சூடுபிடிக்கும் தேர்தல் களம் : நாடாளுமன்றத்திற்கு தேர்வான பெண் எம்.பி.க்கள்...

17 வது மக்களவை தொகுதி தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக நாடாளுமன்றத்திற்கு அனுப்பப்பட்ட பெண் எம்.பிக்கள் குறித்த செய்தி தொகுப்பை பார்ப்போம்.
சூடுபிடிக்கும் தேர்தல் களம் : நாடாளுமன்றத்திற்கு தேர்வான பெண் எம்.பி.க்கள்...
x
காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ், பிஜூ ஜனதா தளம் ஆகிய கட்சிகள், நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் மகளிருக்கு 33 சதவிகித இட ஒதுக்கீட்டை, தாங்கள் ஆட்சிக்கு வந்தால் நிறைவேற்ற உறுதுணையாக இருப்போம் என அறிவித்துள்ளனர். இதில் ஒரு படி மேலே போய், பிஜூ ஜனதாதளம், வரும் மக்களவை தேர்தலில் 33 சதவிகிதம், மற்றும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி, 41 சதவிகித இடங்களையும், பெண்களுக்கு ஒதுக்கி அறிவித்துள்ளன. 

நாட்டில் நடைபெற்ற முதல் மக்களவை தேர்தலில், அகில இந்திய அளவில், 24 பெண் எம்.பிக்கள் தேர்வு செய்யப்பட்டனர். தமிழகத்தை சேர்ந்த இரண்டு பெண் எம்.பிக்கள் அதில் அடக்கம். அதனை தொடர்ந்து, படிப்படியாக ஏற்ற இறக்கங்களுடன், மக்களவைக்கு நடைபெற்ற தேர்தல்களில், பெண் எம்.பிக்களின் பங்கு அதிகரித்த வண்ணம் இருந்தது. 

கடந்த 2014 ஆம் ஆண்டு, நடைபெற்ற 16 வது மக்களவை தேர்தலில், அதிக பட்சமாக, 66 பெண் எம்.பிக்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களில், 4 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். 16 வது மக்களவையில், 11 சதவிகித பெண்கள் உறுப்பினர்களாக இருந்தனர். அவர்களில் 7 பேர், மத்திய அமைச்சர்களாக பதவி வகித்தனர். கடந்த 2014 ஆம் ஆண்டு, 543 தொகுதிகளில், 8 ஆயிரத்து 136 பேர் போட்டியிட்டனர். அவர்களில், 636 பேர் மட்டுமே பெண்கள் ஆவர். 

இதுவரை நடைபெற்ற, 16 மக்களவை தேர்தல்களில், தேர்வான எம்.பி.க்களின் மொத்த எண்ணிக்கை 8 ஆயிர​த்து 488. அவர்களில் பெண் எம்.பிக்களின் எண்ணிக்கை வெறும் 633 ஆகும். 16 மக்களவை தேர்தல்களிலும், சராசரியாக, 7 புள்ளி நான்கு ஐந்து சதவிகித பெண்கள், தேர்வு செய்யப்பட்டுள்ளனர். காங்கிரஸ் கட்சி சார்பில் 306 பெண்களும், ஜனசங்கம் மற்றும் பாஜக சார்பில் 115 பெண்களும், ஜனதா தளம் மற்றும் ஜனதா கட்சி சார்பில், 25 பெண்களும், இடது சாரிகள் சார்பில், 38 பெண்களும், மக்களவைக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 

திரிணாமூல் காங்கிரஸ் 22 பெண்களையும், சமாஜ்வாதி கட்சி 19 பெண்களையும், அதிமுக 7 பெண்களையும், திமுக 4 பெண்களையும், பிற கட்சிகள், 85 பெண்களையும் மக்களவைக்கு அனுப்பியுள்ளன. 11 பெண்கள் சுயேச்சையாக போட்டியிட்டு மக்களவைக்கு சென்றுள்ளனர். கடந்த மக்களவையில் தான் அதிக பெண் எம்.பிக்கள் இடம் பிடித்தனர். மிக குறைந்த பெண் எம்.பிக்கள் தேர்வு செய்யப்பட்டது அவசர நிலை காலத்திற்கு பின்னால் நடைபெற்ற மக்களவை தேர்தலில் தான். 

1980- ஆம் ஆண்டில் முதன் முறையாக, மக்களவை தேர்தலில் போட்டியிட்ட பெண்களின் எண்ணிக்கை 100 ஐ தாண்டியது. அரசியல் கட்சிகளில், மிக குறைவான பெண் எம்.பிக்களை மக்களவைக்கு அனுப்பியது மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ்வாதி கட்சி தான். உள்ளாட்சி அமைப்புகளில், 33 சதவிகிதம் மகளிருக்கு இட ஒதுக்கீடு என்பது மறைந்த பிரதமர் ராஜீவ் காந்தியின் எண்ணத்தில் உதித்தது. ஆனால் இத்திட்டம் 1993ஆம் ஆண்டில் தான் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த இட ஒதுக்கீட்டை, சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றத்தில், நடைமுறைப்படுத்த அரசியல் காரணங்கள் இடம் தராமல் உள்ளது. 

பல முறை மகளிர் இட ஒதுக்கீடு மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டு மாநிலங்களவையிலும், மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டால் மக்களவையிலும் நிராகரிக்கப்பட்டுள்ளது. பெண் பிரதமர், பெண் குடியரசுத்தலைவர், பெண் சபாநாயகர், பெண் முதலமைச்சர்கள், பெண் பாதுகாப்புத்துறை அமைச்சர் என ஆட்சியதிகாரத்தில் பெண்களின் பங்களிப்பு இருந்தாலும், 33 சதவிகித இட ஒதுக்கீடு மசோதா மட்டும் நாடாளுமன்றத்தில் தொடர்ந்து தோற்கடிக்கப்பட்டே வருகிறது. 

நாடாளுமன்றங்களில் பெண்களின் பங்களிப்பை உலக அளவில் உற்று நோக்கும் போது, 193 நாடுகளின் பட்டியலில், இந்தியா 150 வது இடத்தில் அதாவது 12 புள்ளி ஆறு என்ற பங்களிப்புடன் உள்ளது. இஸ்லாமிய நாடான வங்கதேசத்தில், 20 புள்ளி ஆறு, பாகிஸ்தானில் 20 புள்ளி 2 சதவிகிதம் பெண் எம்.பி.க்கள் உள்ளனர். மிகவும் பின்தங்கிய நாடான ருவாண்டாவில் 61 புள்ளி மூன்று, கியூபாவில் 53 புள்ளி இரண்டு, பொலிவியாவில் 53 புள்ளி 1 என்ற சதவீதத்தில், பெண் எம்.பி.க்கள் உள்ளனர். 

வளர்ந்த நாடுகளில், பின்லாந்தில் 41 புள்ளி ஒன்று, நியுசிலாந்தில் 40 சதவீதம்,ம் ஃபிரான்சில் 39 புள்ளி 7 சதவிகிதம், பெண்களும் எம்.பிக்களாக உள்ளனர். ராணி மங்கம்மாள், வேலு நாச்சியார், முத்து லட்சுமி ரெட்டி மற்றும் ஜெயலலிதா உள்பட அரசியல் கோலோச்சிய, பெண்களின் எண்ணிக்கை தமிழகத்தில் நீள்கிறது. ஆனால், தற்போது அரசியல் கட்சிகள் பெண்களுக்கு முறையான வாய்ப்புகளை வழங்குவதில்லை என்ற குறை உள்ளது. அரசியல் தொடர்புடைய குடும்ப பெண்களுக்கு மட்டும் தான் தேர்தல்களில் பெரும்பாலும் வாய்ப்பு வழங்கப்படுகிறது. 

கடந்த 1952 ஆம் ஆண்டு முதல், ஐந்து முறை எம்.பியாக தேர்வான, மரகதம் சந்திரசேகர் தான் மத்திய அமைச்சரான முதல் தமிழக பெண் ஆவார். 1967, 1980, மற்றும் 1996 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களில், ஒரு பெண் கூட தமிழகத்தில் இருந்து மக்களவைக்கு தேர்வாகவில்லை. 2004 மற்றும் 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற, பொது தேர்தல்களில் தலா 4 பேர், மக்களவைக்கு தேர்வானார்கள். 

Next Story

மேலும் செய்திகள்