மாமல்லபுரம் : சுனாமியை எதிர்கொண்ட கம்பீர கற்கோவில்

உலக அளவில் பாரம்பரிய சின்னமாக விளங்கும் மாமல்லபுரம் கடற்கரை கோவிலின் மகத்துவத்தை விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு...
மாமல்லபுரம் : சுனாமியை எதிர்கொண்ட கம்பீர கற்கோவில்
x
காஞ்சிபுரம் மாவட்டம்,  மாமல்லபுரத்தில்  கடற்கரையில் அமைந்துள்ள இந்த கோவில் ஏழாம் நூற்றாண்டில் இரண்டாம் நரசிம்மவர்ம பல்லவ மன்னரால் கட்டப்பட்டது. முழுவதும் கருங்கல்லினால் கட்டப்பட்ட இந்த கோவிலில்  சத்திரியாசிம்மேஸ்வரம் மற்றும் ராஜசிம்மேஸ்வரம் என்ற இரு விமானங்கள் உள்ளன..   சிவனும், விஷ்ணுவும் இரு கருவறையில் வீற்றிருக்கிறார்கள் என்பது  கோவிலின் மற்றொரு சிறப்பு.

தொழில்நுட்ப வசதி இல்லாத காலத்தில் கட்டப்பட்ட இந்த கோவில்,  இயற்கை பேரிடரை தாங்கும் விதத்தில் கட்டப்பட்டிருப்பது பல்லவ மன்னர்களின் கலைத்திறனுக்கு சான்று.

யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட பாரம்பரிய சின்னங்களின் வரிசையில் இந்த கோவில் இடம் பெற்றுள்ளது...மாமல்லபுரம் கடற்கரையில் மொத்தம் 7 கோவில்கள் இருந்ததாகவும் அவற்றில் 6 கோவில்கள் கடலில் மூழ்கிவிட்டதாகவும் கூறப்படுகிறது. அதே போல் 2004 ஆம் ஆண்டில் சுனாமி  தாக்கிய போதும் ,  எந்த பாதிப்பும் இன்றி  கடற்கரை கோவில் கம்பீரமாக காட்சியளித்து வருகிறது.

சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி இந்தியாவிற்கு அரசு முறை பயணமாக வருகை தரும் வெளிநாட்டு அதிபர்கள் மற்றும் பிரதமர்கள் கூட இந்த கோவிலின் எழிலை ரசிப்பதில் மகிழ்ச்சி அடைகிறார்கள். 1975 ஆம் ஆண்டு இந்த கோவிலுக்கு வருகை தந்த அப்போதைய  பிரதமர் இந்திரா காந்தி , இதனை பாதுகாக்க தொல்லியல் துறைக்கு உத்தரவிட்டார்.

கடல் அலைகள் கோவிலுக்குள் வராதபடி கடற்கரை முழுவதும் கற்களை கொட்டி  தொல்லியல் துறையினர் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டனர்.
அதுமட்டுமின்றி, தடுப்பு சுவர் மற்றும் சவுக்கு மரங்களை வளர்த்தும் பாதுகாப்பு அரண்களை ஏற்படுத்தி உள்ளனர். கோவில் சிற்பங்கள் உப்பு காற்றினால் பாதிக்கப்படாமல் இருப்பதற்காக,  ஆறு மாதங்களுக்கு ஒருமுறை ரசாயன கலவை பூசப்பட்டு வருகிறது.

கடற்கரை கோவில் வளாகத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதற்கும், புகை பிடிப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மனிதர்கள் விடும் மூச்சுக்காற்றால் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறி கோவிலின் இரண்டு கருவறைக்குள் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப் படுவதில்லை.

காலத்தை தாண்டி , தமிழகத்தின்  கலைத்திறனை  உலகிற்கு வெளிப்படுத்தி வரும், கடற்கரை கோவிலை தொல்லியல் துறையினர் கூடுதல் கவனத்துடன்   பாதுகாக்க வேண்டும் என்பதே பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்