"இன்று புதிதாக பிறந்திருக்கிறேன்" - திமுக தலைவராக பொறுப்பேற்ற ஸ்டாலின் பேச்சு...

தி.மு.க. தலைவராக அறிவிக்கப்பட்ட ஸ்டாலின் ஏற்புரையாற்றும்போது, தான் இன்று புதிதாக பிறந்திருப்பதாக குறிப்பிட்டார். தொண்டர்களின் விருப்பத்திற்கேற்ப தாம் செயல்பட இருப்பதாக கூறிய ஸ்டாலின், எதையும் முயன்று பார்க்கும் துணிச்சல் தனக்கு இருப்பதாக தெரிவித்தார்.
இன்று புதிதாக பிறந்திருக்கிறேன் - திமுக தலைவராக பொறுப்பேற்ற ஸ்டாலின் பேச்சு...
x
திமுக தலைவர் கருணாநிதி மறைவுக்கு பிறகு, அக்கட்சியின் பொதுக்குழு கூட்டம் முதல்முறையாக, சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெற்றது. இதில் திமுகவின் 65 மாவட்ட செயலாளர்கள் மற்றும் பொதுக்குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். கூட்டம் தொடங்கியதும், மேடையில் அமர்ந்திருந்த அக்கட்சியின் பொதுச்செயலாளர் க.அன்பழகன், கட்சியின் தலைவர் மற்றும் பொருளாளர் பதவிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கான அறிவிப்பை வெளியிட்டார். அப்போது, திமுக தலைவராக, செயல் தலைவர் ஸ்டாலினும், பொருளாளர் பதவிக்கு துரைமுருகனும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்படுவதாக, அறிவித்தார். அப்போது, திமுகவினர் கைதட்டியும், கரகோஷம் எழுப்பியும் வரவேற்றனர். இதனைத் தொடர்ந்து, ஸ்டாலினுக்கு, கட்சியின் முன்னணி தலைவர்களும், நிர்வாகிகளும் கைகொடுத்து வாழ்த்து தெரிவித்தனர். அவர்களது வாழ்த்துக்களை ஏற்றுக்கொண்ட அவரை, கட்சியினர் மேடைக்கு அழைத்துச்சென்றனர். அங்கு அண்ணா மற்றும் கருணாநிதியின் உருவப்படங்களுக்கு ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

'என் உயிரினும் மேலான' என கருணாநிதி பாணியில் உரையை தொடங்கினார் திமுக தலைவர் ஸ்டாலின். 

* கருணாநிதி போல் மொழி ஆளுமை தனக்கு கிடையாது.

* திமுக தலைவராக நான் பொறுப்பேற்றதை பார்க்க கருணாநிதி இல்லையே என்பதே எனது ஒரே குறை.

* திமுகவின் கனவை நிறைவேற்ற இன்று புதிதாய் பிறந்திருக்கிறேன்.

* "நான் கருணாநிதியில்லை...அவரை போல் பேச தெரியாது".

* இன்று நான் புதிதாய் பிறந்தேன், "நீங்கள் பார்க்கும்... கேட்கும் ஸ்டாலின் வேறொருவன்"

* தமிழக மக்களின் நலனுக்காக உழைப்பேன்.

* "எனது பெரியப்பா பேராசிரியர் அன்பழகன், பெரியப்பாவிடம் நல்ல பெயர் பெறுவது 200 மடங்கு சமம்"

* "இந்தியா முழுவதும் காவி வண்ணம் அடிக்க நினைக்கும் மோடி அரசுக்கு  பாடம் புகட்ட வா", "முதுகெலும்பு இல்லாத மாநில அரசை தூக்கி எரிய வா" என திமுக தலைவர் ஸ்டாலின் தொண்டர்களுக்கு வேண்டுகோள்.

திமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

திமுக தலைவராக ஸ்டாலின் அறிவிக்கப்பட்டதும், அறிவாலய வளாகத்தில் திரண்டிருந்த தொண்டர்கள் பட்டாசு  வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் உற்சாகத்தை வெளிப்படுத்தினர்.

திமுகவில் செயல் தலைவர் பதவி நீக்கம் - க.அன்பழகன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

மறைந்த திமுக தலைவர் கருணாநிதி உடல்நலிவுற்று இருந்தபோது, அக்கட்சியின் செயல் தலைவராக கடந்த ஆண்டு ஜனவரி 4ஆம் தேதி ஸ்டாலின் பொறுப்பேற்றார். கட்சிப் பணிகள் தொய்வின்றி நடைபெறும் வகையில் அந்தப்பதவி அப்போது திமுகவில், உருவாக்கப்பட்டது. இந்நிலையில், ஸ்டாலின் தற்போது திமுக தலைவராக பொறுப்பேற்றதை அடுத்து, செயல் தலைவர் என்ற பதவி, நீக்கப்படுவதாக, அக்கட்சியின் பொதுச்செயலாளர் க.அன்பழகன் அறிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்