மீண்டும் அரியணையில் ஆம் ஆத்மி...

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் அபார வெற்றி பெற்று ஆம் ஆத்மி மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கிறது.
மீண்டும் அரியணையில் ஆம் ஆத்மி...
x
மொத்தமுள்ள 70 தொகுதிகளில் ஆம் ஆத்மி கட்சி 62 இடங்களிலும், பாஜக 8 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், துணை முதல்வர் மணிஷ் சிசோடியா உள்ளிட்ட நட்சத்திர வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். அதேசமயம், பாஜக சார்பில் போட்டியிட்ட முக்கிய வேட்பாளர்களான கபில் மிஸ்ரா, காங்கிரஸ் வேட்பாளர் ஆல்கா லம்பா உள்ளிட்டோர் தோல்வியடைந்துள்ளனர். புதுடெல்லி தொகுதியில் போட்டியிட்ட அரவிந்த் கெஜ்ரிவால், தம்மை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் சுனில் யாதவை விட, 21 ஆயிரத்து 697 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். பட்பர்கஞ்ச் தொகுதியில் துணை முதல்வர் மணிஷ் சிசோடியா, கடும் போட்டிக்கு பிறகு, பாஜக வேட்பாளர் ரவி நேகியை விட சுமார் 2 ஆயிரத்து 73 வாக்கு கூடுதலாக பெற்று வெற்றி பெற்றார். விஸ்வாஸ் நகர் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட டெல்லி சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரான ஓ.பி.ஷர்மா, ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர் தீபக் சிங்கிளாவை விட 16 ஆயிரத்து 457 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். ஆம் ஆத்மி கட்சியில் இருந்து விலகி காங்கிரஸில் இணைந்து போட்டியிட்ட நட்சத்திர வேட்பாளரான அல்கா லம்பா தோல்வி அடைந்தார். முஸ்லிம்கள் அதிகம் உள்ள ஓக்லா உள்ளிட்ட 5 க்கும் மேற்பட்ட தொகுதிகளில் இந்த முறையும் ஆம் ஆத்மி கட்சியே அபார வெற்றியை பெற்றுள்ளது. இந்த தேர்தலில் பாஜக தோல்வி அடைந்த போதும் முந்தைய தேர்தலை விட தமது வாக்கு சதவீதத்தை கணிசமாக உயர்த்தி உள்ளது. மொத்தம் பதிவான வாக்குகளில் ஆம் ஆத்மி 53 புள்ளி 7 சதவீத வாக்குகளையும், பாஜக 38 புள்ளி 5 சதவீத வாக்குகளையும்,  காங்கிரஸ் 4 சதவீத வாக்குகளையும் பெற்றுள்ளது. கடந்த தேர்தலை விட இந்த முறை பாஜகவின் வாக்கு சதவீதம், சுமார் 6 சதவீதம் அதிகரித்துள்ளது. இதுவரை இல்லாத அளவுக்கு மிகக் குறைந்த அளவாக காங்கிரஸ் வாக்கு 5 சதவீதத்திற்கும் கீழே சென்றுள்ளது. 66 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் 63 இடங்களில் டெபாசிட்  இழந்துள்ளது. இது காங்கிரஸ்-க்கு பெரும் நெருக்கடியையும் பின்னடைவையும் ஏற்படுத்தியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்