உலக கோப்பை கிரிக்கெட் தொடர்களில் இந்திய அணியின் செயல்பாடுகள்

உலக கோப்பை கிரிக்கெட் தொடர்களில் இந்திய அணியின் செயல்பாடுகளை விவரிக்கிறது இந்த தொகுப்பு.
உலக கோப்பை கிரிக்கெட் தொடர்களில் இந்திய அணியின் செயல்பாடுகள்
x
1975ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற முதல் உலக கோப்பை தொடரில் 8 அணிகள் பங்கேற்றன. இந்திய அணி லீக் சுற்றில் கிழக்கு ஆப்பிரிக்காவுடன் வெற்றி, இங்கிலாந்து,நியூசிலாந்து அணிகளுடன் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறியது.முதலாவது உலக கோப்பை தொடரை வெஸ்ட் இண்டிஸ் அணி வென்றது. இரண்டாவது உலக கோப்பை தொடர் 1979ம் ஆண்டு மீண்டும் இங்கிலாந்தில் நடைபெற்றது. லீக் சுற்றில் வெஸ்ட் இண்டிஸ், நியூசிலாந்து, இலங்கையுடன் மோதிய இந்திய அணி மூன்றிலும் தோல்வியுற்று வெளியேறியது. 1983ம் ஆண்டு உலக கோப்பை தொடரில் இந்திய அணி கபில் தேவ் தலைமையில் களமிறங்கியது. வெஸ்ட் இண்டிஸ் அணி ஹாட்ரிக் பட்டம் வெல்லும் என பலரும் எதிர்பார்த்த நிலையில் இந்திய அணி இறுதி ஆட்டத்தில் வெஸ்ட் இண்டிஸை வீழ்த்தி கோப்பையை வென்றது..

1987ம் ஆண்டு நடைபெற்ற உலக கோப்பை தொடரை இந்திய மற்றும் பாகிஸ்தான் நாடுகள் இணைந்து நடத்தின. அதுவரை 60 ஓவர்களாக நடத்தப்பட்ட போட்டி, இந்த முறை 50 ஒவர்களாக குறைக்கப்பட்டது. சாம்பியன் பட்டத்தை இந்தியா தக்க வைக்கும் என பலரும் எதிர்பார்த்த நிலையில் அரையிறுதியில் இங்கிலாந்திடம் தோல்வியுற்று வெளியேறியது. இறுதிப்போட்டியில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி ஆஸ்திரேலியா அணி சாம்பியன் பட்டம் வென்றது. 1992ம் ஆண்டு நடைபெற்ற உலக கோப்பை தொடரில் இந்திய அணி இரண்டு ஆட்டங்களில் மட்டும் வெற்றி பெற்று தொடரில் இருந்து வெளியேறியது. இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான் அணி இறுதிப்போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி உலக கோப்பையை கைப்பற்றியது.

1996ம் ஆண்டு நடைபெற்ற 6வது உலக கோப்பை தொடரை இந்திய, இலங்கை, பாகிஸ்தான் நாடுகள் இணைந்து நடத்தின. அரை இறுதி ஆட்டத்தில் 252 ரன் இலக்கை நோக்கி விளையாடிய இந்தியா, 120 ரன்னுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது. அப்போது இந்திய ரசிகர்கள் மைதானத்திற்குள் செய்த கலவரத்தால் ஆட்டம் கைவிடப்பட்டு இலங்கை வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. 

7வது உலக கோப்பை தொடர் 1999ம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்றது. பேட்டிங்கில் சச்சின், கங்குலி, டிராவிட், மற்றும் அசாருதினும், பந்து வீச்சில் ஸ்ரீநாத், கும்ளே, வெங்கடேஷ் பிரசாத் இடம் பெற்று இருந்ததால் இந்தியா மீண்டும் சாம்பியன் பட்டம் வெல்லும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் சூப்பர் சிக்ஸ் சுற்றில் இந்தியா அணி 6வது இடம் பிடித்து வெளியேறியது. இறுதிப்போட்டியில்  பாகிஸ்தானை வீழ்த்தி ஆஸ்திரேலியா சாம்பியன் பட்டத்தை  வென்றது. 2003ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற உலக கோப்பை தொடரில் கங்குலி தலைமையில் இந்திய அணி களமிறங்கியது. தொடர் முழுவதும் சிறப்பாக செயல்பட்ட இந்தியா இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் வீழ்ந்தது.  

2007ம் ஆண்டு நடைபெற்ற உலக கோப்பை தொடரில் இந்திய அணி பெர்முடாவுடன் மட்டும் வெற்றி பெற்று லீக் சுற்றுடன் வெளியேறியது. இதனால் விரக்தி அடைந்த ரசிகர்கள் வீரர்களின் வீடுகளுக்கு முன் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். 2011-ல் 10வது உலக கோப்பை தொடரை இந்தியா மற்றும் இலங்கை நாடுகள் இணைந்து நடத்தின. 28 ஆண்டுகளுக்கு பிறகு உலகக் கோப்பையை தோனி தலைமையிலான இந்திய அணி வென்றது. 2015ம் ஆண்டு நடைபெற்ற உலக கோப்பை தொடரில் இந்திய அணி அரையிறுதி வரை முன்னேறியது. இந்த தொடரில் ஆஸ்திரேலிய அணி சாம்பியன் பட்டம் வென்றது. 

இந்தநிலையில், 12வது உலக கோப்பை தொடர் இங்கிலாந்தில் தொடங்கியுள்ளது. முன்னாள் கேப்டன் தோனி பங்கேற்கும் கடைசி உலக கோப்பை தொடர் என்பதால், இந்திய அணி அவருக்காக சாம்பியன் பட்டம் வெல்ல வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்