"ரிங்" வெளியே நடந்த குத்துச் சண்டை - சீனியர் மேரிகோம் - ஜூனியர் நிகாத் ஜரீன் மோதல்

குத்துச்சண்டையில் இந்திய இளம் வீராங்கனை நிகாத் ஜரீனை வீழ்த்தி மூத்த வீராங்கனை மேரிகோம் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க தகுதிபெற்றுள்ளார். ஆனால் அவருடன் கைகுலுக்கிக் கொள்ள மறுத்ததால் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
ரிங் வெளியே நடந்த குத்துச் சண்டை - சீனியர் மேரிகோம் - ஜூனியர் நிகாத் ஜரீன் மோதல்
x
ஒலிம்பிக் போட்டிக்கான தகுதி சுற்று குத்துச்சண்டை போட்டி சீனாவில் பிப்ரவரி மாதம் நடக்கிறது. இந்த போட்டிக்கான இந்திய பெண்கள் குத்துச்சண்டை அணியை தேர்வு செய்வதற்கான தகுதி போட்டி டெல்லியில் உள்ள இந்திரா காந்தி ஸ்டேடியத்தில் இரண்டு நாட்கள் நடந்தது.

இதில் 51 கிலோ உடல் எடைப் பிரிவின் இறுதி சுற்றில் 6 முறை உலக சாம்பியன் மேரிகோம் - ஜூனியர் முன்னாள் உலக சாம்பியன் நிகாத் ஜரீன் இடையே நேற்று போட்டி நடைபெற்றது. 

ஏற்கனவே, தெலுங்கானாவைச் சேர்ந்த 23 வயது வீராங்கனை நிகாத் ஜரீன், 36 வயது மணிப்பூரை சேர்ந்த வீராங்கனை மேரிகோம் இடையே கருத்து மோதல் நிலவி வந்தது. 

மேரிகோமுக்கு எந்த சலுகையும் வழங்கக்கூடாது என்றும் அவரையும் தகுதி போட்டி நடத்தியே அணிக்கு தேர்வு செய்ய வேண்டும் என்றும் பேசியதே இந்த கருத்து மோதலுக்கு காரணம்.

மேரிகோமை தன்னுடன் மோத வைக்க வேண்டும் என்றும் நிகாத் ஜரீன்  மத்திய விளையாட்டுத்துறைக்கு நிகாத் கடிதம் எழுதியிருந்தார்.  

இத்தகைய சூழலில் மேரிகோம் - நிகாத் ஜரீன் குண்டுச்சண்டை போட்டியில் நேருக்கு நேர் நின்றதால் மைதானத்தில் பரபரப்பு நிலவியது. ஆனால் 9-1 என்ற கணக்கில் நிகாத் ஜரீனை மேரிகோம் எளிதில் சாய்த்து ஒலிம்பிக் போட்டிக்கு செல்லும் இந்திய அணியில் தனது இடத்தை உறுதி செய்தார். 

இருப்பினும் கோபத்தில் காணப்பட்ட மேரிகோம், ஆட்டம் முடிந்ததும் அவருடன் கைகுலுக்கிக் கொள்ள மறுத்துவிட்டார்ர். நிகாத் ஜரீன் கட்டிஅணைக்க வந்த போது, மேரிகோம் ஒதுங்கிக் கொண்டார்.  

தேர்வுக்கு வர மாட்டேன் என்றும் நிகாத் ஜரீனுடன் மோதமாட்டேன் என்றும் ஒருபோது தாம் கூறியதில்லை என மேரிகோம் தெரிவித்தார்.

தேவையில்லாத சர்ச்சையில் தனது பெயரை இழுத்த நிகாத் ஜரீனுடன் தாம் ஏன் கைகுலுக்க வேண்டும்? என மேரிகோம் கேள்வி எழுப்பினார்.

மற்றவர்கள் தனக்கு மதிப்பு அளிக்க வேண்டும் என நிகாத் ஜரீன் விரும்பினால், முதலில் அவர் மற்றவர்களை மதிக்க வேண்டும் என்றும் மேரிகோம் ஆவேசமாக தெரிவித்தார்.

குத்துச்சண்டை களத்தில் மேரிகோம் நடந்து கொண்ட விதம் தனக்கு வேதனை அளிப்பதாக நிகாத் ஜரீன் தெரிவித்துள்ளார். ஜூனியர் வீராங்கனையான தன்னை போட்டி முடிந்ததும் பரஸ்பரமாக கட்டித்தழுவி இருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்றும், ஆனால் அதற்கு அவர் முன்வரவில்லை என்றும் நிகாத் ஜரீன் குறிப்பிட்டார். 

குத்துச்சண்டை களமான ரிங்கை தாண்டியும் இந்திய சீனியர் - ஜூனியர் வீராங்கனைகள் கருத்து மோதலை வெளிக்காட்டிக்கொண்டது சலசலப்பையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்