கூட்டணியில் தொடரும் திக்.. திக்... ஈபிஸ்ஸிடம் பேச போகும் அமித்ஷா - வெளியான முக்கிய அறிவிப்பு
தமிழக முன்னாள் முதல்வர் அண்ணாதுரை பற்றி தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறிய கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை என்று அதிமுக கடந்த வாரம் அறிவித்தது. இந்நிலையில், பாஜக மேலிடத் தலைவர்களை சந்திப்பதற்காக, அதிமுக மூத்த தலைவர்களான எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, சி.வி சண்முகம் உள்ளிட்டோர் டெல்லியில் முகாம் இட்டனர். அவர்கள், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திப்பார்கள் என்று கூறப்பட்ட நிலையில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயலை சந்தித்தனர். அப்போது, பாஜகவுடனான கூட்டணியை முறித்து கொள்ளும் முடிவை எடுத்ததற்கான காரணங்களை பியூஷ் கோயலிடம் அதிமுக தலைவர்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது. மேலும் விரைவில் நடைபெறவிருக்கும் அதிமுக செயற்குழுவில், கூட்டணி முறிவு குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர். அவர்களை சமாதானப்படுத்திய பியூஷ் கோயல், சில நாட்கள் பொறுமை காக்குமாறும், பிரதமரை சந்திப்பதற்கு விரைவில் ஏற்பாடு செய்வதாகவும் தெரிவித்ததாக கூறப்படுகிறது. மேலும், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியிடம் உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசவிருப்பதாகவும் அவர்களிடம் பியூஷ் கோயல் கூறியதாக தெரிகிறது.
