மாநில உரிமைக்கு எதிராக தேசிய மருத்துவ ஆணையம்?

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய மருத்துவ ஆணைய மசோதா, மாநில உரிமைகளுக்கு எதிராக உள்ளதாக கல்வியாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
மாநில உரிமைக்கு எதிராக தேசிய மருத்துவ ஆணையம்?
x
மருத்துவ கல்லூரிகளுக்கு அனுமதி வழங்குவது மற்றும் அவற்றை கண்காணிப்பது உள்ளிட்ட பணிகளை இந்திய மருத்துவ கவுன்சில் செய்து வருகிறது. இந்த அமைப்பை கலைத்துவிட்டு, இதற்கு பதிலாக 'தேசிய மருத்துவ ஆணையம்' என்ற அமைப்பை உருவாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான மசோதாவை, நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் நிறைவேற்ற, மத்திய அரசு திட்டமிட்டிருக்கிறது.

இந்த மசோதாவானது, மாநில உரிமைகள் மற்றும் கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிராக உள்ளதாகவும், இது நிறைவேறினால் ஏழை மாணவர்களுக்கு மருத்துவக் கல்வி, எட்டாக் கனியாகி விடும் என்றும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. 

தேசிய மருத்துவ ஆணையம் நடைமுறைக்கு வந்தால், மருத்துவ படிப்பு வர்த்தக மயமாகிவிடும் என்றும், 50 சதவீத இடங்களை தனியார் கல்லுாரி நிர்வாகங்களே நிரப்பிக் கொள்ள வழி ஏற்படும் என்றும் கூறப்படுகிறது. 

இதனால், மிக குறைவான மதிப்பெண் எடுத்தும், பணம் இருந்தால் மருத்துவம் படிக்கலாம் என்ற நிலை உருவாகும் என அஞ்சப்படுகிறது. இந்நிலையில், தமிழக அரசின் நெருக்கடியால், நாடாளுமன்ற நிலைக்குழுவின் ஆய்வுக்கு அந்த மசோதா அனுப்பப்பட்டதாக சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் கூறுகிறார். 

மருத்துவ கல்வி சேர்க்கை தொடர்பாக, தேர்தல் பிரசாரத்தின் போது, ஜெயலலிதா கூறியதை நினைவூட்டும் கல்வியாளர்கள், அதிமுக-வின் 37 எம்.பி,க்களும் ஜெயலலிதா அளித்த வாக்குறுதியை நினைவில் கொண்டு, மசோதாவை எதிர்த்து வாக்களிக்க வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.

தேசிய மருத்துவ அணையம் அமைந்தால் மருத்துவ துறையில் முன்னிலையில் உள்ள தமிழகம் மற்றும் பிற மாநிலங்களின் உரிமைகள் பறிபோகும் என்பதால், அந்த மசோதாவை, மக்களவையில் அதிமுக எம்பிக்கள் தோற்கடிக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்