வேலையின்மை சிக்கலைத் தீர்க்க புதிய பரிந்துரை...நகர்ப்புற வேலை உறுதியளிப்புத் திட்டம்

அதிகரித்து வரும் வேலையின்மை சிக்கலைத் தீர்க்க, நகர்ப்புற வேலை உறுதியளிப்புத் திட்டத்தைச் செயல்படுத்தலாம் என அசீம் பிரேம்ஜி பல்கலைக் கழக ஆய்வு பரிந்துரை செய்துள்ளது.
x
இந்தியாவில் வேலை செய்பவர்களின் நிலை என்கிற ஆய்வினை மேற்கொண்ட அசிம் பிரேம்ஜி பல்கலைகழகம், அது தொடர்பான ஆய்வினை வெளியிட்டுள்ளது. நகர்ப் புறங்களில் வேலையின்மை 7 புள்ளி 8 சதவீதமாகவும், கிராமப்புறங்களில் வேலையின்மை 5 புள்ளி 3 சதவீதமாகவும் அதிகரித்துள்ளதாகக் கூறியுள்ளது. வேலையின்மை சிக்கலைத் தீர்க்க தேசிய நகர்ப்புற வேலை உறுதியளிப்பு திட்டத்தை பரிந்துரை செய்துள்ளது. இதன் மூலம் திறன் மிகுந்த தொழிலாளர்களை நகர வேலைகளுக்கு பயன்படுத்தலாம் என்று குறிப்பிட்டுள்ளது.

நகர்ப்புற மக்கள் தொகை 47 கோடி 40 லட்சமாக உள்ளது. அதில் 50 சதவீதம் பேர் 10 லட்சத்திற்கும் குறைவான மக்கள்தொகை கொண்ட நகரங்களில் வசிக்கின்றனர். அதன்படி சிறு நகரங்களில் வசிப்பவர்களின் எண்ணிக்கை 23 கோடியே 70 லட்சமாக உள்ளது. குடும்பத்திற்கு சராசரியாக 4 உறுப்பினர்கள் என்றால், சிறு நகரங்களில் 5 கோடியே 90 லட்சம் குடும்பங்கள் உள்ளன. ஒரு குடும்பத்தில் ஒருவர் மட்டுமே  வேலைக்கு செல்லும் நிலை உள்ளது. வேலை உறுதி அளிப்புத் திட்டத்தின்  தினசரி  500  ரூபாய் கூலியில், 100 நாட்களுக்கு வேலை அளிக்கலாம்.  படித்த இளைஞர்களுக்கு மாதம் 13 ஆயிரம் ரூபாய் உதவி தொகை அளித்து, 150 நாட்களுக்கு தொழிற் பயிற்சி அளிக்கலாம் என்று கூறியுள்ளது.

தொழிலாளர்களை இரண்டு வகையாக பிரித்து வேலை அளிக்கலாம் என்று கூறும் அறிக்கை, முதல் பிரிவில் 12 ஆம் வகுப்பு வரை படித்த பல்வகை திறமை கொண்டவர்கள் என்றும்,  கட்டுமான தொழில், பெயின்டர்கள், எலக்ட்ரீசியன் போன்ற வேலைகளில் ஈடுபடுத்தலாம் என்றும் குறிப்பிட்டுள்ளது. இரண்டாவது பிரிவில் பட்டப்படிப்பு, டிப்ளமோ படித்தவர்கள், கம்யூட்டர் பயிற்சி சான்றிதழ் மற்றும் ஆங்கில பயிற்சி பெற்றவர்களாக இருப்பர் என்றும் வகைப்படுத்தி உள்ளது. மத்திய பிரதேச அரசு, 'யுவ சுவபிமான் யோஜனா' என்ற 100 நாள் நகர்ப்புற வேலை உறுதி திட்டத்தை தொடங்கியுள்ளது. கேரளாவில் அயன்காளி நகர்புற வேலை உறுதி திட்டம், 2010இல் இருந்து செயல்படுத்தப்படுகிறது. இதன் மூலம் நகர்புற  குடும்பங்களுக்கு 100 நாட்களுக்கு வேலை அளிக்கப்படுகிறது. 

தொழிலாளர்களுக்கான செலவுகளை, மத்திய அரசு 80 சதவீதம் மாநில அரசு 20 என்கிற விகிதத்தில் பகிர்ந்து கொள்ளலாம். தொழிலாளர்கள் அல்லாத இதர செலவுகளை, மத்திய, மாநில அரசுகள், உள்ளாட்சி அமைப்புகள் சம அளவில் பகிர்ந்து கொள்ளலாம். திட்டத்துக்கான செலவில் 60 சதவீதம் தொழிலாளர்களின் ஊதியத்துக்கும், 40 சதவீதம் இடுபொருட்கள் மற்றும் நிர்வாக செலவுக்கும் ஒதுக்கலாம். நகர்ப்புற வேலை உறுதி அளிப்பு திட்டத்தின் மூலம் நீர்நிலைகளை மேம்படுத்துவது, பேரிடர் முன்னெச்சரிக்கை பணிகள், சிறு கட்டுமான பணிகளில் ஈடுபடுத்தலாம். பூங்கா சீரமைப்பு,  தோட்டக்கலை வேலைகள், ரயில்வே பாதைகளில் மரக்கன்றுகள் நடுவது, பள்ளிகளில் காய்கறி தோட்டம் அமைப்பது,  மழை நீர் சேகரிப்பு வசதிகளை மேம்படுத்தச் செய்யலாம்.  நகர்புற தகவல் சேகரிப்பு உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள முடியும் என்றும் அசீம் பிரேம்ஜி பல்கலைக் கழக ஆய்வு பரிந்துரை செய்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்