சமூக சீர்திருத்தவாதி இரட்டைமலை சீனிவாசனின் நினைவு தினம் இன்று...

சுதந்திர போராட்ட வீரரும், சமூக சீர்திருத்தவாதியுமான இரட்டை மலை சீனிவாசனின் வாழ்க்கை பற்றிய சில தகவல்கள்
சமூக சீர்திருத்தவாதி இரட்டைமலை சீனிவாசனின் நினைவு தினம் இன்று...
x
காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம் அருகில் உள்ள கோழியாளம் என்ற இடத்தில், ஜூலை 7ஆம் தேதி, 1859 ஆம் ஆண்டில், ஒரு விவசாயக் குடும்பத்தில், இரட்டைமலை சீனிவாசன் பிறந்தார். குடும்ப வறுமை, சாதியக் கொடுமைகளால், அவரது குடும்பம் தஞ்சைக்கும், பின்னர் கோவைக்கும் குடிபெயர்ந்தது. தஞ்சையில், பள்ளிப் படிப்பை மீண்டும் தொடர்ந்த அவர், கல்லூரிப் படிப்பைக் கோவையில் முடித்தார். 1887ஆம் ஆண்டில் ரெங்கநாயகி அம்மாள் என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் மற்றும் 4 ஆண் குழந்தைகள் பிறந்தனர்.

கல்லூரிப் படிப்பிற்குப் பின்னர், எழுத்தராக நீலகிரியில் உள்ள நிறுவனத்தில் பணிபுரிந்தார். பத்து ஆண்டுகள் அங்கு பணியாற்றிய அவர், 1890ல் சென்னைக்கு வந்தார். 1891ல் 'பறையர் மகாசன சபை' என்ற அமைப்பை தொடங்கினார். 1900ம் ஆண்டில், தென்னாப்பிரிக்கா சென்றவர்,  மொழி பெயர்ப்பாளராக நீதிமன்றத்தில் பணியில் சேர்ந்தார். 1921ல் அவர் இந்தியா திரும்பினார். 1923ஆம் ஆண்டு, சென்னை மாகாண சட்டசபை உறுப்பினராக நியமனம் செய்யப்பட்ட அவர், 1924ல் ஒரு முக்கியமான தீர்மானத்தை முன்மொழிந்தார். 

'பொது வழியில் எந்தவொரு சாதிப் பாகுபாடின்றி, யார் வேண்டுமானாலும் நடக்கலாம். பள்ளர், பறையர் என்று அழைக்கப்படாமல், ஆதிதிராவிடர் என்று அழைக்கப்பட வேண்டும், மது ஒழிப்பு, ஆலய நுழைவு போன்ற தீர்மானங்களை கொண்டு வந்தார். மணியக்காரர் முறை ஒழிக்கப்பட வேண்டுமென்றும், அவர் கோரிக்கை விடுத்தார்.

லண்டனில் நடைபெற்ற வட்டமேஜை மாநாடுகளில் அம்பேத்கருடன் அவர் கலந்துகொண்டார். தாழ்த்தப்பட்ட மக்களின் விகிதாச்சார அளவுக்கு ஏற்ப கல்வி, வேலை வாய்ப்பில் உரிய பங்கு அளிக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தினார். இரட்டைமலை சீனிவாசன், செப்டம்பர் 18ஆம் தேதி, 1945 ஆம் ஆண்டில், பெரியமேடு என்னும் இடத்தில் உயிரிழந்தார். 

2000ம் ஆண்டில், இரட்டைமலை சீனிவாசனுக்கு அஞ்சல் தலை வெளியிட்டு, மத்திய அரசு சிறப்பு செய்தது.


Next Story

மேலும் செய்திகள்