தமிழகத்தில் புதிய உச்சத்தை தொட்ட மின்தேவை...

தமிழகத்தின் மின் தேவை 16 ஆயிரம் மெகாவாட்டை தாண்டி புதிய உச்சத்தை தொட்டுள்ளது.
தமிழகத்தில் புதிய உச்சத்தை தொட்ட மின்தேவை...
x
தமிழகத்தின் மின் தேவை 16 ஆயிரம் மெகாவாட்டை தாண்டி புதிய உச்சத்தை தொட்டுள்ளது. இதனால் ஆங்காங்கே மின்தடையால் அவதிபடுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர். தமிழகத்தின் சராசரி மின்தேவை நாளொன்றுக்கு 14 ஆயிரம் மெகாவாட் என்ற அளவில் இருந்த நிலையில், பிப்ரவரி 28-ஆம் தேதி மின்தேவை 15 ஆயிரத்து 448 மெகாவாட்டாக அதிகரித்தது. மார்ச் மாதம் பொதுத் தேர்வுகள் தொடங்கிய நிலையில் மின்தேவை மார்ச் 8 ஆம் தேதி 15 ஆயிரத்து 869 மெகாவாட்டாகவும், மார்ச் 15 ஆம் தேதி 15 ஆயிரத்து 847 மெகாவாட்டாகவும் உயர்ந்துள்ளது. 

இதனிடையே, நள்ளிரவு வரை நீளும் தேர்தல் பிரசாரம், ஐ.பி.எல். போட்டிகள் மற்றும் கோடை வெப்பத்தின் தாக்கம், மின்தேவை அளவை தொடர்ந்து அதிகரித்து வந்துள்ளது. ஏப்ரல் 3 ஆம் தேதி, மின் தேவை 16 ஆயிரத்து 151 மெகாவாட்டாக அதிகரித்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது. நடப்பாண்டு 17 ஆயிரம் மெகாவாட் மின் தேவை இருக்கும் என்று கணிக்கப்பட்டு உள்ள நிலையில், அரசு நிலைமையை சமாளிக்க அனைத்து நடவடிக்கை எடுத்து வந்தாலும் ஆங்காங்கே மின்வெட்டு நிலவுவதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். 

ஒரு நாள் முழுவதும் பயன்படுத்தப்படும் மின்சாரத்தின் அளவு நுகர்வு என்று அழைக்கப்படும் நிலையில், மார்ச் 27-இல் 35 புள்ளி 57 கோடி யூனிட்டுகளாக உயர்ந்த மின் பயன்பாடு ஏப்ரல் 3 ஆம் தேதி 36 புள்ளி 16 கோடி யூனிட்டுகளாக உயர்ந்துள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை சராசரி மின்சார தேவை நாளொன்றுக்கு 14 ஆயிரம் மெகாவாட். இது மழைக்காலங்களில் 11 ஆயிரம் மெகாவாட்டுக்கும் கீழேயும், கோடைக் காலங்களில் 15 ஆயிரம் மெகாவாட்டை தாண்டும் என்பது கடந்த கால வரலாறு ஆக இருந்த நிலையில், நடப்பாண்டு மின் தேவை மேலும் அதிகரித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்