தடை செய்யப்பட்ட போதை மாத்திரைகள் விற்பனை - துப்பாக்கி முனையில் நைஜீரிய இளைஞர் கைது

மிட்டாய் போல இருக்கும் கொக்கைன் போதை மருந்து
x
சென்னை மதுரவாயல் - தாம்பரம் செல்லும் நெடுஞ்சாலையின் அருகே கொக்கைன் என்ற போதைப் பொருள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் அடையாறு  காவல் துணை ஆணையர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு  மாறுவேடத்தில் போலீசார் சோதனை மேற்கொண்டனர்.  அப்போது மதுரவாயலை சேர்ந்த குமரேசன் என்ற இளைஞர் போதைப் பொருளை இளைஞர்களிடம் விற்றுக் கொண்டிருப்பது தெரிந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 70 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள கொக்கைனை பறிமுதல் செய்தனர். 

பின்னர் குமரேசனை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த போலீசார், அவரிடம் போதைப் பொருள் எங்கிருந்து வந்தது? யார் மூலம் விற்பனை செய்கிறீர்கள்? என்பது உள்ளிட்ட கேள்விகளை எழுப்பினர். அப்போது தான், இந்த போதைப் பொருள் விற்பனையின் பின் நைஜீரிய நாட்டை சேர்ந்தவர் இருப்பது தெரியவந்தது. 

கோவா சென்று வரும் பழக்கமுள்ள குமரேசனுக்கு அங்குள்ள நைஜீரிய இளைஞர்களுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அப்போது தான் அவர்கள் கொக்கைன் மற்றும் தடை செய்யப்பட்ட எக்ஸ்டாஸி என்ற போதை மாத்திரையை அறிமுகப்படுத்தியுள்ளனர். பார்ப்பதற்கு கலர் கலரான மிட்டாய் போலவே தோற்றம் தரும் இந்த எக்ஸ்டாஸி போதை மருந்து 12 மணி நேரம் வரை போதையில் வைத்திருக்குமாம்... இதை விற்றுக் கொடுத்தால் அதிகளவில் கமிஷன் தருவதாக குமரேசனிடம் நைஜீரிய நாட்டை சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர். அவர்களின் வார்த்தையில் மயங்கிய குமரேசன், சென்னையில் அதை விற்பனை செய்ய ஒப்புக் கொண்டுள்ளார். 
சென்னையில் உள்ள சினிமா பிரபலங்கள், விஐபிக்கள், நட்சத்திர விடுதிகளில் நடனம் ஆடுவோர், பார்ட்டிகளில் கலந்து கொள்வோரை குறிவைத்து இந்த போதைப் பொருளை விற்பனை செய்து வந்துள்ளார், குமரேசன். அளவைப் பொறுத்து இதன் விலை ஆயிரம் ரூபாய் முதல் 3 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. போதைப் பொருள் போன்ற வாசனை வராது என்பதோடு, இதை பார்ப்பவர்களுக்கும் சந்தேகம் வராது என்பதால் எளிதாக விற்பனை செய்து வந்ததாக போலீசாரிடம் தெரிவித்துள்ளார் குமரேசன்... 

போரூர் நெடுஞ்சாலையின் அருகே அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் குமரேசனுக்கு நைஜீரிய நாட்டை சேர்ந்த சுக்வா சைமன் ஒபீனா என்ற இளைஞர் கொக்கைனை சப்ளை செய்தது தெரியவந்துள்ளது. இதற்கு உதவியாக சென்னையை சேர்ந்த அருண் திவாகர் என்ற நபரும் இருப்பதாக குமரேசன் காவல்துறையிடம் தெரிவித்தார். 

இதையடுத்து போலீசார் போரூர் அருகே தங்கியிருந்த நைஜீரிய இளைஞரை கைது செய்ய முயன்றனர். அப்போது போலீசாரை பார்த்த அந்த இளைஞர் திடீரென அவர்களை தாக்கிவிட்டு தப்பி ஓட முயன்றார். ஆனால் துப்பாக்கி முனையில் சுக்வா சைமன் ஒபீனாவை சுற்றி வளைத்த போலீசார் அதிரடியாக கைது செய்தனர். மேலும் அவருக்கு உடந்தையாக இருந்த அருண் திவாகரையும் போலீசார் மடக்கி பிடித்தனர். இவர்கள் 3 பேரிடமும் இருந்து சுமார் 10 லட்ச ரூபாய் மதிப்பிலான போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த கும்பலின் பின்னணியில் உள்ளவர்கள் யார் என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது. 

Next Story

மேலும் செய்திகள்