் மாறாத மாநகரம்
கன்னியாகுமரி மாவட்டத்தின், நாகர்கோவில் கடந்த பிப்ரவரி மாதம் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டத்தின், நாகர்கோவில் கடந்த பிப்ரவரி மாதம் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. ஆனால் மாற்றம் பெயரளவுக்குத்தான் என்றும், நகரத்தின் அடிப்படை வசதிகள் எதுவும் மேம்படவில்லை என்றும் கூறப்படுகிறது.
கன்னியாகுமரி மாவட்டத்தின் தலைநகரான நாகர்கோவில், கடந்த பிப்ரவரி மாதம் 52 வார்டுகளை கொண்ட மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. ஆனால் இதர மாநகரங்களில் உள்ள அளவுக்கு இங்கு மக்கள் தொகை இல்லை என்றும், மாற்றம் பெயரளவுக்குத்தான் என்றும் மக்கள் கூறுகின்றனர். மாநகராட்சியாக தரம் உயர்ந்த பின்னும், சிறு நகரத்தில் சாயலிலேயே நகரம் உள்ளதாக மாநகர மக்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர். தொழில் வளர்ச்சி, உள்கட்டமைப்பு மற்றும் போக்குவரத்து நெரிசலை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் மக்கள் முன்வைக்கின்றனர்.
2012 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட பாதாள சாக்கடை திட்டம், தற்போது வரை முழுமை பெறவில்லை. இதற்காக தோண்டப்பட்ட குழிகள் சரியாக மூடாததால், முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக மக்கள் கூறுகின்றனர். திருநெல்வேலி- திருவனந்தபுரம் புறவழிச்சாலை திட்டம் 10 ஆண்டுகளாக நடந்து வருவதால், நகரின் பிரதான சாலைகளை வழியாகவே அனைத்து வாகனங்களும் செல்கின்றன. அதனால் எந்நேரமும் போக்குவரத்து நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. நாகர்கோவில் மாநகரம்...
வீடுகளின் கழிவு நீரை மக்கள் பல ஆண்டுகளாகவே ஆறுகளிலும், கால்வாய்களிலும் விட்டு வருவதால் அதை தடுக்க திட்டங்கள் உருவாக்கவில்லை. அதற்கு உதாரணமாக கிருஷ்ணன்கோயில் பகுதியில் உள்ள சுப்பையார்குளத்தைச் சொல்லலாம். 15 ஆண்டுகளுக்கு முன் வரை மக்கள் பயன்படுத்தி வந்த அந்த குளம், முறையான பராமரிப்பு இன்றி தற்போது சாக்கடை குளமாக மாறி சுகாதார சீர்கேட்டை உருவாக்கி வருகிறது. நகர மக்களின் குடிநீர் தேவைகளை நிறைவேற்றி வந்த முக்கடல் அணை, பேச்சிப்பாறை அணைகளில் தற்போது நீர் இருப்பு இல்லை என்பதால் நகரத்தில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பல பகுதிகளுக்கு 20 நாட்களுக்கு ஒரு முறைதான் தண்ணீர் கிடைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
புறநகரப் பகுதியான பறக்கின்கால், 20 ஆண்டுகளாக எந்த அடிப்படை வசதிகளும் இல்லாத பகுதியாகவே நீடித்து வருகிறது. குடிநீர், சாலை, தெருவிளக்கு, சுகாதாரம் போன்ற அடிப்படை தேவைகள் அடியோடு மறுக்கப்பட்டதாக அப்பகுதி மக்கள் புகார் கூறுகின்றனர். தற்போதைய நிலையில் நாகர்கோவில் மாநகராட்சி அடிப்படை வசதிகள் இல்லாத நகரமாகவே நீடித்து வருகிறது. மத்திய மாநில அரசுகள் அதிக நிதி ஒதுக்கீடு செய்து அடிப்படை வசதிகளை மேம்படுத்தினால் மட்டுமே மாநாகராட்சியாக அடையாளம் பெறும் என்பது மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
Next Story