இலவச கட்டாய கல்வி சட்டம் - தனியார் பள்ளியில் மாணவர்களுக்கான அரசு நிதி குறைப்பு

தனியார் பள்ளியில் இலவச கட்டாயக் கல்வி சட்டத்தின் கீழ் படிக்கும் மாணவர்களுக்கு அரசு சார்பில் வழங்கப்படும் நிதியை குறைத்து பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
x
தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் இலவச கட்டாயக் கல்வி உரிமைச்சட்டத்தின் கீழ், 25 சதவீத இட ஒதுக்கீட்டில் மாணவர்கள் சேர்க்கப்பட்டு வருகின்றனர். ஆண்டுதோறும் ஒரு லட்சம் மாணவர்கள் இந்த ஒதுக்கீட்டில் சேர்ந்து வருகின்றனர். அரசு நிர்ணயித்த கல்விக் கட்டணம் அல்லது அரசுப் பள்ளியில் படிக்கும் ஒரு மாணவருக்கு செலவிடும் தொகையின் அடிப்படையில், தொகை நிர்ணயம் செய்யப்பட்டு தனியார் பள்ளிகளுக்கு வழங்கப்படுகிறது. அதன்படி, 2016-17 ஆம் கல்வியாண்டில் முதல் வகுப்பு மாணவர்களுக்கு 25 ஆயிரத்து 385 ரூபாய், 2ஆம் வகுப்புக்கு 25 ஆயிரத்து 414 ரூபாய், 3ஆம் வகுப்புக்கு 25 ஆயிரத்து 613 ரூபாய், 4ஆம் வகுப்புக்கு 25 ஆயிரத்து655 ரூபாய். 5ஆம் வகுப்புக்கு 25 ஆயிரத்து 622 ரூபாய், 6ஆம் வகுப்புக்கு 33 ஆயிரத்து 182 ரூபாய், 7ஆம் வகுப்புக்கு 33 ஆயிரத்து 351 ரூபாய், 8ஆம் வகுப்புக்கு 33 ஆயிரத்து 431 ரூபாய் நிர்ணயம் செய்து பள்ளிக்கல்வித்துறை செயலாளர் உதயசந்திரன் அரசிதழில் வெளியிட்டிருந்தார். 

ஆனால், தற்போதைய செயலாளர் பிரதீப் யாதவ் வெளியிட்டுள்ள அரசாணையில், எல்.கே.ஜி, யூ.கே.ஜி, 1ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 11 ஆயிரத்து 719 ரூபாய், 2ஆம் வகுப்பு 11ஆயிரத்து 748 ரூபாய், 3ஆம் வகுப்புக்கு 11 ஆயிரத்து 944 ரூபாய், 4ஆம் வகுப்புக்கு 11 ஆயிரத்து 928 ரூபாய், 5ஆம் வகுப்புக்கு 11 ஆயிரத்து 960 ரூபாய் நிர்ணயம் செய்து அறிவித்துள்ளார். இந்நிலையில், 1ஆம் வகுப்பிற்கு 12,000 ரூபாய் வரை குறைக்கப்பட்டிருப்பது, தனியார் பள்ளிகள் இடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து கூறியுள்ள கல்வியாளர்கள், தற்போதைய செலவுகளுக்கு ஏற்ப, கல்விக் கட்டணத்தை அதிகரித்து வழங்குவதற்கு பதிலாக, கணிசமாக குறைத்திருப்பது மாணவர்களையும், பெற்றோர்களையும் பாதிக்கச் செய்யும் என தெரிவித்துள்ளனர். பல முன்னணி தனியார் பள்ளிகள், கல்வி கட்டண குறைப்பால் ஏற்பட்டுள்ள இழப்பை ஈடு செய்வதற்காக, பெற்றோரிடம் கூடுதல் கல்விக் கட்டணத்தை வசூலிப்பதற்கு முயற்சித்து வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்