விழுப்புரம் தொகுதி அதிமுக எம்.பி.ராஜேந்திரன் சாலை விபத்தில் மரணம்...

திண்டிவனம் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் விழுப்புரம் தொகுதி அ.தி.மு.க. எம்.பி. ராஜேந்திரன் உயிரிழந்தார். அவருக்கு வயது 62.
x
விழுப்புரம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ராஜேந்திரன் திண்டிவனம் அருகே ஜக்கம்பேட்டையில் உள்ள சுற்றுலா மாளிகையில் நேற்று தங்கியிருந்தார். இன்று காலை அவர், காரில் சென்னை நோக்கி  புறப்பட்டார்.  திண்டிவனம் அருகே சாலை தடுப்பு சுவர் மீது மோதி கார் விபத்துக்குள்ளானதில் படுகாயம் அடைந்த ராஜேந்திரன்  . மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.  கார் ஓட்டுனர் அன்பு செல்வன், உறவினர் தமிழ்செல்வம் ஆகியோர் படுகாயமடைந்தனர். இருவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதனிடையே, ராஜேந்திரன் உடல் பிரேத பரிசோதனைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. சட்டத்துறை அமைச்சர் சண்முகம், மருத்துவமனைக்கு சென்று ராஜேந்திரனின் உறவினர்களுக்கு ஆறுதல் கூறினார்.  விபத்தில் உயிரிழந்த எம்.பி., ராஜேந்திரனுக்கு சாந்தா என்ற மனைவியும், திவ்யா, தீபிகா என்ற மகள்களும், விக்னேஸ்வரன் என்ற மகனும் உள்ளனர். 

அ.தி.மு.க. எம்.பி. ராஜேந்திரன் மறைவு : முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல்...

ராஜேந்திரன் உயிரிழந்தார் என்ற செய்தியை கேட்டு தாம் மிகுந்த மனவேதனையும், துயரமும் அடைந்ததாக முதலமைச்சர், வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.  கட்சியில் பல பொறுப்புகளை வகித்துள்ள ராஜேந்திரன் மக்கள் நலனுக்காக பாடுபட்டவர் என்று குறிப்பிட்டுள்ள முதலமைச்சர், ராஜேந்திரன் மறைவு அதிமுகவுக்கு பேரிழப்பாகும் என்று தெரிவித்துள்ளார். ராஜேந்திரன் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதாக முதலமைச்சர் பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.அ.தி.மு.க. எம்.பி. ராஜேந்திரன் மறைவு - பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் இரங்கல்...

அதிமுக எம்.பி. ராஜேந்திரன் மறைவுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளார். சாலை விபத்தில் ராஜேந்திரன் உயிரிழந்தார் என்று அறிந்து தாம் பெரும் துயரம் அடைந்ததாக ராமதாஸ் வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில் தெரிவித்துள்ளார். இராஜேந்திரனை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் ராமதாஸ் தெரிவித்துள்ளார். 

அ.தி.மு.க.  எம்.பி. ராஜேந்திரன் மறைவு : சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் இரங்கல்...

அதிமுக எம்.பி. ராஜேந்திரன் மறைவுக்கு சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் இரங்கல் தெரிவித்துள்ளார். அவரது ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்பதாக தமது இரங்ல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்