புதிய மாணவர்களுக்கு கல்விக்கடன் அளிக்கத் தயங்கும் வங்கிகள்...காரணம் என்ன ?

இந்தியாவின் கல்விக்கடன் பெறும் மாணவர்களின் எண்ணிக்கை கடந்த 4 ஆண்டுகளில் 25 சதவீதம் வரை சரிந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
x
இந்தியாவின் கல்விக்கடன் பெறும் மாணவர்களின் எண்ணிக்கை கடந்த 4 ஆண்டுகளில் 25 சதவீதம் வரை சரிந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. 2015 ஆம் ஆண்டு மார்ச் மாத நிலவரப்படி, 3 லட்சத்து 45 ஆயிரம் மாணவர்கள் கல்விக்கடன் பெற்ற நிலையில், 2016 ல், 3 புள்ளி 12 லட்சமாகவும், 2017 ல், 2 புள்ளி 92 லட்சமாகவும் கல்விக்கடன் பெற்ற மாணவர்கள் எண்ணிக்கை குறைந்துள்ளன. 2019 மார்ச் 31 ஆம் தேதி நிலவரப்படி கல்விக்கடன் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை 2 புள்ளி 5 லட்சமாக சரிவடைந்துள்ளன.

கல்விக்கடன் பெறுபவர்களின் எண்ணிக்கை குறைந்ததற்கு முக்கியக் காரணம், ஏற்கெனவே வாங்கியவர்கள் அதனை திருப்பி செலுத்தவில்லை என்பதால் புதிய கல்விக்கடன் அளிக்க வங்கிகள் தயக்கம் காட்டுவதாக தெரிய வந்துள்ளது. 

கடந்த 5 ஆண்டுகளில் கல்விக்கடன் வாராக்கடன் இரண்டு மடங்கு அதிகரித்து 12 புள்ளி 5 சதவீதமாக உள்ளது. 2015 ஆம் ஆண்டு 7 சதவீதமாக இருந்த வாராக்கடன், 2017 ஆம் ஆண்டு 10 புள்ளி 2 சதவீதமாகவும், 2019 ஆம் ஆண்டில் 12 புள்ளி 5 சதவீதமாகவும் படிப்படியாக அதிகரித்துள்ளது. எனினும் ஒட்டுமொத்தமாக வங்கிகள் அளித்துள்ள கல்விக்கடன் அதிகரித்துள்ளது. 2015 ஆம் ஆண்டில் 16 ஆயிரத்து 800 கோடி ரூபாயாக இருந்த கல்விக்கடன், படிப்படியாக அதிகரித்து 2019 ஆம் நிதியாண்டில் 22 ஆயிரத்து 500 கோடி ரூபாயாக உள்ளது. கல்விக்கடன் தொகை அதிகரித்தாலும், கடந்த 4 ஆண்டுகளில் கல்விக்கடன் கணக்குகள் 34 லட்சத்திலிருந்து 27 லட்சத்து 80 ஆயிரமாக குறைந்துள்ளன.

இந்த காலகட்டத்தில் சராசரி கல்விக்கடன் அளவு படிப்படியாக அதிகரித்துள்ளது. 2015 ஆம் ஆண்டில் 5 லட்சத்து 30 ஆயிரம் ரூபாயாகவும், 2016 ல், 5 லட்சத்து 90 ஆயிரம் ரூபாயாகவும், 2017ல், 6 லட்சத்து 90 ஆயிரம் ரூபாயாகவும், 2018 ல், 7 லட்சத்து 80 ஆயிரம்  ரூபாயாகவும், 2019 ஆம் ஆண்டில் 9 லட்சத்து 2 ஆயிரம் ரூபாயாகவும் அதிகரித்துள்ளது. வங்கிகள் 4 லட்ச ரூபாய் வரை பிணை சொத்துகள் இல்லாமல் கடன் அளித்து வருகின்றன. அதன் மூலம் ஏழை மாணவர்கள் பயன் பெற்று வந்தாலும், பிணை சொத்துகள் இல்லாமல் கடன் வாங்கும் மாணவர்களின் பெற்றோர்களுக்கும் கடனை திருப்பி செலுத்தும் திறன் இருப்பதில்லை என்றும் கூறப்படுகிறது.

அதனால் தற்போது பிணை சொத்து இல்லாமல் கடன் அளிப்பதை தவிர்க்கும் வங்கிகள், அதற்கு பதிலாக உயர்கல்வி நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு கல்விக்கடனைஅளிக்கின்றன. எனினும் கல்விக்கடனில் 91 சதவீதம் வரை பொதுத்துறை வங்கிகள் மட்டுமே அளிப்பதாக ரிசர்வ் வங்கி குறிப்பிடுகிறது. மந்தமான பொருளாதார வளர்ச்சி, வேலை வாய்ப்பின்மை, கல்வி நிறுவனங்கள் தனியார்மயம், வேலைவாய்ப்பு திறனுக்கும் கல்விக்குமான இடைவெளி போன்ற காரணங்களாலும்  மாணவர்களுக்கு கல்விக்கடன் அளிக்க வங்கிகள் தயங்குவதாக தகவல்கள் மூலம் தெரிய வந்துள்ளன.

Next Story

மேலும் செய்திகள்