தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் பிறந்தநாளில் அவரது சிலைக்கு அரசு மரியாதை செலுத்தப்படும் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரின் பிறந்தநாளான செப்டம்பர் 27ஆம் தேதி அவரது சிலைக்கு அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் பிறந்தநாளில் அவரது சிலைக்கு அரசு மரியாதை செலுத்தப்படும் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
x
தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரின் பிறந்தநாளான செப்டம்பர் 27ஆம் தேதி அவரது சிலைக்கு அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். 

சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளைக்கு கன்னியாகுமரி மாவட்டம் தேரூரில் ஒரு கோடி ரூபாய் செலவில் உருவச்சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைக்கப்படும் என்றும், அதிலேயே ஒரு நூலகம் அமைக்கப்படும் என தெரிவித்தார். பெரும்பிடுகு முத்தரையருக்கு திருச்சி மாவட்டத்தில் ஒரு கோடி ரூபாய் செலவில் உருவச்சிலையுடன் கூடிய மணிமண்டபம் மற்றும் நூலகம் அமைக்கப்படும் எனவும் குறிப்பிட்டார்

இரட்டைமலை சீனிவாசனுக்கு மதுராந்தகம் அருகே உள்ள கோழியாளம் கிராமத்தில் ஒரு கோடி ரூபாய் செலவில் உருவச்சிலையுடன் கூடிய மணிமண்டபம் மற்றும் அதிலேயே நூலகம் அமைக்கப்படும் எனவும் முதலமைச்சர் அறிவித்தார். வி.கே.பழனிசாமி கவுண்டருக்கு கோவை மாவட்டம் வேட்டைக்காரன் புதூர் பகுதியில் உருவச்சிலையுடன் கூடிய மணிமண்டபம் மற்றும் நூலகமும்,  ஏ.டி.பன்னீர்செல்வத்துக்கு திருச்சியில் 50 லட்ச ரூபாய் செலவில் உருவச்சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைப்பதோடு, அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படும் எனவும் தெரிவித்தார். 

அல்லாள இளைய நாயகருக்கு நாமக்கல் மாவட்டம் ஜேடர்பாளையத்தில் 30 லட்ச ரூபாய் செலவில் குவிமாடத்துடன் உருவச்சிலை, நெல்லை மாவட்டத்தில் உள்ள ஒண்டிவீரன் மணிமண்படம் 75 லட்ச ரூபாய் செலவில் புனரமைக்கப்படும் என்றும், அதிலேயே ஒரு நூலகமும் அமைக்கப்படும் எனவும் அறிவித்தார். தூத்துக்குடி மாவட்டம் கவர்ணகிரியில் வீரன் சுந்தரலிங்கனார் மணிமண்டபத்தை 75 லட்ச ரூபாய் மதிப்பில் புனரமைப்பதோடு, அதில் ஒரு நூலகமும் அமைக்கப்படும் என்றும், முல்லைப் பெரியாறு அணையை கட்டிய ஜான் பென்னி குயிக்கின் பிறந்தநாளான ஜனவரி 15ஆம் நாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் என்றும் தெரிவித்தார். 

காலிங்கராயன் நினைவை போற்றும் வகையில் ஆண்டுதோறும் தை மாதம் 5ஆம் தேதி அரசு விழாவாக கொண்டாடப்படும் என்றும், சென்னை எழும்பூரில் உள்ள வீரன் அழகு முத்துக்கோன் சிலைக்கு ஆண்டுதோறும் ஜூலை 11ஆம் தேதி அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படும் எனவும் சென்னை தியாகராய நகரில் உள்ள ம.பொ.சிவஞானம் சிலைக்கு ஜூன் 26ஆம் தேதி அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படும் என்றும் அறிவித்தார். 

சென்னை எழும்பூரில் உள்ள தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரின் சிலைக்கு அவரின் பிறந்தநாளான செப்டம்பர் 27ஆம் தேதி அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படும் என்றும் முதலமைச்சர் அறிவித்தார். Next Story

மேலும் செய்திகள்