பால் கொடுக்க முடியாததால் பச்சிளம் குழந்தையை கொன்ற தாய்
பால் கொடுக்க முடியவில்லை என பச்சிளங் குழந்தையை பெற்ற தாயே கொலை செய்த சம்பவம் சென்னை வேளச்சேரியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை வேளச்சேரி திரவுபதி அம்மன் கோவில் 5-வது தெருவில் வசிப்பவர் வெங்கண்ணா. ஆந்திராவை சேர்ந்த இவர், தரமணியில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.இவருக்கும் உமா என்பவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. அவர்களுக்கு கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன்பு ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. இந்நிலையில் குழந்தையை காணவில்லை என வேளச்சேரி காவல் நிலையத்தில் வெங்கண்ணா நேற்று புகார் அளித்தார். காற்றுக்காக வீட்டின் வாசல் கதவை பூட்டாமல் திறந்து வைத்து அனைவரும் படுத்திருந்ததாகவும், அதிகாலை எழுந்து பார்த்த போது, குழந்தை காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்ததாகவும் அவர் புகாரில் தெரிவித்திருந்தார். வீட்டின் அருகே பல இடங்களில் தேடியும் குழந்தை கிடைக்க வில்லை என்றும் அவர் குறிப்பிட்டு இருந்தார். இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார், தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
அப்போது குழந்தையின் தாய் உமா முன்னுக்கு பின் முரனாக பேசியதால் போலீசார் சந்தேகம் அடைந்தனர். இதனால் அவரிடம் போலீசார் தனியாக விசாரணை நடத்தினர். அப்போது குழந்தைக்கு தாய்ப்பால் தரும் போது கடுமையான வலி ஏற்பட்டதால் குழந்தையை ஏரி கால்வாயில் வீசியதாக உமா ஒப்புக்கொண்டார். இதனை கேட்டு அதிர்ந்து போன போலீசார், குழந்தையின் சடலத்தை மீட்டு, உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர்.
பால் தர முடியாததால் பச்சிளம் குழந்தையை பெற்ற தாயே கால்வாயில் வீசிய சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Next Story