அறுபடை வீடுகளில் ஆறாம் படை வீடான பழமுதிர்ச்சோலை : கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு விழாக்கோலத்தில் கோயில்

அறுபடை வீடுகளில் ஆறாம் படை வீடான பழமுதிர்ச்சோலையின் சிறப்புகள் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்...
அறுபடை வீடுகளில் ஆறாம் படை வீடான பழமுதிர்ச்சோலை : கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு விழாக்கோலத்தில் கோயில்
x
அழகும், தமிழும் சங்கமிக்கும் ஒரு இடமாக இருப்பவர் முருகப்பெருமான்.. சிவபெருமானின் நெற்றிக் கண்ணில் இருந்து தோன்றிய முருகப்பெருமானின் பெருமைகளை விளக்குகிறது அறுபடை வீடுகள்.. இதில் ஆறாம் படை வீடாக இருக்கிறது பழமுதிர்ச்சோலை. மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள இந்த பழமுதிர்ச்சோலையில் அழகிய திருவுருவம் தாங்கி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார் முருகன்... 

தமது புலமையின் காரணமாக கர்வம் கொண்டிருந்த அவ்வைக்கு வாழ்க்கை பாடத்தை முருகன் கற்பித்த தலம் இது என்கிறது வரலாறு. ஆடு மேய்க்கும் சிறுவனாக வந்த முருகப் பெருமான், நாவல் மரத்தின் மீது ஏறி அமர்ந்திருந்த போது, தனக்கு பழத்தை பறித்து போடும் படி கேட்டுள்ளார் அவ்வை. அப்போது அவரிடம் சுட்ட பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா? என கேள்வி எழுப்பிய முருகன், பழத்தை பறித்து போட்டுள்ளார். 

கீழே மணலில் விழுந்த பழத்தை எடுத்த அவ்வை அதில் இருந்த மணலை நீக்குவதற்காக ஊதியுள்ளார். அப்போது அவ்வையை பார்த்த முருகப்பெருமான், என்ன அவ்வையே...பழம் சுடுகிறதா? என கேட்டதால் அவ்வையின் ஆணவம் நீங்கியதாக கூறப்படுகிறது... அவ்வையும் முருகனும் உரையாடிய தலம் இது என்பதை நிரூபிக்கும் வகையில் இன்றும் கோயிலின் தலமாக நாவல் மரம் காட்சி தருகிறது. 

பொதுவாக ஆடி மாதத்தில் பழுக்கும் நாவல் மரம் இந்த தலத்தில் மட்டும் முருகனுக்கு உகந்த ஐப்பசி மாதத்தில் கனிந்து தொங்குவதை பார்க்க முடிகிறது... இது முருகனின் அதிசயமாகவே பக்தர்களால் பார்க்கப்படுகிறது. கோயிலின் மூலவராக காட்சி தரும் முருகன், வள்ளி, தெய்வானையுடன் இத்தலத்தில் காட்சி தருகிறார். 

முருகன் இந்த ஊரில் இருப்பதால் பசுமையும் வளமையும் ஒருங்கே பெற்ற ஊராக காட்சி தருகிறது பழமுதிர்ச்சோலை. மலையடிவாரத்தில் திருமால் காட்சி தரும் தலம் இது. சைவ, வைணவ ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக இந்த தலம் விளங்குகிறது... இந்த தலத்தில் வீற்றிருக்கும் முருகன், வெற்றிவேல் முருகனாக பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். 

கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து வரும் பக்தர்கள் ஆறு நாட்கள் விரதமிருந்து தங்கள் நேர்த்திக் கடனை செலுத்துகின்றனர்... 

கந்த சஷ்டி விழா மட்டுமின்றி, கிருத்திகை, தைப்பூசம், வைகாசி விசாகம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளும் விமரிசையாக நடக்கிறது. திருமணத் தடை உள்ளவர்கள் இந்த கோயிலுக்கு வந்து வழிபாடு நடத்தினால் நினைத்தது கைகூடும் என்ற நம்பிக்கை பக்தர்களிடையே உள்ளது. தன்னை நம்பி வருவோருக்கு எல்லாம் வாரி வழங்கும் வள்ளல் பெருமானாக வீற்றிருக்கிறார் பழமுதிர்ச்சோலை முருகப்பெருமான்... 


Next Story

மேலும் செய்திகள்