ரத்த தானம் செய்வதில் ஆர்வமாக இருக்கும் மக்கள், சிறப்பாக பணியாற்றும் ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனை

பல்வேறு நோய்களால் அவதிப்படுவோருக்கு உதவும் வகையில், நாளொன்றுக்கு குறைந்தது 400 பேருக்கு ரத்தம் வழங்கி வரும் அரிய பணியை செய்து வருகிறது சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனை.
ரத்த தானம் செய்வதில் ஆர்வமாக இருக்கும் மக்கள், சிறப்பாக பணியாற்றும் ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனை
x
ரத்த தானம் தொடர்பான விழிப்புணர்வு  இன்று மக்களிடையே அதிகம் காணப்படுகிறது. குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் ரத்த தானம் குறித்த ஆர்வமும், மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணமும் அதிகமாகவே உள்ளது. பொதுமக்கள் தானமாக கொடுக்கும் ரத்தத்தை சேமித்து வைக்க பல்வேறு ரத்த வங்கிகள் உள்ளன. தமிழகத்தின் மிகப்பெரிய ரத்த வங்கியாக சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையின் ரத்த வங்கி உள்ளது. 

பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் ரத்தத்தை முறையாக பராமரித்து அதை தேவைப்படுவோருக்கு உரிய நேரத்தில் கொடுக்கும் பணியை செய்து வருகிறது இந்த ரத்த வங்கிகள் தான்.

அதன்படி சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு, பொதுமக்கள் தானமாக கொடுக்கும் ரத்தமே பயன்படுத்தப்படுகிறது. புற்றுநோய், தீவிர சிகிச்சை பிரிவு உள்ளிட்ட 40 வகையான துறைகள் செயல்படும் இந்த மருத்துவமனையில் ரத்த தானத்தால் பயனடையும் நோயாளிகள் அதிகம்.

முறையான இடைவெளியில் ரத்த தானம் செய்வதால் பலருடைய வாழ்வில் ஒளியேற்ற முடியும் என்கிறார் ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையின் ரத்த வங்கியின் பொறுப்பாளர் சுபாஷ்.

நடிகர்கள், அரசியல் கட்சித் தலைவர்களின் பிறந்தநாள் போன்ற நிகழ்வுகளின் போது ரத்த தானம் கொடுக்க பலரும் முன்வருவார்கள். அதேபோல் உதவி தேவைப்படுவோருக்கு வழங்கவும் இன்று பல இளைஞர்கள் முன் வருகின்றனர். மற்றவர்களுக்கு உதவுவதன் மூலம் மனதிருப்தி ஏற்படுவதாகவும் அவர்கள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர். 

முகம் தெரியாதவர்களுக்கு உதவ முன்வரும் ஒவ்வொருவரும் பாராட்டுக்கு உரியவர்களே.

Next Story

மேலும் செய்திகள்