பெண் குழந்தை வேண்டாம் - கொல்லிமலை மக்கள்

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் வறுமையின் காரணமாக குழந்தைகள் விற்கப்படுவதாக புகார் எழுந்ததை அடுத்து கள நிலவரத்தை தெரிந்துகொள்ள தந்தி டி.வி. அப்பகுதி மக்களுடன் பேசியது.
x
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற பெண் செவிலியர் உதவியாளர் அமுதவள்ளி, குழந்தைகளை பல லட்சத்துக்கு விலைபேசி விற்கும் ஆடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்த ஆடியோ குறித்து அதிரடி விசாரணையில் இறங்கிய காவல்துறை, அமுதவள்ளியையும், அவரின் கணவரையும் முதலில் கைது செய்தது. அவர்கள் அளித்த தகவலின் பேரில் பர்வீன், ஹசீனா, அருள்சாமி  ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். குழந்தை விற்பனை, கொல்லிமலை கிராமங்களை குறிவைத்து நடந்திருப்பதாக தகவல் கிடைத்ததும் அங்கு பிறந்த குழந்தைகள் குறித்த விவரங்களை சேகரிக்கும் விசாரணையில் சுகாதாரத்துறை இறங்கியுள்ளது. கொல்லிமலை மீது 50-க்கும் மேற்பட்ட  மலைகிராமங்கள் உள்ளன. பழங்குடியினர் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வரும் இங்கு, விவசாயம் பிரதான தொழில்.  ஆனால், வறட்சி காரணமாக மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இங்குள்ள ஒரு அரசு மருத்துவமனை, 3 ஆரம்ப சுகாதார நிலையத்தைதான் பிரசவத்திற்கு நாடுகின்றனர். 

ஆண் வாரிசு வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கும் கொல்லிமலை வாழ் மக்களில் பெரும்பாலானோர், பெண் குழந்தை பிறந்ததும், அதை பிறருக்கு கொடுத்துவிடும் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. வறுமையில் தவிக்கும் மலைவாழ் மக்களுக்கு பெண் குழந்தை பிறந்ததும், இங்கு வளர்க்க முடியாது, வேறொரு இடத்தில் ராணி மாதிரி வளர்ப்பார்கள் என ஆசை வார்த்தை கூறி, செவிலியர்களே குழந்தையை விற்பதாக கூறப்படுகிறது. இதனை திட்டவட்டமாக மறுக்கும் அரசு மருத்துவமனை செவிலியர்கள்  குழந்தை இல்லாதவர்கள் உறவினர்களிடம் பேசி  சட்டத்துக்கு உட்பட்டே குழந்தையை வாங்குவதாக தெரிவித்தனர். முதலில் பெண் குழந்தை பிறந்தது, இரண்டாவதும் பெண் குழந்தை பிறந்ததால், அதை தத்து கொடுத்திவிட முடிவு எடுத்து, ஆம்புலன்ஸ் ஓட்டுநரிடம் கொடுத்துவிட்டதாக சொல்கிறார், கொல்லிமலை செங்கரையை சேர்ந்த விஜயலட்சுமி. ஆனால், குழந்தையை கொடுத்தற்கு எவ்வித பணமும் தாம் பெறவில்லை என்றும் அவர் கூறினார். இங்கு குழந்தையை வளர்த்த முடியாமல் சிலர்,  கொன்று விடுவதாக சொல்லும் விஜயலட்சுமி, அதைவிட தத்து கொடுப்பதில் தவறு இல்லை என்கிறார். வறுமை காரணமாக கடந்த காலங்களில் குழந்தைகள் விற்பனை கொல்லிமலை பகுதியில் நடந்ததாக கூறும் பொதுமக்கள், தற்போது அந்த நிலை இல்லை என்று கூறுகின்றனர். 

அரசின் தொட்டில் குழந்தை திட்டம் பற்றியும், சட்ட ரீதியாக தத்துக்கொடுக்கும் நடைமுறை பற்றியும் கொல்லிமலை வாழ் மக்களிடம் விழிப்பு உணர்வு இல்லை. குழந்தைகளுக்கான நலத் திட்டங்கள் பொதுமக்களை சேரவில்லை என்பதையே குழந்தை விற்பனை விவகாரம் வெளிச்சமிட்டு காட்டுகிறது.

Next Story

மேலும் செய்திகள்