திட்டமிட்டு பணியாற்றும் பாஜக - மம்தாவின் கோட்டையை கைப்பற்றுமா?

மேற்கு வங்கத்தை பொன்னான பூமியாக மாற்றுவோம் என களமிறங்கியிருக்கும் பாஜக, மம்தாவின் கோட்டையை கைப்பற்றுமா?...பார்க்கலாம் இந்த தொகுப்பில்...
திட்டமிட்டு பணியாற்றும் பாஜக - மம்தாவின் கோட்டையை கைப்பற்றுமா?
x
தமிழகம் உள்பட 5 மாநிலங்களில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தல் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தாலும், தேசிய அளவில் ஒட்டுமொத்த கவனத்தையும் தன் பக்கம் ஈர்க்கிறது, மேற்கு வங்கம்.... இடதுசாரிகளின் கோட்டையாக விளங்கிய மாநிலம்,  மம்தாவின் கோட்டையாக மாறியிருக்கிறது. இப்போது இக்கோட்டையில் காவிக் கொடியை பறக்கவிட தீவிரமாக செயல்படும் பாஜக, மேற்கு வங்கத்தை பொன்னான பூமியாக மாற்றிக்காட்டுவோம் என சூளுரைத்து களத்தில் குதித்துள்ளது. 2019 நாடாளுமன்ற தேர்தலில் மாநிலத்தில் 40.64 சதவீத வாக்குகளை பெற்ற பாஜக 18 இடங்களை கைப்பற்றியது. இந்த உற்சாகத்தில் 294 இடங்களை கொண்ட சட்டப்பேரவையில் 200 இடங்களுக்கு மேல் பிடிக்க வேண்டும் என மத்திய அமைச்சர் அமித்ஷா தீவிர பிரசாரங்களை மேற்கொண்டு வருகிறார். ஆனால் இதுவரை, வடக்கு மேற்கு வங்கத்தில் பாஜக வெற்றிக்கு பக்கபலமாக இருந்த கூர்கா ஜன்முக்தி மோர்ச்சா, தற்போகு பாஜக கூட்டணியில் இல்லை. இது பாஜகவுக்கு பலவீனமாகவே பார்க்கப்படுகிறது. 54 தொகுதிகளில் செல்வாக்கை கொண்டிருக்கும் கூர்கா ஜன்முக்தி மோர்ச்சா இம்முறை மம்தாவுடன் கைகோர்த்துள்ளது.

இருப்பினும் திரிணாமுல் காங்கிரசின் முக்கிய நிர்வாகியாக இருந்த சுவேந்து அதிகாரி மற்றும் பிற மூத்த தலைவர்கள் வருகை மற்ற பகுதிகளில் பாஜகவுக்கு கூடுதல் பலத்தை கொடுத்திருக்கிறது. வேட்பாளர் தேர்விலும் கட்சிதமாக காய் நகர்த்தும் பாஜக, நந்திகிராமில் மம்தாவுக்கு எதிராக சுவேந்து அதிகாரியை வேட்பாளராக்கியது. மத்திய அமைச்சாராக இருக்கும் பாபுல் சுப்ரியோவை, டோலி கஞ்ச் தொகுதியில் களமிறக்கியுள்ளது, பாஜக... மேலும் எம்.பி.க்களாக இருக்கும் நிஷித் பர்மாணிக், லாக்கட் சாட்டர்ஜியையும் வேட்பாளராக அறிவித்துள்ளது. வளர்ச்சியென்ற தாரக மந்திரத்தை முதன்மையாக நிறுத்தி வாக்கு சேகரித்து வரும் பாஜக, மத்திய அமைச்சர்கள், பிற மாநில பாஜக முதல்வர்களையும் பிரசாரத்தில் களமிறக்கியுள்ளது. மேற்கு வங்கத்தில், பிரதமர் மோடி, அமித்ஷாவின் பிரசாரங்களில் கூட்டம் அலைமோதுகிறது. அவர்களுக்கு கூடும் கூட்டம் வாக்கு வங்கியாக மாறுமா? என்ற கேள்வி எழுந்தாலும்... வாக்கு வங்கியாக்க மாற்றிக்காட்டுவோம் எனக் களத்தில் உழைக்கிறது பாஜக....

இருப்பினும் 34 ஆண்டுகாலம் ஆட்சி செய்த இடதுசாரிகளை வீட்டுக்கு அனுப்பிய மம்தாவையும் குறைத்து மதிப்பிட்டுவிட முடியாது. கிராமபுற மக்கள், பெண்கள் மத்தியில் தனக்கென தனி செல்வாக்கை கொண்டிருக்கிறார் மம்தா. ஆனால் எது எப்படியிருந்தாலும் சரி... இம்முறை எப்படியும் மம்தாவின் கோட்டையை கைப்பற்றிவிட வேண்டும் என அயராது உழைக்கும் பாஜகவுக்கு வெற்றி கிட்டுமா....? என்பது மே 2-ல் மேற்கு வங்க மக்கள் வழங்கும் தீர்ப்பில் தெரிந்து விடும்....

Next Story

மேலும் செய்திகள்