சிறுமி ஹாசினி கொலை வழக்கு: தூக்கு தண்டனையை எதிர்த்து தஷ்வந்த் மேல்முறையீடு - உயர்நீதிமன்றத்தில் இன்று தீர்ப்பு

சிறுமி ஹாசினி கொலை வழக்கில் செங்கல்பட்டு நீதிமன்றம் விதித்த தூக்கு தண்டனையை ரத்து செய்ய கோரி தஷ்வந்த் தாக்கல் செய்துள்ள மேல் முறையீட்டு மனு மீது சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்க உள்ளது.
சிறுமி ஹாசினி கொலை வழக்கு: தூக்கு தண்டனையை எதிர்த்து தஷ்வந்த் மேல்முறையீடு - உயர்நீதிமன்றத்தில் இன்று தீர்ப்பு
x
சென்னை போரூரை சேர்ந்த 6 வயது சிறுமி ஹாசினியை கடத்தி, பலாத்காரம் செய்து கொன்றதாக 2017ம் ஆண்டு பிப்ரவரியில், தஷ்வந்த் என்பவர் கைது செய்யப்பட்டு குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த நிலையில், தஷ்வந்த் மீது போடப்பட்ட குண்டர் சட்டத்தை சென்னை உயர்நீதிமன்றம் 2017 செப்டம்பர் மாதம் ரத்து செய்தது. இதையடுத்து, செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றம், தஷ்வந்துக்கு ஜாமீன் வழங்கியது.

ஜாமீனில் வெளிவந்த தஷ்வந்த், 2017 டிசம்பர் 2ம் தேதி தனது தாயார் சரளாவை  கொலை செய்து விட்டு தலைமறைவானார். பின் டிசம்பர் 7ம் தேதி மும்பையில் அவர் மீண்டும் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் சிறுமி ஹாசினி கொலை வழக்கை விசாரித்த செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றம், 35 பேர் அளித்த சாட்சியத்தின் அடிப்படையில், கடந்த பிப்ரவரி 19ம் தேதி தஷ்வந்த்துக்கு தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

இதையடுத்து தண்டனையை எதிர்த்து தஷ்வந்த் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அதில், வழக்கில் தொடர்புடைய சான்றுப்பொருட்களை பறிமுதல் செய்ததில் உரிய சட்டவிதிமுறைகள் கடைபிடிக்கப்படவில்லை என்பதால் தனக்கு விதித்த தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என கோரியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் விமலா, ராமதிலகம்  அடங்கிய அமர்வு, தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்திருந்த நிலையில்,  இன்று தீர்ப்பு வெளியாக உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்