தங்கம் முதல் தானியம் வரை மலிவான விலையில் விற்கப்படும் சந்தை

தமிழகத்தில் நடக்கும் ஒரு வாரச்சந்தையில் தங்கம் விற்பனை செய்யப்படுகிறது என்றால் நம்ப முடிகிறதா நம்மால்...? அப்படிப்பட்ட ஒரு ஆச்சரிய சந்தை குறித்து இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்..
தங்கம் முதல் தானியம் வரை மலிவான விலையில் விற்கப்படும் சந்தை
x
கிருஷ்ணகிரி மாவட்டத்தின் அடையாளங்களில் ஒன்றாக இருக்கிறது போச்சம்பள்ளி சந்தை... தமிழகத்தின் பிரபலமான சந்தைகளில் 2 வது இடம் என்ற பெருமை அந்த  சந்தைக்கு உண்டு .. நகரமயமாக்கலுக்கு மத்தியில் பழமையையும், அதன் பெருமையையும் தாங்கி நின்று சுடர்விடும் சந்தையாக இருப்பதே இதன் சிறப்பு... 

காரணம் இங்கு கிடைக்காத பொருட்களே இல்லை எனும் அளவுக்கு அனைத்தும் மலை மலையாக குவித்து வைக்கப்பட்டிருக்கின்றன. ஆங்கிலேயர் காலத்தில் தொடங்கப்பட்ட இந்த சந்தையானது பல நூற்றாண்டுகளை கடந்து திறம்பட செயல்பட்டு வருகிறது. 

5 ஏக்கர் பரப்பளவில் எப்போதும் சுறுசுறுப்பாக காட்சியளிக்கும் இந்த சந்தையில் காய்கறிகள், கீரைகள், பழங்கள் என எல்லாம் கிடைக்கிறது. வட மாவட்டங்களின் பிரதான சாகுபடியான நவதானியங்களும், சிறுதானியங்களும் அதிகம் விற்பனை செய்யப்படும் இடம் இது... 

ஞாயிற்றுக் கிழமை அதிகாலை 4 மணிக்கே களை கட்ட தொடங்கி விடுகிறது இந்த சந்தை... நாட்டுக்  கோழிகள், ஆடுகள், உழவு மாடுகள், பால் மாடுகள், கோழிக் குஞ்சுகள் என எல்லாம் இங்கு விதவிதமாக கிடைக்கிறது... 

விதவிதமான அரிசி வகைகள் மூட்டைகளாக விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் வெல்லம், மிளகாய், மளிகை சாமான்கள் என எல்லாவற்றையும் இங்கே மலிவாக வாங்கிச் செல்ல முடியும்... 

தமிழகத்தில் எங்கும் இல்லாத அதிசயமாக தங்கம் விற்பனை செய்யப்படும் சந்தையாக இருக்கிறது. சந்தைக்கு வரும் மக்கள் தங்கத்தையும், வெள்ளியையும் பார்த்து நிதானமாக வாங்கிச் செல்கிறார்கள்.. 

இயற்கையின் அத்தியாவசியத்தை உணர்த்தும் மூங்கில் கூடைகள், முறம், பாய், மண் பாத்திரங்கள்  எல்லாம் தரமாகவும் அதேநேரம் மலிவாகவும் கிடைக்கிறது. பாக்கெட்டுகளில் அரைத்து விற்கப்படும் மசாலா பொடிகளை வாங்கிய நமக்கு இங்கு சில்லறையில் எடை போட்டு விற்பனை செய்யப்படுகிறது.. 

காய்கறிகளை மொத்தமாக மூட்டைகளில் வாங்கிச்  சென்று மற்ற ஊர்களில் விற்பனை செய்யும் வியாபாரிகள் இங்கு அதிகம் வருகிறார்கள். காரணம் இந்த சந்தையில் விலை குறைவு என்பதே... 

எலெக்ட்ரானிக் பொருட்கள் உட்பட எல்லாமே இங்கு கிடைப்பதால் அனைத்து தரப்பு மக்களையும் கவரும் ஒரு இடமாக, கிட்டத்தட்ட திருவிழா போலவே காட்சி தருகிறது போச்சம்பள்ளி சந்தை...


Next Story

மேலும் செய்திகள்