யார் இந்த நெல் ஜெயராமன்...?

174 பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுத்த, நெல் ஜெயராமனைப் பற்றிய செய்தித் தொகுப்பு
x
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகில் உள்ள கட்டிமேடு  கிராமத்தில் ராமசாமி முத்து லட்சுமி தம்பதியின் மகனாக 1965-ல் பிறந்தார், ஜெயராமன். அரசு பள்ளியில் 8 ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்த ஜெயராமன், வறுமையால் படிப்பை தொடர முடியாமல் அச்சகத்தில் வேலைக்கு சேர்ந்தார். பின்னர், 'கிரியேட்டிவ்' என்ற அமைப்புடன் இணைந்து நெல்  குறித்த ஆய்வில் ஈடுபடத் தொடங்கினார். 

விவசாயத்தை பற்றிய அரிய தகவல்களை பெறுவதற்காக, வேளாண் கருத்தரங்குகள் நடக்கும் இடங்களுக்கெல்லாம் செல்ல தொடங்கினார். அப்படி ஒரு கருத்தரங்கில் தான் நம்மாழ்வாரின் அறிமுகம் ஜெயராமனுக்கு கிடைத்துள்ளது.நம்மாழ்வாரை குருவாக ஏற்ற ஜெயராமன்,  அவரின் வேண்டுகோளை ஏற்று. அழிந்து வரும் பாரம்பரிய நெல் ரகங்களை மீட்கும் முயற்சியில் தன்னை அர்ப்பணித்தார். 

அழிவின் விளிம்பில் இருந்த கருப்புக் கவுளி, மாப்பிள்ளை சம்பா, தூயமல்லி, குள்ளக்கார், கிச்சடி சம்பா உள்ளிட்ட 174 பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுத்தார். இதனால், நெல் ஜெயராமன் என விவசாயிகளால் அழைக்கப்பட்டார்.2006 முதல் ஆண்டுதோறும், திருத்துறைப்பூண்டி அருகே ஆதிரெங்கத்தில் தேசிய அளவிலான நெல் திருவிழாவை நடத்தி வந்தார் ஜெயராமன். 

ஒவ்வொரு திருவிழாவிலும் விவசாயிக்கு ஒரு கிலோ விதை நெல்லை வழங்குவதோடு, அடுத்த ஆண்டு, 2 மடங்கு விதை நெல்லை திரும்பக் கொடுக்க வேண்டும் என்று அன்புக் கட்டளை இடுவார், நெல் ஜெயராமன். நெல்லே உணவு மற்றும் மருந்து என கூறுவதோடு ஆண்மை அதிகரிப்பு, கரு வளர்ச்சி, சுகப்பிரசவம், நீரிழிவு நோய் என அனைத்திற்கும் நெல் ரகங்கள் உண்டு என உலகறிய செய்தவர். 

இதற்காக மத்திய, மாநில அரசுகளின் விருதுகளை பெற்றுள்ளார். அழிவின் விளிம்பில் இருக்கும் பாரம்பரிய நெல் ரகங்களை பாதுகாப்பதே, நெல் ஜெயராமனுக்கு விவசாயிகள் செய்யும் அஞ்சலியாக இருக்கும்.

Next Story

மேலும் செய்திகள்