60 ஆண்டுகள் பாரம்பரியம் கொண்ட சேத்தியாதோப்பு சந்தை...

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள சேத்தியாதோப்பு பகுதியில் செயல்பட்டு வருகிறது இந்த சந்தை.. 60 ஆண்டுகள் பாரம்பரியம் கொண்ட சந்தை என்பது இதன் சிறப்பம்சம்..
60 ஆண்டுகள் பாரம்பரியம் கொண்ட சேத்தியாதோப்பு சந்தை...
x
இங்கு கிடைக்காத பொருட்களே இல்லை எனும் அளவுக்கு அனைத்தும் மலை மலையாக குவித்து வைக்கப்பட்டிருக்கிறது. பச்சை மிளகாய், கத்தரிக்காய், வெங்காயம், தக்காளி, வெண்டைக்காய், உருளைக் கிழங்கு என எல்லா காய்கறிகளும் இங்கு குறைவான விலையில் கிடைக்கிறது. அன்றாட பயன்பாட்டிற்கு 10 ரூபாய் கூறுகளாக வாங்கிச் செல்லும் மக்களும் உண்டு. இங்கிருந்து வாங்கிச் சென்று மற்ற பகுதிகளில் விற்பனை செய்வதற்காக தொடர்ந்து வந்து செல்லும் வியாபாரிகளையும் பார்க்க முடியும்..நாட்டுக் கோழி முட்டைகள், கருவாடு என எல்லாம் கிடைக்கும் ஒரு இடமாக இந்த சந்தை உள்ளது. மத்து, அரிவாள் மனை, கத்தி, கடப்பாறை என இரும்பு சாமான்களையும் மொத்தமாக வாங்கிச் செல்ல ஏற்ற இடம்... பூச்செடிகள், மரக்கன்றுகள் என எல்லாம் குறைவான விலையில் கிடைப்பது இந்த சந்தையில் தான். இதற்காகவே பல மாவட்டங்களில் இருந்தும் மக்கள் இங்கு வருகிறார்கள். அப்பளம், தின்பண்டங்கள், வடகம்  என எல்லாம் இங்கே கிடைக்கிறது. கடலூர் மாவட்டத்தை சுற்றிலும் விவசாயம் பிரதான தொழில் என்பதால் இங்குள்ள விவசாயிகள் தங்கள் பொருட்களை இந்த சந்தைக்கு கொண்டு வந்து விற்பனை செய்கிறார்கள். வாரந்தோறும் புதன் கிழமை நடக்கும் இந்த சந்தையில் கோடிக்கணக்கில் விற்பனை நடக்கிறதாம். அதிலும் விழா நாட்கள் என்றால் விற்பனை களைகட்டுகிறது. 200க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மக்களுக்கு வாழ்வளிக்கும் ஒரு இடமாக இருக்கிறது சேத்தியாத் தோப்பு சந்தை.. 



Next Story

மேலும் செய்திகள்