கும்பகோணம் ஜெகன்னாத பெருமாள் கோவிலின் சிறப்புகள்...

108 திவ்ய தேசங்களுள் ஒன்றான கும்பகோணம் ஜெகன்னாத பெருமாள் கோயில் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்..
கும்பகோணம் ஜெகன்னாத பெருமாள் கோவிலின் சிறப்புகள்...
x
* தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த நாதன்கோயில் பகுதியில் இருக்கிறது ஜெகன்னாத பெருமாள் கோயில்..  திருப்பதி பெருமாளுக்கு அண்ணனாக கருதப்படும் இவர் யோக ஸ்ரீனிவாசன், ஜெகன்னாத பெருமாள், விண்ணகர பெருமாள், ஸ்ரீனிவாச பெருமாள் என பல பெயர்களில் அழைக்கப்படுகிறார். 

* பெருமாளுடன் செண்பக வல்லி தாயார் கருணையின் உருவாக காட்சி தருகிறார். தன்னிடம் அடைக்கலமான புறாவுக்காக தன் சதையை காணிக்கையாக கொடுத்த கடையேழு வள்ளல்களில் ஒருவரான சிபி சக்கரவர்த்திக்கு பெருமாள் காட்சி தந்து அருளிய தலம் என்கிறது கோயிலின் வரலாறு. 

* திருப்பதி பெருமாளுக்கு அண்ணனாக ஜெகன்னாத பெருமாள் இருப்பதால் திருப்பதி செல்ல முடியாதவர்கள் இங்கு வந்து இவரை வழிபட்டால் அனைத்து வரங்களும் கிடைக்கும் என்பதும் மக்களின் நம்பிக்கை. 

* சோழர்களால் கட்டப்பட்ட கோயில் இது என்பதும் 108 திவ்ய தேசங்களில் 21வது இடம்  பெற்ற கோயில் என்பதும் இந்த கோயிலுக்கு விசேஷம். 

* வைகாசி விசாகம், மார்கழி, நவராத்திரி உற்சவம், தை அமாவாசை, புரட்டாசி மாதம் என விழா நாட்களில் கோயிலில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடப்பது வழக்கம். 

* ஒவ்வொரு வளர்பிறை அஷ்டமியிலும் சுக்லபட்ச அஷ்டமி ஹோமம் நடத்தப்படுகிறது. இந்த ஹோமத்தில் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தால் மாங்கல்ய தடை நீங்கும் என்கிறார்கள். அதேபோல் கருத்து வேறுபாடுகளால் பிரிந்த தம்பதியர் ஒன்று சேர இங்கு வந்து சுவாமியை வணங்கிச் சென்றால் அவர்கள் இல்லத்தில் மீண்டும் மகிழ்ச்சி திரும்பும் என்பதும் ஐதீகம்.

* புரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமைகளில் எல்லாம் கோயில் விழாக்கோலம் பூண்டிருக்கும். காய்ச்சல், நரம்பு சம்பந்தப்பட்ட நோய்கள் உள்ளவர்கள் இந்த கோயிலில் வந்து சுவாமியை வணங்கிச் சென்றால் நோய்கள் நீங்கி நல்வாழ்வு கிடைக்கும் என்பது நம்பிக்கை... கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு சுவையான பிரசாதம் வழங்கப்படுவதும் உண்டு. 

* மூலஸ்தானத்தில் நந்தியும் பிரம்மனும் பெருமாளை வணங்கிய நிலையில் இருப்பதும் இந்த கோயிலின் சிறப்பாக உள்ளது. பல சிறப்புகள் அடங்கிய இந்த கோயிலுக்கு பக்தர்கள் செல்வதற்கு ஏதுவாக அதிகளவில் பேருந்து வசதிகள் செய்து தரப்பட வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாக இருக்கிறது.


Next Story

மேலும் செய்திகள்