'ஸ்விக்கி'யின் முதல் பெண் ஊழியர்

ஆன்லைன் மூலம் உணவுகளை டெலிவரி செய்யும் ஸ்விக்கி நிறுவனத்தில், முதல் முறையாக பெண் ஒருவர் இணைந்துள்ளார்.
x
பசிக்கிறதா..? அப்படியென்றால், உணவுகளை வாங்க ஹோட்டல்களுக்கு நேரடியாக செல்ல தேவையில்லை. குறிப்பிட்ட அப்  மூலம் நீங்கள் விரும்பும் ஹோட்டல்களில் ஆர்டர் செய்தால் போதும். உணவு உங்கள் வீட்டிற்கே வரும். இந்த தொகுப்பு உணவைப் பற்றியதல்ல, உணவை டெலிவரி செய்யும் ஒரு பெண்ணை பற்றியது.

உணவு டெலிவரி நிறுவனங்களில், ஆண்கள் பணியாற்றுவது ஆச்சரியமில்லை. வெவ்வேறு நிற டிஷர்ட்களை அணிந்து கொண்டு, பைக்கில் ஆண்கள் வலம் வருவதை பார்த்திருப்போம். ஆனால் தற்போது பெண்களும் வரத் தொடங்கியுள்ளனர். அப்படி, ஸ்விக்கி நிறுவனத்தின் முதல் பெண் ஊழியராக பணிக்கு சேர்ந்தவர் தான், ஜெயலட்சுமி.

சென்னை செங்குன்றத்தில் வசித்து வரும் ஜெயலட்சுமிக்கு இரண்டு பெண் பிள்ளைகள்.. ஒருவர் கல்லூரியில் படிக்கிறார். இன்னொருவர் 12-ம் வகுப்பில் இருக்கிறார். பிள்ளைகளின் படிப்பு செலவுக்காக, டெலிவரி வேலையில் சேர இவர் ஏற்கனவே முயற்சி செய்திருக்கிறார். ஆனால் ஆண்களுக்கு மட்டுமே வாய்ப்பு என்று கூறப்பட்டதால் அவர் பின்வாங்கியிருக்கிறார். பின்னர் ஒருவழியாக வாய்ப்பு கிடைத்தது.. பைக் ஓட்டுவது பிடிக்கும் என்பதால், இந்தப் பணி எளிதாக இருப்பதாக ஜெயலட்சுமி சொல்கிறார்.

ஒரு மாதத்திற்கு முன் பணியில் சேரும் போது செல்போன் ஆப், கூகுள் மேப் உள்ளிட்டவற்றை பயன்படுத்த சிரமப்பட்ட ஜெயலட்சுமிக்கு, சக ஊழியர்கள் பலரும் உதவி செய்துள்ளனர். நாள் ஒன்றுக்கு சுமார் 100 கிலோ மீட்டர் தூரம் பயணிக்கும் இவர், சுமார் 15 ஆர்டர்களை டெலிவரி செய்கிறார். பலரும், தன்னை ஆச்சர்யமாக பார்ப்பதாக கூறும் ஜெயலட்சுமி, இதுவும் ஒரு வேலை தானே என நம்பிக்கையாக சொல்கிறார்..

வாடிக்கையாளர்களும் தன்னை ஊக்குவிப்பதாக பெருமிதம் தெரிவிக்கும் ஜெயலட்சுமி, தன்னைப் பார்த்து மேலும் 4 பெண்கள் பணியில் சேர்ந்துள்ளதாக பெருமிதம் தெரிவிக்கிறார். ஸ்விக்கி போன்ற டெலிவரி நிறுவனங்களில் தற்போது பெண்கள் பணிபுரிய தொடங்கினாலும், முதல் பெண் ஊழியர் என்ற பெருமை ஜெயலட்சுமிக்கே சேரும்.

Next Story

மேலும் செய்திகள்