50 சதவீத கிணறுகள் வறண்டன : மழை நீர் சேகரிப்பில் மெத்தனமா?

தமிழகத்தில் இதுவரை இல்லாத வகையில் வறட்சி வாட்டி எடுத்து வருகிறது. ஏரிகள், குளங்கள் வறண்டு கிடப்பதுடன் நிலத்தடி நீர் மட்டமும் இந்த ஆண்டில் 6 மீட்டர் வரை கீழே இறங்கியுள்ளதாக தெரிய வந்துள்ளது.
x
* நீர்நிலைகள் வறண்டுள்ளதால் குடிதண்ணீருக்காக மக்கள் பல கிலோமீட்டர் தூரம் அலைந்து வருகின்றனர். தர்மபுரி, சேலம், நாமக்கல், பெரம்பலூர், திருச்சி, திண்டுக்கல் மாவட்டங்களில் நிலத்தடி நீர்ட்மட்டமும் கிடுகிடுவென சரிந்துள்ளது.

* தமிழ்நாட்டில் தோராயமாக  19 லட்சம் ஆழ்துளை கிணறுகள் பயன்பாட்டில் இருக்கும் நிலையில், அதில் 30 சதவீத ஆழ்துளை கிணறுகள் நீரின்றி வறண்டுள்ளன. வறட்சி காரணமாக , வன உயிரினங்களும் தண்ணீர் உணவு தேடி ஊருக்குள் வரத் தொடங்கியுள்ளன. அதனால் மனிதன் - வனவிலங்கு மோதல் அதிகரித்துள்ளன.

* நிலத்தடி நீர்மட்டம் குறைவதால் பாசனப் பரப்பும்  குறைந்துள்ளன. 1960 ஆம் ஆண்டில் 22 லட்சம் ஏக்கரில் ஆழ்துளை கிணறு பாசனம் நடந்துள்ளது. ஆனால் 2000 ஆண்டில் 16 லட்சம் ஏக்கராகவும், 2018 ஆம் ஆண்டில் 10 லட்சம் ஏக்கராகவும் பாசனம் சுருங்கியுள்ளது.

* நகரங்களில் மக்கள் அதிக அளவில் குடியேறி வருவதால் தண்ணீருக்கான தேவை அதிகரித்துள்ளது. அதிகபட்ச நகர்ப்புற பகுதிகளை கொண்ட மாநிலங்களான தமிழ்நாடு, மஹாராஷ்டிரா  மாநிலங்களில் 50 முதல் 70 சதவீத மக்களுக்கே பாதுகாப்பான குடிநீர் கிடைத்து வருவதாக ஆய்வுகள் சொல்கின்றன.

* சென்னையின் குடிநீர் தேவைகளில் சுமார் 60 சதவீதம் நிலத்தடி நீரை நம்பி உள்ளது.  இந்த நிலையில் நிலத்தடி நீரை சேமிப்பதற்கான முயற்சிகளும் முறையாக பராமரிக்கப்படவில்லை. நகரத்துக்குள் இருந்த ஏரி, குளம், குட்டைகளை ஆக்கிரமித்து  வீடுகள் கட்டப்பட்டுள்ள நிலையில், தற்போது எஞ்சியுள்ள சேத்துப்பட்டு, வேளச்சேரி, மடிப்பாக்கம் என ஒரு சில நீர்நிலைகளும் ஆக்கிரமிப்பின் பிடியில் உள்ளன. அவற்றை பாதுகாப்பதும் எளிதானது அல்ல

* தமிழ்நாட்டின் தண்ணீர் பிரச்னை இதே வீதத்தில் தொடர்ந்தால், வரும் 2030ஆம் ஆண்டுக்குள் 40 சதவீத மக்களுக்கு தண்ணீரே கிடைக்காது என நிதி ஆயோக் அறிக்கை எச்சரிக்கை செய்துள்ளது.  

* தமிழகத்தில் சுமார் 40 ஆயிரம் விவசாய ஏரிகள், மேலும் 65-க்கும் மேலான பெரிய நீர் நிலைகள் மற்றும் அணைகள் உள்ளன. இவற்றை முறையாக பராமரிக்காததால்  நீர் தேக்கும் அளவும்  குறைந்துள்ளன. மழைநீரை சேகரிக்க கட்டமைப்புகள் இருந்தாலும் அவற்றை முறையாக  பராமரிப்பது குறைந்துள்ளது. 

* தற்போது 60 கோடி இந்தியர்களுக்கு தண்ணீர் பற்றாக்குறை உள்ளது.   நாட்டிலுள்ள 70 சதவீத நீர் ஆதாரங்கள் அசுத்தம் அடைந்துள்ளதால், சுத்தமாக குடிநீர் இல்லாமல் ஒவ்வொரு ஆண்டும் இரண்டு லட்சம் மக்கள் உயிரிழந்து வருகின்றனர்.

* இந்த அபாயத்தை அரசும், மக்களும் பொறுப்போடு அணுக வேண்டிய காலம் ஏற்பட்டுள்ளது. தண்ணீர் தட்டுப்பாடு தரும் பாடம் அனைவருக்கும்தான் என்பதை உணர்ந்து கொள்வோம்.

Next Story

மேலும் செய்திகள்