விராட் கோலி மீது விழும் விமர்சனங்கள்... உலகக் கோப்பையை வெல்வாரா விராட் கோலி
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி, கேப்டனாக சொதப்புவதாக கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி, கேப்டனாக சொதப்புவதாக கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. உலக கோப்பை நெருங்கும் வேளையில் கோலியின் கேப்டன்ஷிப் மீது எழும் விமர்சனங்கள் இந்திய ரசிகர்களை பெரும் கவலைக்குள்ளாக்கி இருக்கிறது. அடுத்த சச்சின் டெண்டுல்கர் என கிரிக்கெட் உலகமே புகழும் வீரர், விராட் கோலி... காரணம் பேட்டை சுழற்றும் அவரின் வேகம்...
RUN MACHINE என ரசிகர்களால் அழைக்கப்படும் கோலி, கேப்டனாக சமீப காலங்களில் சொதப்பி வருகிறார். வெளிநாட்டில் தொடர்களை வென்ற இந்திய அணி, 10 ஆண்டுகளுக்கு பிறகு சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியை தழுவியது, ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஐ.பி.எல் தொடரில் கோலி தலைமையேற்று வழிநடத்தி வரும் பெங்களூரு அணி தொடர்ந்து 6 போட்டிகளில் தோல்வியை தழுவியுள்ளது. இதனால் கோலி ரசிகர்கள் கலக்கத்தில் உள்ளனர்.
இந்திய அணிக்கு விளையாடும் போது முக்கிய கட்டத்தில் தோனி உள்ளிட்டவர்களின் ஆலோசனையை கேட்டு அதன்படி கோலி செயல்படுவார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி 3 ஒருநாள் போட்டியின் போது தோனிக்கு ஓய்வு அளிக்கப்பட்ட நிலையில், சில தவறான முடிவை கோலி எடுத்ததால், தொடரை இழக்க நேரிட்டதாக கூறப்படுகிறது. ஐ.பி.எல். தொடரில் பெங்களூரு அணி வீரர்கள் சொதப்பினாலும், அவர்களை சரியான வழியில் நடத்த கோலியும் முயற்சிக்கவில்லை என விமர்சனம் முன்வைக்கப்படுகிறது.
ஐ.பி.எல். தொடரில் சென்னைக்கு எதிரான முதல் ஐ.பி.எல். ஆட்டத்தில் பெங்களூரு அணியில் 2 சுழற்பந்துவீச்சாளர்களை மட்டுமே வைத்து கோலி விளையாடினார். ஆனால், தோனி 5 சுழற்பந்துவீச்சாளர்களுடன் விளையாடி வெற்றி பெற்றார். ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்து, தவறு இழைத்தது. கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் 205 ரன்கள் குவித்தும், தோல்வியை தழுவியது போன்று பெங்களூரு அணியின் தோல்வியில் கோலிக்கும் முக்கிய பங்கு உள்ளது. பந்துவீச்சாளர்கள் ரன்களை வாரி கொடுத்தால், அவர்களிடம் சென்று பேசாமல், எனக்கு என்ன வந்தது என்று எல்லை கோட்டில் கோலி நிற்பதாக ரசிகர்களும் குற்றஞ்சாட்டுகின்றனர்.
தொடர் தோல்விகளால் ஏற்படும் மன சோர்வு விராட் கோலியை தாக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. இது அவரது பேட்டிங்கிலும் எதிரொலித்தால், உலகக் கோப்பை தொடரில் இந்தியாவுக்கு அது பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். 2011ஆம் ஆண்டு முதல் பெங்களூரு அணியின் கேப்டனாக இருக்கும் விராட் கோலி, ஒரு முறை கூட ஐ.பி.எல். கோப்பையை வென்று தந்தது இல்லை. பேட்டிங்கில் மிரட்டும் கோலி, கேப்டனாக சிறப்பாக செயல்படவில்லை என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் கம்பீரும் குற்றஞ்சாட்டி உள்ளது குறிப்பிடத்தக்கது.
Next Story