60 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்டமாக செயல்பட்டு வரும் புதுக்கோட்டை சந்தை
புதுக்கோட்டையில் நூற்றாண்டுகளை கடந்து செயல்பட்டு வரும் ஒரு சந்தை குறித்து இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்...
மாதாந்திர பொருட்களை வாங்கிச் செல்ல சூப்பர் மார்க்கெட்டில் வரிசையில் காத்திருக்கும் நகரவாசிகளுக்கு சந்தையின் பெருமை என்பது நிச்சயம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை...
மக்களும் வியாபாரிகளும் நேரடியாக சங்கமிக்கும் இடமே சந்தைகளாக உருவெடுத்தன. அப்படிப்பட்ட சந்தைகளில் திறம்பட இயங்கி வரும் சந்தையாக உருவெடுத்து நிற்கிறது புதுக்கோட்டை சந்தை...
60 ஏக்கர் பரப்பளவில் மிகப் பிரம்மாண்டமாக செயல்பட்டு வரும் இந்த சந்தையில் கிடைக்காத பொருட்களே இல்லை எனும் அளவுக்கு பொருட்கள் கொட்டிக் கிடக்கின்றன.
விவசாய நிலங்களில் இயற்கையாக விளைவிக்கப்பட்ட காய்கறிகள், பழங்கள், பூக்கள் என எல்லாம் இங்கு மலிவாகவே கிடைக்கிறது... மலை மலையாக குவித்து வைக்கப்பட்டிருக்கும் காய்கறிகள், பழங்களை மொத்த விலையில் வாங்கிச் சென்று சில்லரை வியாபாரம் செய்யும் வணிகர்களும் உண்டு..
மளிகை சாமான்களை மொத்தமாக வாங்கிச் செல்ல ஏற்ற இடமும் இது என்பதால் தங்கள் மாதாந்திர சாமான்களை வாங்கிச் செல்ல வருவோர் அதிகம்...
வாழை விவசாயத்தை நம்பியிருக்கும் விவசாயிகள் வாழைத் தார்களை மொத்தமாக கொண்டு வந்து இங்கு விற்பனை செய்கிறார்கள். விதவிதமான வாழைப்பழங்களை குறைவான விலையில் வாங்கிச் செல்ல மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.
வாரந்தோறும் வெள்ளிக் கிழமைகளில் நடக்கும் இந்த சந்தைக்கு வியாழக்கிழமையே பணிகள் ஆயத்தமாகிறது. கூடை, விசிறி, முறம் போன்ற மூங்கில் பொருட்களை வாங்கிச் செல்ல ஏற்ற இடம் இது.
மீன், நண்டு, இறால் போன்ற கடல் உணவுகளும் ப்ரெஷ்ஷாக அதே நேரம் மலிவாகவே கிடைக்கிறது.
கருவாடு வகைகளும் இங்கு வெரைட்டியாக கிடைக்கிறது. புதுக்கோட்டையை சுற்றியுள்ள பல கிராமங்களுக்கு இந்த சந்தையே பிரதானம். குறைவான பணத்தில் அதிகமான பொருட்களை வாங்கி செல்ல முடியும் என்பதால் வாரந்தோறும் இங்கு வரும் மக்களையும் பார்க்க முடியும்.
ஒவ்வொரு வாரமும் கோடிக்கணக்கில் விற்பனை நடக்கும் இடமாக இந்த சந்தை செயல்படுகிறது. மக்கள் கூட்டத்தில் திருவிழா போல காட்சி தரும் இதுபோன்ற சந்தைகள் பலருக்கு வாழ்வளிக்கும் இடமாகவே இயங்கி வருகிறது...
Next Story