ஜிஎஸ்டி வரி விதிப்பால் விலைவாசி குறைந்துள்ளதா? - பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள்...

ஜி.எஸ்.டி. எனும் சரக்கு மற்றும் சேவை வரி மக்களிடம் எவ்வித தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதைப் பற்றி தந்தி குழுமம் பிரமாண்ட கருத்துக் கணிப்பை நடத்தியது.
ஜிஎஸ்டி வரி விதிப்பால் விலைவாசி குறைந்துள்ளதா? - பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள்...
x
2017 ஜூலை 1ம் தேதி, நாடு முழுவதும் அமலுக்கு வந்தது ஜி.எஸ்.டி எனும் சரக்கு மற்றும் சேவை வரி. இது ஒரு புதிய வரி அல்ல. ஏற்கனவே இருந்த கலால் வரி, சுங்க வரி, சேவை வரி, VAT வரி போன்றவற்றை ஒன்றிணைத்து உருவாக்கப்பட்ட ஒற்றை வரி. ஒரு நாடு, ஒரே வரி என்றாலும், 5 அடுக்குகளில் ஜி.எஸ்.டி வசூலிக்கப்படுகிறது. 183 பொருட்களுக்கு 0%, 308 பொருட்களுக்கு 5%,178 பொருட்களுக்கு 12% மற்றும் அதிகபட்சமாக 517 பொருட்கள் மீது 18% வரி வசூலிக்கப்படுகிறது. ஆடம்பரமாக கருதப்படும் 28 பொருட்கள் மீது மட்டும் 28% வரி போடப்பட்டுள்ளது. சேவைகளை பொறுத்தவரை, அனைத்துக்கும் 18% தான். தங்கத்தின் மீது 3% வரி விதிக்கப்பட்டுள்ளது. மாநிலங்களின் எதிர்ப்பு காரணமாக, பெட்ரோல், டீசல் மற்றும் மது விற்பனை இதுவரை ஜி.எஸ்.டி வரம்புக்குள் கொண்டுவரப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஜி.எஸ்.டி மூலம் மத்திய அரசுக்கு சராசரியாக மாதம் ஒன்றுக்கு 90,000 கோடி ரூபாய் வருவாய் கிடைத்து வருகிறது. சில மாதங்களில் 1 லட்சம் கோடியையும் தொட்டுள்ளது. ஜிஎஸ்டி அமலுக்கு முன் 8.5 லட்சம் கோடியாக இருந்த மத்திய அரசின் மறைமுக வரி வருவாய், தற்போது கிட்டத்தட்ட 10 லட்சம் கோடியை தொட்டுள்ளது.

ஜி.எஸ்.டி அமலுக்கு வந்து கிட்டத்தட்ட 2 ஆண்டுகள் நிறைவடையப் போகும் நிலையில், நாடாளுமன்ற தேர்தலும் நெருங்குகிறது.. உண்மையில் இந்த வரி சீர்திருத்தம் பற்றி மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்று அறிய, தந்தி டி.வி, தினத்தந்தி நாளிதழ், மாலை மலர், மாலை மலர் டாட் காம் மற்றும் DT நெக்ஸ்ட் இணைந்து பிரமாண்ட கருத்துக் கணிப்பை நடத்தியது. தமிழகம் முழுவதும் 2500க்கும் மேற்பட்டவர்களிடம் கருத்து கேட்டதில், ஜி.எஸ்.டி வரி விதிப்பிற்கு பிறகு பொருட்கள் மீது கூடுதல் வரி வசூலிக்கப்படுவதாக 82% பேர் தெரிவித்தனர். வரி கூடுதலாக இல்லை என்று 18% பேர் கருத்து தெரிவித்தனர். அதே போல, ஜிஎஸ்டி அமலுக்கு பிறகு வந்த பிறகு விலைவாசி குறைந்துள்ளதா என்ற கேள்விக்கு - இல்லை என்று 86% பேரும், ஆம் என்று 14% பேரும் கூறியுள்ளனர்.

ஜி.எஸ்.டி மூலம் அரசுக்கு வருவாய் அதிகரித்திருப்பது பற்றி கருத்து கேட்ட போது, 24% பேர் இது வரவேற்கத்தக்கது என்றும், 76% பேர் இது மக்கள் மீதான சுமை என்றும் கூறியுள்ளனர். ஜி.எஸ்.டி-யால் சிறு-குறு தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளதா என்ற கேள்விக்கு, 76% பேர் ஆம் என்றும், 9% இல்லை என்றும், 15% பேர் சில இடங்களில் பாதிப்பு இருப்பதாகவும் தெரிவித்தனர். அதே சமயம், பெட்ரோல்-டீசல் விலையை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவர வேண்டுமா என்று கேட்டபோது, அபரிமிதமாக 85% ஆம் என்று பதிலளித்துள்ளனர். 15% பேர் பெட்ரோலை ஜி.எஸ்.டி வரம்புக்குள் கொண்டுவர வேண்டாம் என்று கருதுகின்றனர். இந்த ஜி.எஸ்.டி. எனும் சரக்கு மற்றும் சேவை வரி மற்றும் மக்களின் மனநிலை தொடர்பாக, இன்னும் விரிவான சுவாரஸ்யமான தகவல்கள், கள நிலவரங்களுடன் இன்று இரவு ஒளிபரப்பாக இருக்கும் ஒரு விரல் புரட்சியில் இடம் பெற உள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்