அமைச்சக துறைகளின் பெயர் மாற்றம் ஏன்? - மு.க.ஸ்டாலின் விளக்கம்

மக்களின் எதிர்பார்ப்பு, எதிர்கொள்ளும் சவால்கள், இலக்குகள், அரசின் லட்சியங்கள் ஆகியவற்றை கருத்தில்கொண்டு தொலைநோக்குப் பார்வையுடன் அமைச்சகங்கள், துறைகளின் பெயர் மாற்றம் செய்யப்படுவதாக முதலமைச்சராக பொறுப்பேற்றகவுள்ள மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
x
மக்களின் எதிர்பார்ப்பு, எதிர்கொள்ளும் சவால்கள், இலக்குகள், அரசின் லட்சியங்கள் ஆகியவற்றை கருத்தில்கொண்டு  தொலைநோக்குப் பார்வையுடன் அமைச்சகங்கள், துறைகளின் பெயர் மாற்றம் செய்யப்படுவதாக முதலமைச்சராக பொறுப்பேற்றகவுள்ள மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழகத்தின் நீர்த் தேவையை நிறைவுசெய்யும் வகையில், 'நீர்வளத் துறை' அமைச்சகம் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், விவசாயிகளுக்கு தங்குதடையின்றி நீர் கிடைக்கவும், நிலத்தடி நீரை பெருக்கவும், நீர்நிலைகளைத் தூர்வாரி, ஆக்கிரமிப்புகளை அகற்றவும் முக்கியத் துறையாகச் செயல்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

வேளாண்மைத் துறை என்கிற அமைச்சகம் 'வேளாண்மை - உழவர் நலத்துறை' என்று பெயர் மாற்றம் செய்யப்படுவதாக கூறியுள்ள ஸ்டாலின், இந்த துறை சாகுபடியைப் பெருக்குவது மட்டும் அல்லாமல், உழவர் நலன் காக்க தொலைநோக்குப் பார்வையையும், திட்டங்களையும் உள்ளடக்கி செயல்படும் என்று தெரிவித்துள்ளார்.

சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் 'சுற்றுச்சூழல் - காலநிலை மாற்றத் துறை' என்று பெயர்மாற்றம் செய்யப்படுவதாகவும், கால நிலை மாற்றத்தால் ஏற்படக்கூடிய சுற்றுச்சூழல் தொடர்பான எச்சரிக்கைகளையும், விழிப்புணர்வு பரப்புரைகளையும் இந்த அமைச்சகம் செயல்படுத்தும் என்று விளக்கமளித்துள்ளார்.

மக்கள் நல்வாழ்வுத் துறை என்பது மருத்துவத்தையும் உள்ளடக்கியது என்பதாலும், சுகாதாரம் என்பது துப்புரவை மட்டுமே குறிப்பது என்பதாலும்... அத்துறைக்கு 'மருத்துவம் - மக்கள் நல்வாழ்வுத் துறை' என்று பெயர் சூட்டப்படுவதாக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மீனவர்கள் நலமில்லாமல் மீன்வளத்தைப் பெருக்கி பயனில்லை என்பதாலும், மீனவர்களுக்கான திட்டங்களை வடிவமைத்துச் செயல்படுத்த வேண்டும் என்பதாலும் மீன்வளத்துறை 'மீன்வளம் - மீனவர் நலத் துறை' என்று அழைக்கப்படும் என்று கூறியுள்ளார்.

தொழிலாளர் நலத்துறையின் செயல்பாடுகள் காலப்போக்கில் மாறி இப்போது திறன்களை மேம்படுத்த வேண்டிய கட்டாயத்தையும் உள்ளடக்கி இருப்பதால், 'தொழிலாளர் நலன் - திறன் மேம்பாட்டுத் துறை' என்று பெயரிடப்படுவதாகவும், செய்தி என்பதிலேயே அத்துறையின் செயல்பாடான மக்கள் தொடர்பும் அடங்கியிருப்பதால், செய்தி- மக்கள் தொடர்புத் துறை 'செய்தித் துறை'யாக உருமாற்றம் அடைவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

சமூக நலத்துறை என்பது பெண்களுக்கு உரிமை வழங்குகிற பல்வேறு செயல்பாடுகளை உள்ளடக்கிய துறை என்பதால் 'சமூக நலன் - மகளிர் உரிமைத் துறை' என்று மாற்றப்பட்டிருப்பதாகவும், பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை 'மனித வள மேலாண்மைத் துறை' என்றும், வெளிநாடு வாழ் இந்தியர்கள் என்கிற துறை வெளிநாடு வாழ் தமிழர் நலன் என்று என்று பெயர் மாற்றம் அடைவதாகவும் ஸ்டாலின் கூறியுள்ளார்,. இவை எல்லாம் வெறும் பெயர் மாற்றமாக இல்லாமல் செயல்பாட்டிலும் மிகப் பெரிய மாற்றங்களைத், திட்டங்களாகக் கொண்டு செயல்படத் தூண்டுகோலாக இருக்கும் என்றும் உறுதியளித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்