பாலியல் தொழிலுக்கு உடந்தையாக இருந்த காவலர் தலைமறைவு : ஆண்களை மிரட்டி பணம் பறித்து வந்தது அம்பலம்
சென்னையில் ஆண்களை பாலியல் விருப்பத்திற்காக அழைத்து வந்து, அவர்களிடம் காவலர் உதவியுடன் பணம் பறித்து வந்த பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
சென்னை சூளை பகுதியில் வசித்து வரும் ஜெயந்தி என்ற பெண், பாலியல் தொழில் செய்து வருகிறார். இவரை தேடி வரும் ஆண்களிடம் கூடுதலாக பணம் பறிக்கும் நோக்கில் அவர்கள் மீது பொய் புகார் கூறி அடித்து உதைத்து பணம் பறிப்பது இவரது வழக்கமாக இருந்துள்ளது. கடந்த 25ஆம் தேதி விஸ்வநாதன் என்ற நபரிடமும் பணம் பறிக்கும் நோக்கில் ஜெயந்தி ஈடுபட்டுள்ளார். ஆனால் விஸ்வநாதன், காவல்துறையிடம் அளித்த புகாரின் பேரில் போலீசார் நடத்திய விசாரணையில் கோயம்பேட்டை சேர்ந்த பார்த்திபன் என்ற காவலரின் உதவியுடன் ஜெயந்தி பணம் பறித்து வந்தது தெரியவந்தது. சபலத்தோடு வரும் ஆண்களை மிரட்டி அவர்களிடம் பணம் பறிப்பதை இவர்கள் வாடிக்கையாக வைத்துள்ளனர். இதையடுத்து காவலர் பார்த்திபன் மற்றும் ஜெயந்தி இருவர் மீதும் விபச்சார தடுப்பு, பணம் கேட்டு மிரட்டல் தாக்குதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் அமைந்தகரை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். ஜெயந்தியை கைது செய்துள்ள போலீசார், தலைமறைவான காவலர் பார்த்திபனை தேடி வருகின்றனர். இதற்கிடையே, காவலர் பார்த்திபனை சஸ்பெண்ட் செய்து சென்னை மாநகர காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
Next Story

