சி.பி.எஸ்.இ. பள்ளிகளை ஆய்வு செய்ய தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளது - உயர் நீதிமன்றம்
தமிழகத்தில் உள்ள சி.பி.எஸ்.இ. பள்ளிகளை ஆய்வு செய்ய தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளது என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ், தமிழகத்தில் உள்ள அனைத்து சி.பி.எஸ்.இ. மற்றும் ஐ.சி.எஸ்.இ. பள்ளிகள் அங்கீகார சான்றிதழ் பெற வேண்டும் என்று மார்ச் இரண்டாம் தேதி தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது.
அங்கீகாரச் சான்றிதழ் பெறாமல் இயங்கும் பள்ளிகளுக்கு நாளொன்றுக்கு 10 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதனை எதிர்த்து சி.பி.எஸ்.இ. பள்ளிகள் சங்கம் தொடர்ந்த வழக்கில், அரசாணைக்கு இடைக்கால தடை விதித்து நீதிபதி மகாதேவன் உத்தரவிட்டிருந்தார்.
உயர்நீதிமன்ற தடையால் பள்ளிகளை ஆய்வு செய்ய முடியவில்லை என, கல்வித்துறை செயலாளர் சார்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு தலைமை நீதிபதி அமர்வு முன் விசாரணைக்கு வந்தபோது, கல்வி உரிமைச் சட்டத்தில், மாநில அரசுகளிடம் அங்கீகாரம் பெறவேண்டும் என்றும், சி.பி.எஸ்.இ. பாடத் திட்ட விவகாரத்தில் அரசு தலையிடாது எனவும் தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதிட்டார்.
இதனை ஏற்றுக் கொண்ட தலைமை நீதிபதி அமர்வு, அரசாணைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி நேற்று உத்தரவிட்டது.
மேலும் சி.பி.எஸ்.இ., பள்ளிகளை ஆய்வு செய்யும் அதிகாரம் தமிழக அரசுக்கு உண்டு என்று உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.
Next Story