ஒலிம்பிக் பளு தூக்குதலில் மீராபாய் சானு வெள்ளி வென்றிருந்தாலும்; ஒலிம்பிக்கில் தடுமாறும் இந்திய அணி

ஒலிம்பிக் பளு தூக்குதலில் மீராபாய் சானு வெள்ளி வென்றிருந்தாலும், முக்கிய பிரிவுகளில் இந்திய அணி பதக்க வாய்ப்பை நழுவவிட்டுள்ளது. தற்போது வரை முக்கிய பிரிவுகளில் பதக்க வாய்ப்பை இழந்தவர்கள் விவரத்தை பார்ப்போம்.
ஒலிம்பிக் பளு தூக்குதலில் மீராபாய் சானு வெள்ளி வென்றிருந்தாலும்; ஒலிம்பிக்கில் தடுமாறும் இந்திய அணி
x
ஒலிம்பிக் தொடர் தொடங்கிய அடுத்த நாளிலேயே பளுதூக்குதலில் வெள்ளி வென்று தாயகத்திற்கு பெருமை தேடி தந்தார் வீராங்கனை மீராபாய் சானு. இதனை ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தாலும், அடுத்தடுத்த நாட்கள் ரசிகர்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தையே தந்தன. பதக்கம் வெல்வார்கள் என நம்பப்பட்டவர்கள், தோல்வியை தழுவியது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது..

குறிப்பாக துப்பாக்கிச்சுடுதலில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் சவுரப் சவுத்ரி, அபிஷேக் வர்மா மகளிர் பிரிவில் இளவேனில் வாலறிவன், அபூர்வி சண்டேலா, மானு பாக்கர் பதக்க வாய்ப்பை நழுவவிட்டது ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்தது. ஒற்றையர் பிரிவில் 8 பேரில் சவுரப் சவுத்ரி மட்டுமே இறுதிப்போட்டி வரை முன்னேறினார்.

இதேபோல வில்வித்தையில் கலப்பு இரட்டையர் பிரிவில் தீபிகா குமாரி - பிரவீன் ஜாதவ் ஜோடியும், ஆடவர் அணியும் காலிறுதியில் தோல்வியை தழுவின. டேபிள் டென்னிஸில் கலப்பு இரட்டையரில் சரத் கமல் - மணிகா பத்ரா இணையும், ஆடவர் ஒற்றையர் பிரிவில் சத்யன் முதல் சுற்றிலேயே வெளியேறி ஏமாற்றமளிக்க, மகளிர் ஒற்றையரில் கடுமையாக போராடிய மணிகா பத்ரா மூன்றாவது சுற்றில் தோல்வி அடைந்தார். குத்துச்சண்டையில் மூன்றாவது முறையாக ஒலிம்பிக்கில் பங்கேற்ற விகாஷ் கிருஷண் மற்றும் மணிஷ் கவுசிக் முதல் சுற்றோடு வெளியேறினர். டென்னிஸில் சானியா மிர்சா - அங்கீதா ரெய்னா இணை முதல் சுற்றிலும், இளம் வீரர் சுமித் நாகல் இரண்டாவது சுற்றுடன் வெளியேறினர்.

வாள்வீச்சு போட்டியில் முதன்முறையாக ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்று முதல் சுற்றில் வென்று அசத்திய பவானி தேவி இரண்டாவது சுற்றில் தோல்வி அடைந்து வெளியேறினார். ஹாக்கியில் ஆடவர், மகளிர் அணிகள் தடுமாறி வருவது ரசிகர்களை ஏமாற்றமடைய வைத்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்