பேரனால் வெளிச்சத்துக்கு வந்த தாத்தாவின் திருட்டு

நூறாண்டுகளுக்கு முன்பு திருடப்பட்டு சுவற்றில் மறைத்து வைக்கப்பட்ட அம்மன் சிலை மீட்கப்பட்டுள்ளது. சிலை திருட்டுக்கு பின்னால் நடந்த நிகழ்வுகளை விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.
x
மதுரை மாவட்டம் மேலூர் நகைக்கடை வீதியில் உள்ளது பழமை வாய்ந்த திரவுபதி அம்மன் கோயில். 105 ஆண்டுகளுக்கு முன்பு அந்த கோயிலின் நிர்வாகத்தை நாராயணபிள்ளை என்பவர் கவனித்து வந்துள்ளார். அப்போது ஐம்பொன்னால் ஆன 2 அடி உயர திரவுபதி அம்மனை சிலை திருட்டு போய் உள்ளது. இது குறித்து அப்போதைய ஆங்கிலேயே காவல்துறையிடம் நாராயண பிள்ளை அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடந்த போதும் சரியான துப்பு கிடைக்கவில்லை. இந்தியா சுதந்திரம் அடைந்த பின்பு நாராயண பிள்ளையின் சந்ததியினர் திரவுபதி அம்மன் சிலையை தேடும் பணியை தொடர்ந்துள்ளனர். 

இருப்பினும் எந்த தகவலும் கிடைக்காத நிலையில் நாமக்கல்லில் இருந்து முருகேசன் என்பவர் மேலூர் திரவுபதி அம்மன் கோவிலுக்கு வந்துள்ளார். தாம் நாராயண பிள்ளையின் உதவியாளர்  கந்தசாமியின் சந்ததியினர் என்றும், தமது குடும்பம் நிம்மதி இழந்து இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். அவரிடம் விரிவாக விசாரித்த பக்தர்கள், திரவுபதி அம்மன் சிலையை தாத்தா கந்தசாமி எடுத்து சென்று இருக்கலாம். அதனை ஒப்படைத்தால் உங்களுக்கு ஏற்பட்டுள்ள தீமை விலகும் என்று கூறியுள்ளனர். 

தாம் சிறுவனாக இருக்கும்போது தாத்தா வீட்டு சுவற்றை நோக்கி வணங்கி பூஜை செய்ததாக முருகேசன் தெரிவித்துள்ளார். ஒருவேளை அந்த சுவற்றில் திரவுபதி அம்மன் சிலை மறைத்து வைக்கப் பட்டிருக்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார், அதன் அடிப்படையில் விசாரணையை சிலை கடத்தல் பிரிவு போலீசார் தீவிரப் படுத்தி உள்ளனர். கந்தசாமியின் வீட்டை மச்சக்காளை என்பவர் வாங்கி பயன்படுத்தி வந்துள்ளார். அவரிடம் போலீசார் அணுகியபோது , தமது வீட்டில் சிலை இருக்குமேயானால் சுவற்றை இடித்துக் கொள்ளுங்கள் என தெரிவித்துள்ளார். 

இதனை தொடர்ந்து சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் சுவற்றை உடைத்த போது ஐம்பொன் சிலை அங்கு இருந்துள்ளது. அந்த சிலையை மீட்டு கோவிலுக்கு எடுத்துச் சென்று அங்கு பிரதிஷ்டை செய்துள்ளனர். தொடர் விசாரணையில் நாராயணபிள்ளையிடம் உதவியாளராக இருந்த கந்தசாமி கருத்து வேறுபாடு காரணமாக நாராயணபிள்ளையை பழி வாங்க சிலையை திருடியது தெரிய வந்துள்ளது. கோவிலில் இருந்து அம்மன் சிலையை நகைகளுடன் எடுத்துச் சென்றுள்ளார். எங்கேயும் விற்றால் தெரிந்துவிடுமே என நினைத்து தனது வீட்டின் சுவரில் சிலையை பதித்து பூசியுள்ளார். தனக்கு மட்டுமே தெரிந்த ரகசியத்தை யாருக்கும் சொல்லாமல் அவர் மரணம் அடைந்து விட்டார். தற்போது அவரது பேரனால் உண்மை வெளிச்சத்துக்கு வந்து, திரவுபதி அம்மன் பக்தர்களுக்கு மீண்டும் அருள் பாலித்து வருகிறார். சிலையில் இருந்த தங்க நகைகளை தேடும் பணி தற்போது முடுக்கி விடப் பட்டுள்ளது 


Next Story

மேலும் செய்திகள்