அக்.10 - உலக மனநல தினம்: பெண்களுக்கு ஏற்படும் மன அழுத்தத்திற்கு தீர்வு என்ன?

கொலைகளும், தற்கொலைகளும் அதிகரித்து வரும் சூழ்நிலையில் மனநலம் சார்ந்த பிரச்சினைகளுக்கு தீர்வு என்ன என்பதை விளக்குகிறது இந்த செய்தித் தொகுப்பு.
அக்.10 - உலக மனநல தினம்: பெண்களுக்கு ஏற்படும் மன அழுத்தத்திற்கு தீர்வு என்ன?
x
பிறந்து ஒரு மாதமே ஆன குழந்தைக்கு பால் கொடுப்பதில் ஏற்பட்ட உடல் ரீதியான சிரமத்தால் அந்த குழந்தையை ஏரியில் தூக்கிப் போட்டு கொலை செய்த பெண். கணவன் மீது ஏற்பட்ட கோபத்தால் ஆசையாக வளர்த்த குழந்தையை தண்ணீரில் அழுத்தி கொலை செய்த பெண். 

இதுபோன்ற கொலை செய்திகளை கடந்து செல்வது அத்தனை எளிதான விஷயமில்லை. காரணம் இதில் கொடூரமாக கொலை செய்யப்பட்டிருப்பது பிஞ்சு குழந்தைகள் என்பது தான் சோகத்தின் உச்சம். இதற்கெல்லாம் காரணம் என்ன என யோசித்தால் பெண்களுக்கு ஏற்படும் மன அழுத்தம் தான். பொதுவாக கருத்தரிக்கும் பெண்களுக்கு அந்த காலத்தில் அதிக அளவிலான மன அழுத்தம் ஏற்படுவது இயற்கையே. காரணம் உடல் ரீதியான மாற்றங்களை அவர்கள் தாங்கிக் கொள்வது அத்தனை எளிதானதல்ல.அதேபோல் குழந்தை பிறந்த பிறகு அதிக அளவில் மன அழுத்தத்திற்கு பெண்கள் அதிகம் ஆளாவதாக புள்ளி விபரம் கூறுகிறது. 

குழந்தை பிறந்த மகிழ்ச்சியில் தந்தை இருந்தாலும் குழந்தையை கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு பெற்ற தாய்க்கு தான். இரவெல்லாம் குழந்தை தூ​ங்காமல் விழித்திருக்கும் போது தாயும் உடன் இருக்க வேண்டும், பச்சிளம் குழந்தைக்கு 2 மணி நேரத்திற்கு ஒரு முறை பாலூட்ட வேண்டும் என்பது போன்ற காரணங்களால் பெண்கள் அதிகம் சோர்வடைவார்கள். 

இந்த நேரத்தில் கணவன் மற்றும் அவரது வீட்டார் பெண்ணுக்கு ஆதரவாக இருக்க வேண்டியது அவசியம். அதுபோல் இல்லாத பட்சத்தில் தான் குழந்தையை வெறுக்க தொடங்குகின்றனர் பெண்கள்.ஆண்களை விட பெண்களுக்கு மன அழுத்தம் ஏற்படுவதற்கு அவர்களுக்கு ஏற்படும் உடல் ரீதியான பாதிப்புகளும் ஒரு காரணமாக இருக்கிறது. குழந்தைகளிடம் எரிந்து விழுவது, அவர்களை சரியாக பராமரிக்காமல் இருப்பது, அவர்களை அடித்து துன்புறுத்துவது எல்லாம் இந்த மன அழுத்தத்தின் ஆரம்ப காலங்கள். இதுபோன்ற அறிகுறி தென்பட்டால் உடனே சிகிச்சை பெற வேண்டியது அவசியம் என்கின்றனர் மனநல மருத்துவர்கள்.

வேலைக்கு செல்லும் பெண்களுக்கு அலுவலகத்தில் ஏற்படும் மன உளைச்சல்களை வீட்டில் குழந்தைகளிடம் காட்டுவதையும் இங்கே பார்க்க முடிகிறது. இதனால் தாங்கள் வெறுத்து ஒதுக்கப்படுவதாக குழந்தைகள் மனதில் பதிந்து விடுகிறது. இதுபோல் பெற்றோரால் புறக்கணிக்கப்படும் குழந்தைகள் பிடிவாதம், கோபம் என அதீத குணாதிசயத்தோடு சமூகத்தை எதிர்கொள்வார்கள்.பிரசவத்திற்கு பிறகு பெண்களுக்கு ஏற்படும் மன அழுத்தத்தை போக்குவதற்காக தான் தலைப் பிரசவத்திற்கு தாய் வீட்டிற்கு பெண்ணை அனுப்பி வைக்கும் வழக்கமும் இருந்திருக்கிறது. பெண்ணின் தாய் குழந்தையை கவனித்துக் கொள்ளும் போது தனக்கும் சற்று ஓய்வு கிடைப்பதால் பெண்கள் தங்கள் சூழலை மகிழ்ச்சியானதாக மாற்றிக் கொள்ள முடியும்.

எனவே சகோதரியாக, தாயாக, மனைவியாக, மகளாக இருக்கும் பெண்களை இங்கே புரிந்து கொள்ள வேண்டியது ஆண்களின் கடமை என்பதை அனைவரும் உணர வேண்டிய தருணமும் இதுவே.

Next Story

மேலும் செய்திகள்