கவிதை பாடி, நட்பை வளர்த்த வாழ்த்து அட்டைகள்.. நவீன கலாச்சார தாக்கத்தில் கரைந்து போன சோகம்..

தைத் திருநாளில் தூரத்து அன்பை சுமந்துவந்த வாழ்த்து அட்டைகள், தற்போதைய நவீன கலாச்சார தாக்கத்தில் கரைந்து போனது சோகத்தின் உச்சம்.
x
மில்லினியம் இயர் என்று அழைக்கப்படும் 2000-மாவது ஆண்டுவரை கடிதப் போக்குவரத்து பல சுகங்களையும், மன சுமைகளையும் தாங்கிய ஒன்றாக இருந்தது. ஆனால், நவீன வரவான செல்போன்களால், குறைந்து போனது கடிதப் போக்குவரத்து. இதன் ஒரு பகுதியாகவே, தீபாவளி, பொங்கல் விழாக்களுக்கு தூரத்து உறவு மற்றும் நட்புகளிடம் இருந்து வந்துசேரும் கடிதங்கள் அற்றுப் போயின. 

தைப் பொங்கல் என்பது விடியல் தொடங்கி, அந்திப் பொழுதுவரை வயலில் உழைக்கும் உழவனுக்கும் காளைகளுக்கும் நன்றி சொல்லும் ஆதித் திருவிழா. அந்நாளில் அவர்களுக்கு நன்றி தெரிவித்து, மரபு காலம் தொட்ட கவிதை வரிகளை தாங்கி வரும் தூரத்து உறவுகளின் வாழ்த்து அட்டை, ஓராண்டு உழைப்பு தழும்பின் மீதான வருடல்.

குடும்ப உறுப்பினர்கள் கூட்டாக இருக்கும் வாழ்த்து அட்டை, ஏர் கலப்பை உழவன், கடவுள் படம் பொறித்த அட்டைகள், பிடித்தமான நடிகர், நடிகைகளின் படம் தாங்கிய வாழ்த்துக் கவிதைகள் என உறவுகளின் வாழ்த்து அட்டைகள் ஏராளம். அத்தை, மாமா குழந்தைகள் இதன் மூலம் காதல் வளர்த்த காலம் அது. 

நவீனகால வரவான செல்போனில் பறக்கும் குறுஞ்செய்தி, இந்த வாழ்த்து மடல்களை முடங்கச் செய்ததில் வியப்பில்லை. இதனால் வாழ்த்து அட்டை தயாரிக்கும் தொழிலும் முடங்கியது. ஆனால், நீண்டநாள் பேசிக்கொள்ளாத  உறவுகளும், வாழ்த்துக் கடிதங்கள் மூலம் சமாதானம் அடைந்ததை நொடியில் தொடர்புகொள்ளும் நவீன செல்போனால் ஈடுசெய்யவில்லை. இந்த விஷயத்தில் மட்டும் புதியன ஒதுக்கி பழையன தொடர வேண்டும் என்பது அச்சகத் தொழிலாளர்களின் கோரிக்கையாக உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்