முதல்வர் பதவி - 4வது முறையாக எடியூரப்பா ராஜினாமா

கர்நாடக முதல்வர் பதவியில் இருந்து ராஜினாமா செய்திருக்கிறார், எடியூரப்பா. அவரது கடந்த கால அரசியல் வாழ்க்கை குறித்து பார்க்கலாம்..
x
கர்நாடக மாநில முதலமைச்சர் எடியூரப்பா, தனது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். அவர் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்வது இது முதல் முறையல்ல. 2007ம் ஆண்டு நவம்பர் 12ம் தேதி முதன்முறையாக முதல்வர் அரியணையில் அமர்ந்தார் எடியூரப்பா. ஆனால், கூட்டணிக் கட்சியான மதசார்பற்ற ஜனதா தளம் ஒத்துழைப்பு தராததால், ஒரு வாரத்திலேயே அவர் ராஜினாமா செய்ய நேர்ந்தது. பின்னர், 2008ல் மீண்டும் கர்நாடக முதல்வராகிய எடியூரப்பா, 3 ஆண்டுகள் ஆட்சியை நகர்த்தினார். அதற்குள் ஊழல் வழக்கு, சிறைவாசம், கட்சி மேலிட அழுத்தம் என மறுபடியும் ராஜினாமா செய்தார். 2018ல் நடந்த சட்டப்பேரவை தேர்தலில், பாஜக, காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளம் என எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாத நிலை ஏற்பட்டது. இருந்தபோதும், 104 தொகுதிகள் என்ற தனிப் பெரும்பான்மை அந்தஸ்துடன் ஆட்சியைப் பிடித்த எடியூரப்பா, உச்சநீதிமன்றம் விதித்த கெடுவுக்குள் பெரும்பான்மையை நிரூபிக்காததால், 3 நாட்களில் பதவியை ராஜினாமா செய்தார்.

பிறகு, 2019ல் மதசார்பற்ற ஜனதா தளம் ஆட்சி கவிழ்ந்ததை அடுத்து, ஜூலை 26ல் 4வது முறையாக முதல்வராக பதவியேற்றார் எடியூரப்பா. ஆனால், உட்கட்சிப் பூசல் இதையும் நீடிக்க விடவில்லை. இதைத் தொடர்ந்து, வயது மூப்பு காரணமாக, ஏற்கனவே உறுதி அளித்ததைப் போல, ஆட்சியமைத்து இரண்டு ஆண்டு நிறைவடைந்ததும் தனது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார் எடியூரப்பா. 4 முறை முதல்வர் ஆகியும், ஒருமுறை கூட முழுமையாக ஆட்சிக் காலத்தை நிறைவு செய்ய முடியாத துரதிஷ்ட வரலாறு, எடியூரப்பாவின் அரசியல் பக்கங்களில் எழுதப்பட்டிருக்கிறது.

Next Story

மேலும் செய்திகள்