தமிழகத்தில் 2 ஆண்டுகளில் 429 காவலர்கள் தாக்கப்பட்டுள்ளனர் - அதிர்ச்சி தகவல்

தமிழகத்தில் 2 ஆண்டுகளில் 429 காவலர்கள் தாக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. இதுதொடர்பாக தந்தி டி.வி.க்கு கிடைத்துள்ள பிரத்யேக தகவல்களை தற்போது பார்க்கலாம்...
தமிழகத்தில் 2 ஆண்டுகளில் 429 காவலர்கள் தாக்கப்பட்டுள்ளனர் - அதிர்ச்சி தகவல்
x
காவல்துறையில் பணியாற்றும் காவலர்கள் மீது கடந்த சில மாதங்களாக நடத்தப்படும் தாக்குதல்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன. ஆனால் கடந்த 2015 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் சுமார் 429 காவலர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக மாநில குற்ற ஆவண காப்பகத்தின் பதிவு தெரிவிக்கிறது.

தீவிரவாதிகளால் தாக்கப்பட்டவர்கள், கலவரத்தில் தாக்கப்பட்டவர்கள், குற்றவாளிகளால் தாக்கப்பட்டவர்கள் மற்றும் விபத்தில் மரணமடையும் காவலர்கள் என எட்டு பிரிவுகளாக அதில் பிரிக்கப்பட்டிருக்கிறது. அதில் 2015ஆம் ஆண்டு கலவரங்கள் மற்றும் கூட்டங்கள் கூடிய பகுதியில் பணியாற்றிய 54 காவலர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதில் அவர்கள் படுகாயமடைந்தனர்.

அதே ஆண்டு காவலர்கள் மீது குற்றவாளிகள் நடத்திய தாக்குதலில் ஒரு ஆய்வாளர், 5 காவல் உதவி ஆய்வாளர்கள் உட்பட 34 பேர் காயமடைந்தனர். 

இதேபோல் 2016 ஆம் ஆண்டு கலவரம் மற்றும் பெரும் கூட்டங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 6 பேர் காயமடைந்தனர். 

குற்றவாளிகளால் நடத்தப்பட்ட தாக்குதலில் ஒரு காவல்துறை உயர் அதிகாரி உட்பட மொத்தம் 38 காவலர்கள் காயம் அடைந்ததாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு பிரிவுகளில் மட்டும் கடந்த 2015, 16 ஆண்டுகளில் 130 போலீசார் காயம் அடைந்துள்ளனர். 

மேலும்  2015 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் விபத்துக்களின் மூலம் சுமார் 299 காவலர்கள் காயம் அடைந்துள்ளனர். 

மொத்தம் இந்த 2 ஆண்டுகளில் 429 காவல் துறையினர் பல்வேறு சம்பவங்களில் படுகாயமடைந்துள்ளனர்.

சென்னையை பொருத்தவரை பாதுகாப்புப் பணியில் சுமார் 22  ஆயிரம் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களில் கடந்த இரண்டு மாதங்களில் 20 பேர் மீது கொடூரமான தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. 

கடந்த மே மாதம் நெல்லையில் காவலர் ஜெகதீசன் துரை என்பவர் மணல் திருட்டு கும்பலால் கொலை செய்யப்பட்டார். அதே போல கடந்த வாரம் காஞ்சிபுரம் சுங்குவார்சத்திரத்தில் முதல்நிலை காவலர் மோகன்ராஜ் ரவுடி கும்பலால் கொலை செய்யப்பட்டார். காவல் துறையினர் மீது நடத்தப்படும் தாக்குதல்கள், மாநிலத்தின் பாதுகாப்புக்கு சமூக விரோதிகள் விடும் சவாலாகவே பார்க்கப்படுகிறது... 


Next Story

மேலும் செய்திகள்