ஒசூர் : மக்களின் ஏகோபித்த வரவேற்புடன் இயங்கி வரும் ஒரு பிரம்மாண்ட சந்தை

ஒசூர் அருகே மக்களின் ஏகோபித்த வரவேற்புடன் இயங்கி வரும் ஒரு பிரம்மாண்ட சந்தை குறித்து இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்...
ஒசூர் : மக்களின் ஏகோபித்த வரவேற்புடன் இயங்கி வரும் ஒரு பிரம்மாண்ட சந்தை
x
ஒசூர் அருகே கெலமங்கலம் பகுதியில் இயங்கி வருகிறது நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த சந்தை... விவசாயிகளும் பொதுமக்களும் சங்கமிக்கும் இந்த இடத்தில் கிடைக்காத பொருட்களே இல்லை எனும் அளவிற்கு எல்லாம் மலை மலையாக குவித்து வைக்கப்பட்டிருக்கிறது... 

ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக் கிழமைகளில் நடக்கும் இந்த சந்தைக்கு பல கிராமங்களை சேர்ந்த மக்கள் வருகிறார்கள். அதிகாலை 4 மணிக்கே வியாபாரம் களை கட்ட தொடங்கி விடுகிறதாம்... பாரம்பரியம் குறையாத இந்த சந்தையில் நாட்டு மாடுகள், கறவை மாடுகள், வண்டி மாடுகள், உழவு மாடுகள் என எல்லாம் கிடைக்கிறது... 

அதேபோல் சண்டைக்கோழிகள், நாட்டுக் கோழிகளும் இங்கு விற்பனை செய்யப்படுகிறது. இறைச்சிக்காக வாரந்தோறும் வந்து கோழிகளை வாங்கிச் செல்லும் வியாபாரிகளும் உண்டு... அதேபோல் ஆடு, மாடுகளுக்கு தேவைப்படும் கயிறுகள், அலங்கார மணிகளும் இங்கு குறைவான விலையில் விற்பனை செய்யப்படுகிறது... 

கெலமங்கலத்தை சுற்றியுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களில் விளைவிக்கப்படும் காய்கறிகள், பழங்கள், பூக்கள் இவற்றை எல்லாம் விற்பனை செய்யும் இடமாக இது இருக்கிறது... 

நாட்டு காய்கறிகளை தாண்டி முட்டைகோஸ், கேரட் போன்ற மலைப்பகுதியில் பயிரிடப்படும் காய்கறிகளையும் குறைவான விலையில் வாங்கிச் செல்ல ஏற்ற இடம் இது.. 

அதேபோல் தேங்காய், வெற்றிலை போன்ற அத்தியாவசிய பொருட்களும், மண்பாண்டங்கள், ஓலையினால் செய்த பொருட்களையும் இங்கே வாங்கிச் செல்ல முடியும்... விவசாய இடுபொருட்களும் குவித்து வைக்கப்பட்டிருப்பதை இங்கு பார்க்க முடியும்... 

குறைவான விலையில் இயற்கையாக விளைவிக்கப்பட்ட வாழைப்பழங்கள், சீப்பு, கண்ணாடி போன்ற பேன்சி பொருட்களும் கிடைக்கும் ஒரு சந்தையாக கெலமங்கலம் சந்தை இயங்கி வருகிறது. பல பகுதிகளில் இருந்து துணிகளை வியாபாரம் செய்ய வருவோரும் அதிகம்... 

கர்நாடக மாநிலத்தை ஒட்டிய பகுதி என்பதால் அந்த மாநிலங்களை சேர்ந்த வியாபாரிகளும் இங்கு வந்து விற்பனை செய்ய ஆர்வம் காட்டுகிறார்கள். 

வாரந்தோறும் சமையலுக்கு தேவையான அத்தனை பொருட்களையும் வாங்கிச் செல்வதால் பணம் சேமிக்கப்படுவதாகவும் மக்கள் கூறுகிறார்கள்... நேரடியாக தோட்டத்தில் விளைவிக்கப்பட்ட காய்கறிகள் பர்ஸை பதம் பார்க்காத குறைவான விலையில் கிடைப்பதும் இந்த சந்தையின் சிறப்பு... 

சந்தைக்கு சென்று வர போதுமான பேருந்து வசதிகளும் உள்ளதால் மக்கள் எளிதில் வந்து செல்ல பேருதவியாக இருக்கிறது... 

கர்நாடகா மற்றும் தமிழக எல்லையில் உள்ள சுமார் 100க்கும் மேற்பட்ட கிராம மக்களுக்கு வாழ்வளிக்கும் சந்தையாக இது உள்ளது என்பதே சிறப்பானதாக இருக்கிறது... 


Next Story

மேலும் செய்திகள்