செங்கல்சூளைகளில் கொத்தடிமைகளாக்கப்படும் மலைவாழ் குழந்தைகள்...பெற்றோர் வேதனை

ராசிபுரம் குழந்தைகள் கடத்தல் விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், ஒசூர் அருகே மலைவாழ் இனத்தை சேர்ந்த சிறுவர்களை சிலர் கடத்தி சென்று கொத்தடிமைகளாக விற்பனை செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
x
கொல்லிமலையை சேர்ந்த மலைகிராம மக்களின் குழந்தைகள், தமிழகம் முழுவதும் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக வெளியான அதிர்ச்சி தகவல் இன்னும் அடங்கவில்லை. அதற்குள் ஒசூர் அருகே மலைவாழ் இனத்தை சேர்ந்த சிறுவர்களை சிலர், அழைத்துச் சென்று கொத்தடிமைகளாக விற்பனை செய்வதாக புகார் எழுந்துள்ளது. கோட்டையூர் கொல்லை சித்திக்நகரில் 60க்கும் மேற்பட்ட வீடுகளில் மலைவாழ் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். படிப்பறிவு இல்லாத இங்குள்ள மக்களின் அறியாமையை பயன்படுத்தியும் மலைவாழ் சிறுவர்களிடம் ஆசைவார்த்தை கூறியும் அவர்களை கர்நாடகாவில் உள்ள செங்கல்சூளை, பண்ணை தோட்டங்களில் சிலர் விற்றுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக கட்டிகான் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் நடத்திய விசாரணையில், மாதையன் மற்றும் பைரப்பா ஆகிய 2 பேர், பணத்திற்காக மாதேஷ் என்ற 6 வகுப்பு மாணவனை கடத்திச் சென்று கர்நாடகா மாநிலம் யஸ்வந்த்பூர் பகுதியிலுள்ள ஒரு பண்ணை தோட்டத்தில் விற்றது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து அவர்களிடமிருந்து மாணவனை மீட்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

செங்கல் சூளைகளில் கடுமையான வேலை இருக்கும் என்று கூறும் குழந்தைகளின் பெற்றோர், அங்கு அவர்களுக்கு சரியாக சாப்பாடு கூட கொடுப்பதில்லை என தெரிவித்துள்ளனர். கொத்தடிமையிலிருந்து மீண்டு வந்த சித்தன் மற்றும் கெஞ்சம்மா ஆகியோர் தனது 13 வயது மகன் ருத்ரா என்பவனை 15ஆயிரம் ரூபாய்க்கு கொத்தடிமையாக வேலை செய்ய விற்றுள்ளனர் என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முன்பெல்லாம் பெரியவர்களை குடும்பத்துடன் கொத்தடிமைகளாக பணம் கொடுத்து அழைத்து சென்ற நிலையில், தற்போது பெரியவர்கள் யாரும் கொத்தடிமைகளாக செல்வதில்லை, என்பதால் புரோக்கர்களின் கவனம் சிறுவர்களை நோக்கி நகர்ந்துள்ள என மலைவாழ் மக்கள் கூறுகின்றனர். இங்குள்ள பல மலைவாழ் கிராமங்களை குறிவைத்து சிறுவர்கள் கடத்தல் நடைபெற்று வருவதால் மாவட்ட நிர்வாகம் மலைவாழ் மக்கள் வாழும் பகுதிகளில் கணக்கெடுப்பு நடத்தி சிறுவர்களை பாதுகாக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்