'20 ரூபாய்' டாக்டர் ஜெகன்மோகன் மறைவு...

20 ரூபாய் டாக்டர் ஜெகன்மோகனின் மறைவு, சென்னையில் ஏழை மக்களை அதிர்ச்சியிலும், பெரும் சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது.
20 ரூபாய் டாக்டர் ஜெகன்மோகன் மறைவு...
x
சென்னை மந்தைவெளியில், 1975-ஆம் ஆண்டு முதல் 2 ரூபாய்க்கு மருத்துவம் பார்க்க ஆரம்பித்தவர் டாக்டர் ஜெகன்மோகன்...  நோயாளிகளிடம் அவர் கடைசியாக வாங்கிய கட்டணம் 20 ரூபாய்.

சந்திரா என்ற பெயரில்  கிளினிக் நடத்தி வந்த மருத்துவர் ஜெகன்மோகனிடம் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை  உள்ளிட்ட தமிழகத்தின் பல மாவட்டங்களில் இருந்து தினமும் சுமார் 100 பேர் மருத்துவம் பார்த்து வந்துள்ளனர். 

கண் பார்வை பாதித்தும், இறுதிவரை மருத்துவம் பார்த்த மருத்துவர் ஜெகன்மோகன், திடீரென நெஞ்சு வலி காரணமாக உயிரிழந்துள்ளது, பலருக்கும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அவசர நிலை பிரகடனத்தின் போது, யாரும் மருத்துவம் பார்க்காத நேரத்தில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு, ஜெகன்மோகன் சிகிச்சை அளித்ததாக நெகிழ்ச்சியுடன் கூறுகிறார், அவரது நண்பர் ஞானசம்பந்தம்..

தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகை நாளிலும்கூட கிளினிக்கிற்கு விடுமுறை விட்டதில்லை. எத்தனை மணி நேரமாக இருந்தாலும் நோயாளிகளை மனம் நோகாமால் பார்ப்பார் என கண்ணீர் மல்க சொல்கிறார், ஜெகன்மோகனிடம்  28 ஆண்டுகளாக பணியாற்றிய ஓட்டுநர்...

உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த தனது மகனை சிகிச்சை அளித்து மீட்டதால், மருத்துவரை தெய்வமாகவே பார்த்ததாக கூறுகிறார், சுமதி என்பவர்..

ஏழை மக்களுக்கு மிக குறைந்த விலையில் தரமான மருந்தை தான்  மருத்துவர் ஜெகன்மோகன் எழுதி கொடுப்பார் என்று தெரிவிக்கிறார், அவரது கிளினிக் எதிரில் மருந்தகம் வைத்துள்ள நாகராஜ்..

ஏழை, நடுத்தர மக்களுக்காக  மருத்துவத்தை சேவை மனப்பான்மையுடன் பார்த்து வந்த மருத்துவர் ஜெகன்மோகன், திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாவூரில், 1942-ஆம் ஆண்டு டிசம்பர் 27-ஆம் தேதி பிறந்தவர்... 

கம்பவுண்டராக இருந்து ஸ்டான்லி மருத்துவக்கல்லூரியில் மருத்துவம் படித்த ஜெகன்மோகன், அரசு மருத்துவராக சென்னையில் பணிபுரிந்துள்ளார். மருத்துவர் ஜெகன்மோகனின் மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பு என்பதே நிதர்சனம்..

Next Story

மேலும் செய்திகள்