24 மணி நேரமும் செயல்படும் மதுரை மாட்டுத் தாவணி மலர்ச்சந்தை

தூங்கா நகரத்தில் திறம்பட செயல்பட்டு வரும் மலர்ச்சந்தை குறித்த தகவல்கள்
24 மணி நேரமும் செயல்படும் மதுரை மாட்டுத் தாவணி மலர்ச்சந்தை
x
தூங்கா நகரமான மதுரையின் பரபரப்புக்கு மத்தியில் செயல்படுகிறது இந்த மலர்ச்சந்தை. 24 மணி நேரமும் செயல்படக் கூடிய சந்தை இது என்பதே இதன் சிறப்புகளில் ஒன்றாக இருக்கிறது. இதன் காரணமாகவே மதுரைக்கு தூங்கா நகரம் என்ற பெயர் வந்ததாம்.

எந்த நேரம் சென்றாலும் வித விதமான பூக்களை வாங்கிச் செல்ல முடியும் என்பதும் மாட்டுத்தாவணி சந்தைக்கு மக்கள் வருகை தருவதற்கு பிரதான காரணமாக இருக்கிறது.

மல்லிகை, முல்லை, கனகாம்பரம், அரளி, செவ்வந்தி, பிச்சிப்பூ, தாமரை, மனோரஞ்சிதம், கோழிக்கொண்டை, பட்டன் ரோஸ் என விதவிதமான பூக்களை இங்கே வாங்கிச் செல்ல முடியும்... பூக்களை இங்கு வந்து மலிவான விலையில் மொத்தமாக வாங்கிச் செல்ல பிற மாநிலங்களில் இருந்தும் வியாபாரிகள் வருகிறார்கள். 

மதுரையின் சிறப்பே மல்லிப்பூ என்பதால் அத்தகைய பெருமை வாய்ந்த மல்லிகைப்பூ விற்பனை இங்கே கனஜோராக நடக்கிறது... மதுரைக்கு வருவோர் மல்லிப்பூவை வாங்காமல் செல்வதில்லையாம்... 

உதிரிப்பூக்களாக விற்கப்படும் பூக்களை வாங்குவோர் ஒரு பக்கம் இருந்தாலும், பூக்களை கட்டும் பணியில் ஏராளமான தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். 

ரோஜாப் பூக்களில் இத்தனை வகை இருக்கிறதா என ஆச்சரியப்படும் அளவிற்கு பட்டன் ரோஸ், ஒயிட் ரோஸ், ரெட் ரோஸ், ஊட்டி ரோஸ், ஒசூர் ரோஸ் என விதவிதமான ரோஸ் வகைகள் இங்கே மலை மலையாக குவித்து வைக்கப்பட்டிருக்கிறது. 

மதுரை மலர் சந்தையின் மற்றொரு சிறப்பு இங்கு அடர்த்தியாக கட்டப்படும் மாலைகள் என்ற பேச்சும் மக்களிடையே உள்ளது. நார் தெரியாத அளவிற்கு மலர்களை நெருக்கமாக வைத்து கட்டுவதால் தனித்துவம் பெற்றதாக செயல்படுகிறது மதுரை மாட்டுத்தாவணி சந்தை. கதம்ப மலர்களை கொண்டு கட்டப்பட்ட மாலை, உடைக்கு ஏற்ற மாதிரியான கல்யாண மாலை என எல்லாம் கிடைப்பதும் இந்த சந்தையின் ஸ்பெஷல்.

எந்த நேரம் சென்றாலும் மாலை கிடைக்கும் என்பதால் பக்கத்து மாவட்டங்களை சேர்ந்தவர்களும் இங்கு வந்து தங்களுக்கு தேவையானதை வாங்கிச் செல்கின்றனர். 

மதுரை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் விளைவிக்கப்படும் பூக்களை வியாபாரிகள் மொத்தமாக இங்கு கொண்டு வந்து விற்பனை செய்கிறார்கள். இதனால் நல்ல கிடைப்பதாகவும் அவர்கள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர். 

தீபாவளி, ஆயுதபூஜை, கிறிஸ்துமஸ் உள்ளிட்ட விழாக் காலங்களின் போது கோடிக்கணக்கில் விற்பனை நடக்கும் சந்தையாக இருக்கிறது மாட்டுத்தாவணி சந்தை.


Next Story

மேலும் செய்திகள்