குற்ற வழக்குகளை எதிர்கொண்டிருக்கும் 22 மத்திய அமைச்சர்கள்...

மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள 56 மத்திய அமைச்சர்களில் 51 பேர் கோடீஸ்வரர்கள்.
x
மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள 56 அமைச்சர்களில் 22 பேர் குற்ற வழக்குகளை எதிர்கொண்டுள்ளதாக ஜனநாயக சீர்திருத்தத்துக்கான சங்கம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்களவை தேர்தலின் போது வேட்புமனுவுடன் தாக்கல் செய்யப்பட்ட பிரமாண பத்திரங்களில் கூறப்பட்டுள்ள விவரங்களை ஆய்வு செய்த ஜனநாயக சீர்திருத்தத்துக்கான  சங்கம், 39 சதவீத மத்திய அமைச்சர்கள் மீது குற்ற வழக்குகள் உள்ளதாக கூறியுள்ளது. 

16 அமைச்சர்கள் மீது கொலை முயற்சி, மத நல்லிணக்கத்துக்கு ஊறு விளைவித்தல், இரு பிரிவினருக்கு இடையில் விரோதத்தை ஏற்படுத்துதல் போன்ற குற்ற வழக்குகள் உள்ளன. மத்திய உள்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள அமித்ஷா மீதும் நான்கு வழக்குகள் நிலுவையில் உள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அமைச்சரவையில் 51 கோடீஸ்வரர்கள் இடம் பிடித்துள்ளதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. சிரோன்மணி அகாலிதளம் கட்சியின் எம்.பி.,யும், உணவு பதப்படுத்துதல் துறை அமைச்சருமான ஹர்சிம்ரத் கவுர் பாதல்,  217 கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் கோடீஸ்வர அமைச்சர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். ஒடிசா மாநிலம் பாலாசோர் தொகுதியில் இருந்து பா.ஜ., எம்.பி.,யாக தேர்வாகி, சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை இணை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள பிரதாப் சந்திர சாரங்கி, 13 லட்சம் ரூபாய் சொத்துக்களுடன், குறைந்த சொத்துக்கள் கொண்ட அமைச்சராக இடம் பிடித்திருக்கிறார். 8 அமைச்சர்கள், 10 முதல் 12ம் வகுப்பு வரை படித்துள்ளனர். 47 அமைச்சர்கள் பட்டப்படிப்பும், மேற்படிப்பும் முடித்துள்ளனர். ஒருவர் டிப்ளமோ படித்துள்ளார் என தெரிய வந்துள்ளது. 11 அமைச்சர்கள் 41 முதல் 50 வயதுடையவர்கள் எனவும், 17 அமைச்சர்கள் 51 முதல் 60 வயதுடையவர்கள் எனவும், 28 அமைச்சர்கள் 61 முதல் 70 வயதுடையவர்கள் என்பதும் ஜனநாயக சீர்திருத்தத்துக்கான சங்கத்தின் அறிக்கை மூலம் தெரிய வந்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்