உலகின் டாப் 5 விளையாட்டுகள்...
பதிவு : ஜூன் 18, 2018, 05:09 PM
உலகின் டாப் 5 விளையாட்டுகள்...
5 - வாலிபால் : 90 கோடி ரசிகர்கள்

உலக அளவில் இந்த விளையாட்டுக்கு 90 கோடி ரசிகர்கள் இருக்கிறார்கள். 30 அடி அகலம் கொண்ட ஒரு கட்டத்துக்குள் இரு அணிகள் எதிரெதிர் பக்கம் நின்று பந்தை எதிர்பக்கமாக தட்டுவதுதான் வாலிபால். ஒரு அணிக்கு 6 வீரர்கள் இருப்பார்கள். உலகிலேயே மிகச்சிறிய ஆடுகளத்துக்குள் அதிக வீரர்கள் சேர்ந்து ஆடும் ஆட்டம் இதுதான். உலக விளையாட்டுகளின் வரிசையில் வாலி பால் ஒரு குழந்தை மாதிரி. இந்த விளையாட்டு உருவாக்கப்பட்டு ஜஸ்ட் ஒன்றேகால் நூற்றாண்டுதான் ஆகிறது. அமெரிக்காவைச் சேர்ந்த உடற்பயிற்சி ஆசிரியர் William Morgan என்பவர்தான் வாலி பாலை வடிவமைத்தார். டென்னிஸ், கைப்பந்து. கூடைப்பந்து போன்ற விளையாட்டுகளை கலந்து கிளறிக் கிண்டி இந்த விளையாட்டை இவர் உருவாக்கினார். உருவான நாளில் இருந்து மிக வேகமாக புகழ் பெறத் துவங்கிய வாலிபால், 1964ம் ஆண்டில் இருந்து ஒலிம்பிக்கிலும் இடம் பெற்றுவிட்டது. ரொம்பவே சுறுசுறுப்பான விளையாட்டு வாலிபால். இந்த ஒவ்வொரு வாலிபால் விளையாட்டின் போதும் சராசரியாக ஒரு வீரர் 300 முறை எம்பிக் குதிக்கிறாராம். இந்த விளையாட்டுக்கு மேலும் கவர்ச்சி சேர்ப்பதற்காகத்தான் பீச் வாலிபால் என ஒன்றையும் உருவாக்கியிருக்கிறார்கள். சன்பாத் எடுக்கக் கூடிய சிக்கன உடையில் வீராங்கனைகள் பங்கு பெறும் அசத்தல் விளையாட்டு இது. பந்து தரையில் படாமல் இரண்டு அணிகளும் தட்டிக் கொண்டே இருந்தால் வாலிபால் விளையாட்டு பல மணிநேரத்துக்கு நீளும். வடக்கு கரோலினா பகுதியில் அப்படி மிக நீண்ட வாலிபால் விளையாட்டு விளையாடப்பட்டிருக்கிறது எவ்வளவு நேரத்துக்கு தெரியுமா? எழுபத்தி ஐந்தரை மணிநேரத்துக்கு. மணிக்கணக்கில் நீண்டாலும் விளையாடுபவருக்கும் சரி... பார்ப்பவருக்கும் சரி அலுப்பே தட்டாது என்பதுதான் வாலி பாலின் சிறப்பு!

4 - டென்னிஸ் : 100 கோடி ரசிகர்கள்

உலகம் முழுவதும் நூறு கோடி ரசிகர்களைக் கொண்டிருக்கும் சுவாரஸ்ய விளையாட்டு இது. தனி நபர் பிரிவி இரட்டையர் பிரிவு என டென்னிஸ் இருவகையாக ஆடப்படுகிறது. வலைத்தடுப்பைத் தாண்டி எதிரணியின்  கட்டத்துக்குள் பந்தைத் தட்டுவது அதை எதிராளி திருப்பியடிக்க முடியாமல் செய்வதும் தான் இந்த விளையாட்டின் சிறப்பம்சம். ஆஸ்திரேலியன் ஓபன்,  ஃப்ரென்ச் ஓபன், விம்பிள்டன், யு.எஸ் ஓபன் போன்றவை டென்னிஸ் விளையாட்டின் முக்கிய போட்டிகள். இவை நான்கையும் ஜெயிக்கும் வீரர்தான்  கிராண்ட் ஸ்லாம் என அழைக்கப்படுகிறார். விளையாட்டுகள் எல்லாமே பெரும்பாலும் ஆண்களுக்கானதாகத்தான் இருக்கும். பெயரளவில்தான் பெண்கள் அதனை விலையாடுவார்கள். ஆனால் டென்னிஸ் இதற்கு நேரெதிர். சில சமயம் ஆண்கள் டென்னிஸை விடவும் பெண்கள் டென்னிஸுக்கு அதிக ரசிகர்கள் உண்டு. ஸ்டெஃபி கிராஃப், மார்டினா ஹிங்கிஸ், மரியா ஷரபோவா போன்றவர்கள் டென்னிஸ் வீராங்கனைகளாக மட்டும் இல்லாமல் கவர்ச்சிக் கன்னிகளாகவும் திகழ்ந்தார்கள். அந்த விதத்தில் சமீபத்திய டென்னிஸ் தேவதை Caroline Wozniacki. டென்னிஸின் பூர்வீகம் ஃப்ரான்ஸ்  என்று சொல்லப்படுகிறது. 12 ஆம் நூற்றாண்டிலேயே ஃப்ரென்சு மன்னர்கள் வெறும் கைகளால் பந்தைத் தட்டி தங்கள் அந்தப்புரத்திலேயே டென்னிஸ்  விளையாடினார்களாம். டெனிஸ் என்ற ஃப்ரெஞ்சு வார்த்தைக்கு "இந்தா வாங்கிக்கொள்" என்று அர்த்தம். பந்தை அடிக்கும் போது எதிராளியைப் பார்த்துச் சொல்லும் வார்த்தை இது. அதே போல டென்னிஸில் இரண்டு தரப்பினரும் எந்த மதிப்பெண்ணும் எடுக்காதிருக்கும் நிலை லவ் ஆல் என அழைக்கப்படுகிறது. இந்த லவ்வுக்கு காதல் என அர்த்தம் இல்லை. பழங்கால ஃப்ரென்ச் மொழியில் லவ் என்றால் முட்டை என்று அர்த்தமாம்.

3 - ஹாக்கி : 220 கோடி ரசிகர்கள்

வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் இருந்தே விளையாடப்பட்டு வரும் பழமையான  விளையாட்டு ஹாக்கி. இந்தியாவின் தேசிய விளையாட்டும் இதுதான். உலகின் டாப் 5  விளையாட்டுகளின் பட்டியலில் இது பிடிப்பது மூன்றாம் இடம். கிட்டத்தட்ட கால்பந்து போலவே இரு பக்கமும் கோல் போஸ்டுகள் வைத்து  விளையாடப்படும் ஆட்டம் ஹாக்கி. இரண்டு அணிகளும் ஒரே சமயத்தில் களத்தில்  இருப்பார்கள். ஒரு அணிக்கு 11 பேர். வளைந்த மட்டை ஒன்றால் சிறிய பந்தை விரட்டிச்  சென்று கோல் அடிக்க வேண்டும். அதிக கோல்கள் போடும் அணிக்கே வெற்றி.  ஆதிகாலத்தில் ஆடு மாடு மேய்க்கும் சிறுவர்கள் இப்படித்தான் நுனியில் வளைந்த  குச்சிகளை கையில் வைத்திருந்தார்கள். பழங்கால ஃப்ரென்சு மொழியில் இந்தக் குச்சி hoquet  என அழைக்கப்பட்டிருக்கிறது. இந்தச் சொல்லில் இருந்து பிறந்ததுதான் ஹாக்கி. முன்னணி விளையாட்டுகளிலேயே எக்கச்சக்க உட்பிரிவுகள் கொண்ட விளையாட்டு  ஹாக்கிதான். பனிக்கட்டி மைதானத்தில் பந்து வைத்து விளையாடப்படும் ஹாக்கி Bandy  என அழைக்கப்படுகிறது. ரஷ்யாவில் இது மிகப் பிரபலம். ரஷ்ய ஹாக்கி என்றும் இது  அழைக்கப்படுகிறது. இதே பனி மைதானத்தில் தட்டையான ஒரு மரக்கட்டையை வைத்து விளையாடினால் அது  ஐஸ் ஹாக்கி என அழைக்கப்படும். சாதாரண ஹாக்கி விளையாட்டையே ஸ்கேட்டிங் ஷூ அணிந்து சறுக்கி சறுக்கி  விளையாடினால் அதுதான் ரோலர் ஹாக்கி. இது போல எக்கச்சக்கமான ஹாக்கி வகைகள் இருந்தாலும், சாதாரண ஹாக்கி  மைதானத்தில், ஹாக்கி மட்டையும், ஹாக்கி பந்தும் கொண்டு விளையாடப்படும்  விளையாட்டுதான் அனைத்துக்கும் மையம். ஃபீல்டு ஹாக்கி எனப்படும் இந்த விளையாட்டு  ஒலிம்பிக் விளையாட்டுகளில் ஒன்று. இது தவிர காமன்வெல்த் விளையாட்டுகளிலும்  ஹாக்கி உள்ளது. நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை உலகக் கோப்பை போட்டிகளும்  ஹாக்கியில் நடைபெறுகிறது. ஒலிம்பிக் ஹாக்கியில் எட்டு முறை தங்கம் வாங்கி  இன்றைக்கும் முதலிடத்தில் இருக்கிறது  நம் இந்தியா. ஆனால், கடைசியாக இந்தியா தங்கம் வென்றது 1980ல்தான் அதன் பிறகு  இந்திய மக்கள் கிரிக்கெட் பக்கம் கவனம் செலுத்த ஆரம்பித்துவிட்டதால் ஹாக்கி  ஆதரவின்றி போய்விட்டது. ஆனாலும் உலகம் முழுவதும் இருநூற்று இருபது கோடி  ரசிகர்கள் இந்த விளையாட்டை உயிராக நேசிக்கிறார்கள்.

2 - கிரிக்கெட் : 

உலகமெங்கும் இந்த விளையாட்டுக்கு 250 கோடி ரசிகர்கள் இருக்கிறார்கள்.  ஐரோப்பாவில் பிறந்த விளையாட்டு என்றாலும் ஆசியாவில்... அதிலும் குறிப்பாக  இந்தியாவில் இதற்கு ரசிகர்கள் அதிகம். கிரிக்கெட் உலகின் பிதாமகர்கள் என அழைக்கப்படும் கபில் தேவ், கவாஸ்கர், சச்சின்,  தோனி போன்றவர்களை உருவாக்கி பெருமை கொண்ட நாடு இந்தியா. கிரிக்கெட் ஒரு மதம்  என்றால் சச்சின் டெண்டுல்கள் அதன் கடவுள் என ஒரு சொல் வழக்கே இந்திய கிரிக்கெட்  பற்றி உலவுகிறது. சாதாரண சிறுவர் விளையாட்டாக இங்கிலாந்தில் உருவானது கிரிக்கெட். கால்நடை  மேய்க்கும் சிறுவர்கள்தான் இந்த விளையாட்டுக்கும் பிதாமகர்கள். ஆட்டு மந்தையை  அடைத்து வைக்கும் இடத்துக்கு குச்சிகளால் ஆன வாசல் ஒன்றை வைத்திருப்பார்கள். அந்த  வாசல் கதவு விக்கெட் கேட் என அழைக்கப்பட்டது. அந்த விக்கெட் கேட்தான் ஸ்டம்பாக  மாறி இன்றைய கிரிக்கெட் பிறந்தது என சொல்லப்படுகிறது. பழங்கால ஆங்கிலச்  சொல்லான cricc என்பது குச்சி என்பதைத்தான் குறிக்கிறது. கிரிக்கெட் விளையாட்டில் ஒவ்வொரு அணிக்கும் 11 வீரர்கள் உண்டு. இருப்பினும் பேட்டிங்  செய்யும் போது இரண்டு வீரர்கள் மட்டுமே களத்தில் இருப்பார்கள். எதிரணி வீரர்கள் 11  பேரும் அவர்களை சூழ்ந்திருப்பார்கள். கடினமான பந்து ஒன்று ஸ்டம்பை நோக்கி  எறியப்படும். அதனைத்தடுப்பதும் தொலை தூரத்துக்கு தூக்கி அடிப்பதும்தான் கிரிக்கெட்  விளையாட்டின் சுவாரஸ்யம். அந்த முயற்சியின் போது பந்து ஸ்டம்பை பதம் பார்த்தாலோ  மட்டையில் பட்ட பந்து நேரடியாக எதிரணியினரின் கைகளில் பிடிபட்டாலோ ஆட்டக்காரர் ஆட்டமிழப்பார். கிரிக்கெட்டிலும் பல வகைகள் உள்ளன. ஐந்து நாட்கள் நடைபெறும் டெஸ்ட் கிரிக்கெட்,  ஐமபது ஓவர்கள் மட்டும் பந்து வீசப்படும் ஒருநாள் கிரிக்கெட், 20 ஓவர்கள் வீசப்படும் 20/20  கிரிக்கெட் போன்றவை அவற்றில் பிரபலமானவை. சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்  போட்டிகளில் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை உலகக் கோப்பை நடைபெறுகிறது.  கிரிக்கெட்டை நேசிக்கும் நாடுகளில் அந்த உலகக் கோப்பையை கைப்பற்றுவது பெரும்  கவுரவமாகக் கருதப்படுகிறது. ஐந்து முறை அந்தக் கோப்பையை வென்று ஆஸ்திரேலியா  முதலிடத்தில் உள்ளது. இந்தியா 1983ல் ஒருமுறையும் 2011ஆம் ஆண்டில் இன்னொரு  முறையும் கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்றிருக்கிறது. கிரிக்கெட்டை கண்டுபிடித்ததாகச் சொல்லிக்கொள்ளும் இங்கிலாந்து மட்டும் இதுவரை  ஒருநாள் போட்டி உலகக் கோப்பையை வெல்லவில்லை என்பதுதான் வருத்தமான நிஜம்.

1 - கால்பந்து : ரசிகர்கள் 350 கோடி

உலகம் முழுவதும் சுமார் 350 கோடி மக்கள் கால்பந்து ரசிகர்களாக  இருக்கிறார்கள். உலக மக்கள் தொகையில் இது கிட்டத்தட்ட பாதி. கால்பந்து விளையாட்டு சீனாவில் உருவானதாகச் சொல்கிறார்கள். கால்பந்துக்கு  பெயர்க்காரணம் தேவையில்லை. பந்தை கால்களால் உதைப்பது கால்ப்பந்து. ஆனால் இந்த  விளையாட்டில் தலை, மார்பு என உடலின் மற்ற பகுதிகளைக் கொண்டும் பந்தைத்  தட்டலாம். கைகளால் மட்டும் தொடக் கூடாது. அவ்வளவுதான். இதே கால்பந்து போட்டி அமெரிக்கா மற்றும் கனடாவில் சாக்கர் என அழைக்கப்படுகிறது.  பெயர்தான் மாறுகிறதே தவிர, விதிமுறைகளில் மாற்றமே இல்லை. ஒரு அணிக்கு 11 பேர்  முதல் 18 பேர் வரை கால் பந்து மைதானத்தில் மோதுவார்கள். காற்றடைத்த பந்து ஒன்றை  கால்களால் தட்டி விரட்டிச் சென்று எதிரணியினரைத் தாண்டி கோல் போட வேண்டும்.  அதிக கோல் போடும் அணிக்கே வெற்றி. கால்பந்தில் பயன்படுத்தப்படும் பந்து 28 அங்குலம் சுற்றளவு கொண்டது. கடந்த 120  ஆண்டுகளாக இந்தப் பந்தின் அளவிலும் வடிவத்திலும் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.  கால்பந்து விளையாட்டின் தீவிர ரசிகர்கள் ஜாம்பவான் வீரர்களும் ஐரோப்பிய நாடுகளில்  இருக்கிறார்கள். ஆனால் கால்பந்து விளையாட்டுக்கான பந்து பாகிஸ்தானில்தான் அதிகம்  தயாரிக்கப்படுகிறது. உலக கால்பந்துகளில் 80 சதவீதம் தயாராவது இந்த நாட்டில்தான். அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் கால்பந்து வீரர்கள் ஹாலிவுட் நடிகர்களுக்கு நிகராக  மதிக்கப்படுகிறார்கள். பிரிட்டனைச் சேர்ந்த டேவிட் பெக்கம், பிரேசில் வீரர் நெய்மர்,  போர்ச்சுகல் வீரர் ரொனால்டோ, அர்ஜண்டினாவைச் சேர்ந்த லியோனல் மெஸ்ஸி  போன்றவர்கள் அப்படிப்பட்ட நட்சத்திர அந்தஸ்தைப் பெற்றவர்கள். உலகில் அதிகம் முறை விளையாடப்பட்டதும் கால்பந்துதான். அதிகம் பேரால் பார்க்கப்பட்ட  விளையாட்டும் கால்பந்துதான். குறிப்பாக, கால் பந்து உலகக் கோப்பையான ஃபிஃபா  உலகக் கோப்பை போட்டி, கால்பந்து ரசிகர்களைப் பொறுத்தவரை ஒரு திருவிழாவேதான்.  உலகம் முழுக்க சுமார் நூறு கோடிப் பேர் தொலைக்காட்சி நேரலையில் பார்த்து ரசிக்கும்  விளையாட்டு போட்டி இது மட்டும்தான்.

தொடர்புடைய செய்திகள்

சப்தமில்லாமல் சாதனை படைக்கும் கால்பந்தாட்ட அணி - இந்தியாவிற்கு பெருமை சேர்க்கும் வட சென்னை வீரர்கள்

மெட்ராஸ் திரைப் படத்தில் வரும் இளைஞர்கள் கால்பந்தாட்ட வீரர்கள். வடசென்னையின் அடிதடி கலாச்சாரத்தை மாற்ற முயற்சிக்கும் ஒருவரின் கதை அது. அதை நிஜத்தில் செய்து சாதனை படைக்கும் இளைஞர்களைப் பற்றிய ஒரு தொகுப்பு இது.

526 views

உலக கோப்பை கால்பந்து தொடர் : அடுத்த சுற்றுக்கு முன்னேறியது பெல்ஜியம்

உலக கோப்பை கால்பந்து தொடரில், ரஷ்யாவின் மாஸ்கோவில் நடைபெற்ற லீக் போட்டியில் பெல்ஜியம் அணி அபார வெற்றி பெற்றுள்ளது.

115 views

உலகக் கோப்பை கால்பந்து தொடரில் இன்று 3 லீக் ஆட்டங்கள்

உலகக் கோப்பை கால்பந்து தொடரில் இன்று 3 லீக் ஆட்டங்கள்

366 views

தமது பேச்சால், ஆயிரக்கணக்கான ரசிகர்களை மைதானத்திற்கு வரவழைத்த வீரர்

சமூக வலை தளத்தில், கை கூப்பி அழைப்பு - விராத் கோலி, சச்சின் டெண்டுல்கர் ஆதரவு...

523 views

கால்பந்து: இந்திய கேப்டனின் 100வது போட்டி

இந்திய கால்பந்து அணி கேப்டன் சுனில் செற்றி, தனது 100வது சர்வதேச போட்டியில் இன்று களம் காணுகிறார்

157 views

பிற செய்திகள்

பிசிசிஐ-யிடம் ரூ 447 கோடி நஷ்ட ஈடு கேட்டு பாகிஸ்தான் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி

இந்தியா, பாகிஸ்தான் இடையே கிரிக்கெட் போட்டிகளை நடத்த விரும்பாத இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் 447 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தொடர்ந்த வழக்கை சர்வதேச கிரிக்கெட் வாரியம் தள்ளுபடி செய்தது.

341 views

உலக மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் : பதக்கத்தை உறுதி செய்த மேரி கோம்

மகளிருக்கான உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியின் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியதன் மூலம் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை மேரி கோம், பதக்கத்தை உறுதி செய்தார்.

79 views

பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் - நியூசிலாந்து அணி திரில் வெற்றி

பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 4 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி திரில் வெற்றி பெற்றது.

334 views

உலக ஏ.டி.பி. பைனல்ஸ் தொடர் - சாம்பியன் பட்டம் வென்றார் ஸ்வெரேவ்

உலக ஏ.டி.பி. பைனல்ஸ் தொடரின் சாம்பியன் பட்டத்தை முதல் முறையாக ஜெர்மனியின் இளம் வீரர் ஸ்வெரேவ் கைப்பற்றினார்.

56 views

பெரிய அலைகளில் அலைச்சறுக்கி அசத்தல் - உலக அலைச்சறுக்கு லீக் சாம்பியன்ஷிப் தொடர்

போர்ச்சுகலில் உலக அலைச்சறுக்கு லீக் சாம்பியன்ஷிப் நடைபெற்றதை தொடர்ந்து, பெரிய அலைகளில் அலைச்சறுக்கி வீரர்கள் அசத்தினர்.

81 views

விமான சாகச போட்டி - வானில் சீறிப் பாய்ந்த விமானங்கள்

அமெரிக்காவின் டெக்ஸாஸ் பிராந்தியத்தில் உள்ள போர்ட் வொர்த் நகரில் ரெட் புல் உலக விமான சாகச போட்டி நடைபெற்றது.

9 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.