முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வழக்கில் நடப்பது என்ன?

மோசடி வழக்கில் முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக லுக் அவுட் விடுக்கப்பட்டுள்ள நிலையில், இவ்வழக்கு கடந்து வந்த பாதையை காணலாம்.
x
முந்தைய அதிமுக ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக இருந்தவர் ராஜேந்திர பாலாஜி. அவரும், அதிமுக பிரமுகர் விஜய நல்லதம்பி மற்றும் மாரியப்பன் என்பவரும் தனது உறவினருக்கு வேலை வாங்கி தருவதாக 30 லட்சம் ரூபாய் வாங்கிவிட்டு ஏமாற்றிவிட்டதாக சாத்தூரை சேர்ந்த ரவீந்திரன் என்பவர் போலீசில் புகார் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து விஜய நல்லதம்பியும், ராஜேந்திர பாலாஜி தன்னிடம் 3 கோடி ரூபாய்க்கு மேல் வாங்கி ஏமாற்றிவிட்டதாக பரபரப்பு புகாரை தெரிவித்தார். 

இந்த இரு புகார்கள் அடிப்படையில் ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கடந்த நவம்பர் 15 ஆம் தேதி 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.  இதனையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ராஜேந்திர பாலாஜி முன்ஜாமீன் மனுவை தாக்கல் செய்தார். 

கடந்த 17 ஆம் தேதி காலை திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் விருதுநகரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துக் கொண்டார். அன்றைய தினம் காலை 11 மணிக்கு ஜாமீன் மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்யவும் தலைமறைவானார். அன்று மாலை அவரை கைது செய்வதற்காக 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

அன்று இரவு ராஜேந்திர பாலாஜியின் சகோதரி மகன்கள் இருவர் மற்றும் கார் ஓட்டுநரிடம் திருத்தங்கல் காவல்நிலையத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
  
18 ஆம் தேதி ராஜேந்திர பாலாஜியை கைது செய்ய மேலும் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டன அன்று மதியம் மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்தில் நடந்த விசாரணைக்குப் பின் ராஜேந்திர பாலாஜியின் சகோதரி மகன்களும், கார் ஓட்டுநரும் விடுவிக்கப்பட்டனர்.  

கடந்த 19 ஆம் தேதி ஒரு தனிப்படை பெங்களூருவில் முற்றுகையிட்ட நிலையில், ராஜேந்திர பாலாஜியின் உறவினர்கள், நண்பர்கள் நெருங்கிய அதிகாரிகளின் செல்போன்களை சைபர் கிரைம் போலீசார் ஆய்வு செய்தனர்.

கடந்த 20 ஆம் தேதி கூடுதலாக 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, திருப்பதிக்கும், பாண்டிச்சேரிக்கும் அனுப்பப்பட்டது. 

கடந்த 21 ஆம் தேதி ஒரு தனிப்படை கேரளாவிற்கு விரைந்தது. புதன் கிழமை ராஜேந்திர பாலாஜியை பிடிக்க மதுரை, தென்காசி பகுதிகளில் தனிப்படையினர் ஆய்வை மேற்கொண்டனர். இவ்வாறு 8 தனிப்படைகள் அவரை தேடி வரும் நிலையில்தான், காவல்துறை  அவருக்கு எதிராக லுக் அவுட் நோட்டீசை பிறப்பித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்